* வட, கிழக்கை மீண்டும் இணைக்க முயற்சி; ஆளும் கட்சி குற்றச்சாட்டு
நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்கவும் , சர்வதேச சமூகத்தின் தேவையை நிறைவேற்றவும் புலிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் செயற்படுவதாக ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியது.
கிழக்குத் தேர்தலில் ஐ.தே.க.வை வெற்றியடையச் செய்வதற்காக கொழும்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய சந்திப்பொன்றை புலிகளுடன் மேற்கொண்டமை குறித்து அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் முன்னணி மேலும் அறிவித்துள்ளது.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல்களை வெளியிட்ட ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கில் ஜனநாயக சூழலை ஏற்படுத்திய முப்படையினருக்கும் அதற்காக உழைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் .
பிரபாகரனின் பாசிச நிர்வாகத்திலிருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டபின் நடைபெற்ற மட்டு. உள்ளூராட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற்றோம். அதேபோன்று இம்மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
இத்தேர்தலில் ஐ.தே.க. குறைந்தது 2 ஆசனங்களையாவது கைப்பற்றுவதற்கு நாம் அவர்களுக்கு ஆசீர்வதிக்கின்றோம். மக்கள் அமைதியான சூழல் நிலவி பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறார்கள். அம்மக்களின் தேவையை நிச்சயம் எமது அரசாங்கம் நிறைவேற்றும்.
தேர்தலில் எமது வெற்றி உறுதியான நிலையில் பிரிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்கவும் சர்வதேசத்தின் தேவையை நிறைவேற்றவும் ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸும் புலிகளுடன் இணைந்து செயற்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொழும்பில் அண்மையில் புலிகளை சந்தித்துள்ளது. கிழக்குத் தேர்தல் குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐ.தே.க. கூட்டின் பின்னால் புலிகள் செயற்படுவது தெளிவாகிறது என்றார்.
அமைச்சர் சுசில்
இங்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில்;
கிழக்கில் முப்படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களுடன் நடமாடவில்லை. ஆயுதம் சகிதம் தேர்தல் பிரசாரத்தில் எவராவது ஈடுபடுகிறார்களாவென ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸினால் நிரூபிக்க முடியுமாவென இங்கு சவால் விடுக்கிறேன்.
ஐ.தே.க. முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலிகளின் இணைந்த செயற்பாடுகள் குறித்து எமக்குத் தகவல் கிட்டியுள்ளது. இத்தேர்தலில் நாம் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்று ஏனைய மாகாணங்கள் போன்று கிழக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோமென்றார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்கள் பலருடன் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளைத் தெரிவித்தனர்.