பத்திரிகையாளர்களுக்கான ஒழுக்கக் கோவையை மீளவும் ஒழுங்கமைப்புச் செய்யவென மேற்கொள்ளப்படவுள்ள முயற்சிகளுக்கு, இலங்கையில் செயற்பட்டுவரும் ஒன்பது ஊடக அமைப்புகளும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த ஒத்துழைப்புக்காக இலங்கை பத்திரிகையாளர் சங்கம் தமது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி ஒழுக்கக் கோவையை மீளமைப்பு செய்யவிருப்பது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மீளமைக்கப்படவுள்ள இந்த ஒழுக்கக் கோவை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.
பத்திரிகை ஒழுக்கக் கோவையானது 2001 ஆம் ஆண்டு ஏகமனதாக தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் முதற்தடவையாக கடந்த பெப்ரவரியில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் மீளவும் ஒழுங்கமைப்புக்கு உட்படுத்தப்பட்டது.
தற்கொலைத் தாக்குதல்களை செய்தியிடல் மற்றும் பத்திரிகை இணையத்தள செய்திகளை பிரசுரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் மீளமைக்கப்பட்ட பத்திரிகை ஒழுக்கக்கோவையை கடைப்பிடிக்கும் முக்கிய ஒன்பது ஊடக அமைப்புகளின் பட்டியலில்,
இலங்கை பத்திரிகை சமூகம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை இதழியல் கல்லூரி, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனம், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகிய அமைப்புகள் உள்ளன.
பத்திரிகைகளில் ஏதேனும் ஒழுக்க மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பொது மக்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதனைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் செயலாளர் ஏற்றுக் கொள்வார்.
செயலாளரின் மத்தியஸ்தத்தின் மூலமோ சமாதான வழியிலோ முறைப்பாடுகளை கையாள முடியாதுபோகும் பட்சத்தில், பிணக்குகளைத் தீர்க்கும் சபை நீதியான வழியில் அதனைத் தீர்க்க முயலும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.