* கருணாநிதியிடம் திருமாவளவன் அவசர கோரிக்கை
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று வியாழக்கிழமையன்று தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழக சட்டப்பேரவையின் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் நெருக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைந்த ராஜீவ் காந்தி முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப் படி இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை ஒரு போதும் பிரிக்கக் கூடாது என உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை அரசு இவ்வொப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அஞ்சல் வழி வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.
இவ்வாறான சூழலில் தான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக, ராஜீவுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக வட கிழக்கு மாகாணத்தை பிரிக்கும் இலங்கையரின் சதியை முறியடித்திட இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் அங்கே நடைபெறவுள்ள தேர்தலை தடுப்பதற்கோ அல்லது தள்ளி வைப்பதற்கோ ஏற்ற வகையில் இந்திய அரசின் தலையீடு தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க-ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் முன் மொழியப்பட்டது.
ஆனால் அதனை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமாக அனுமதிக்கவில்லை என்றாலும் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்ததோடு இந்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான இலங்கை அரசின் முயற்சி தொடர்பாகவும் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாகப் பிரிப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானத்தில் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
எனவே முதல்வர் கலைஞர் வடக்குக் கிழக்கை கூறுபோடும் இலங்கையரின் சதியை முறியடித்திட இந்திய அரசின் தலையீடு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.