* இந்தியா வளங்களை சூறையாட வழி வகுக்கும்; ஜே.வி.பி.எச்சரிக்கை
-ரொஷான் நாகலிங்கம்-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அப்பிராந்தியம் புலிகளின் கைகளுக்கு சென்றுவிடுமெனவும் அதேபோல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்தால் இந்தியாவின் முகவராக செயற்படும் பிள்ளையானிடம் நிர்வாகம் சென்று இந்தியா கிழக்கு வளங்களை சூறையாட வழியேற்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று வியாழக்கிழமை கடுமையாக எச்சரித்தது.
கொழும்பிலுள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஜே.வி.பி.யின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அக்கட்சி எம்.பி.அநுர குமார திசாநாயக்கா, சிகிரியாக் குன்றிலிருந்து கல்லொன்று வீழ்ந்ததைப் போன்றதே விமல் வீரவன்சவின் நிலமையெனவும் ஒரு கல் வீழ்ந்ததால் மலை உடைந்து விட்டதாக கூற முடியாது. அது போலவே ஜே.வி.பி.யின் நிலமையும் எனவும் மக்கள் தமது கட்சி மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
அவர் தமதுரையில் மேலும் கூறியதாவது;
மாகாண சபை உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கை பிரித்து படையினர் கிழக்கை மீட்டதன் பின்னர் அதாவது 1989 இற்குப் பின்னர் தற்போது மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, அரசியல் அங்கம் கட்சிகளின் கூட்டமைப்பு எமது கட்சியென நாட்டின் முக்கிய மூன்று தேசிய கட்சிகள் இதில் போட்டியிடுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகின்ற அதேநேரம், அரசாங்கம் அதாவுல்லா, பேரியல் அஷ்ரப், ஹிஸ்புல்லா, ஹெல உறுமய மற்றும் பிள்ளையானுடன் பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில் கிழக்கு வளங்களை பாதுகாப்பதற்கு நாமும் போட்டியிடுகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிடுகின்றார். அரசாங்கம் தவிர்ந்த வடக்கு, கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்ற தனிப்பட்ட நபரொருவராக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்தவர் ரவூப் ஹக்கீம்,இவருக்கு வாக்களிப்பின் கிழக்கு வடக்குடன் இணைக்கப்பட்டு புலிகளின் கைகளுக்கு செல்வதற்கே வழிவகுக்கும்.
அதுபோல் அரசின் பாரிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பின் பிள்ளையானே முதலமைச்சராக வருவார். இவர் இந்தியாவின் முகவராக தொழிற்படுவார். கிழக்கு வளம் நிறைந்த பூமி. இந்நிலையில் அவ்வளங்களை சூறையாடுவதற்கு இந்தியா பிள்ளையானை முதலமைச்சராக்கப் பார்க்கின்றது.
கிழக்கின் சம்பூருக்கு எவரும் செல்லமுடியாது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் உட்பட அமைச்சர்கள் கூட அங்கு செல்ல முடியாத நிலையுள்ளது. ஏனெனில், இது இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதேயாகும். அதுபோல் கந்தளாய் சீனி தொழிற்சாலையுட்பட 500 ஏக்கர் நிலப்பரப்பு, சீனக்குடா இறங்குதுறை உட்பட பெருமளவான நிலப்பரப்பு இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் போன்று எவரும் பங்குபற்றாத நிலையில் அரசாங்கம் தனக்கு அதிர்ஷ்ட லாபம் ஏற்படுமென நினைத்து இதனை நடத்த முன்வந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு வளங்களை கொடுப்பதே நோக்கமாகும்.
இந்த இரு கட்சிகளின் நோக்கத்தை முறியடித்து கிழக்கு மக்கள் தமது வளங்களையும் உரிமைகளையும் பாதுகாத்து தமக்கு சேவைசெய்யக் கூடியவரை தெரிவு செய்ய இதற்கு சந்தர்ப்பம் வழங்கு முகமாகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கிழக்கை படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து மரணங்கள், காயங்கள் உட்பட பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் விடுவித்த நிலையில் அதனை இந்தியாவிடம் கையளிக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.
எமது கட்சியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர நியாயமற்ற வகையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளது.
அரசாங்க தரப்பினர் திருகோணமலைக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக செல்ல முடியாத நிலையில், அங்குள்ள மக்களுக்காக அவர் அங்கிருந்து குரல் கொடுத்தவர். பாராளுமன்றத்தில் அம்மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த அவருடைய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் ஜே.வி.பி.யின் தேர்தல் பிரசாரத்தை அரசு தடை செய்யப் பார்க்கிறது.
ஜயந்த விஜயசேகரவை வாகனங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். அவர் எமது கட்சிக்குரிய வாகனத்தையே எடுத்தேன் என திரும்பத் திரும்ப தெரிவித்தும் குற்றத்துக்கான காரணமின்றி தடுத்து வைத்தனர்.
அவரை வேண்டுமென்றே புதுவருடப் பிறப்பின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன், அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டவர்களையும் அவரது ஜீப்பையும் அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது.
எமது உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு படையினரை அரசிடம் நாம் கோராத நிலையில் பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படி அரசிடம் கோரினோம்.இதன் பின்னர் இவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் இழுபறியிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் தெரிவித்து சபாநாயகர் மூலம் பாதுகாப்பை பெற்ற நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் அவரது பாதுகாப்பையும் ஜீப்பையும் வாபஸ் பெற்றதன் மூலம் அவரது வாழ்க்கையுடன் விளையாட முற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஏதேனும் நேரும் பட்சத்தில் அரசாங்கமும் ஜனாதிபதியும் பதில் சொல்ல வேண்டும்.