* புலிகளின் முதலாவது காவல் நிலை படையினர் வசம்; ஹெகலிய தெரிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
கிளாலி, முகமாலைச் சமரில் இராணுவம் பின்னடைவைச் சந்திக்கவில்லை எனவும் சில சக்திகள் இதனைத் தவறாக பிரசாரப்படுத்த முனைவதாகவும் தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல முகமாலையில் புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலையத்தை படைத்தரப்பு தம்வசப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 196 புலிகள் காயமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத்தகவல்களை அமைச்சர் ரம்புக்வெல்ல வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிகையில் கூறியதாவது:செவ்வாய்க்கிழமை இரவு முகமாலை, கிளாலி பகுதியில் இடம்பெற்ற மோதல்கள் வழமையானது. இதில் பெரிதுபடுத்திக் கூறுவதற்கு எதுவும் கிடையாது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களின் போது புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 81 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 196 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் இராணுவத் தரப்பில் 43 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 38 பேர் காணாமல் போயிருந்தனர். பின்னர் அவர்களில் 5 பேர் திரும்பி முகாம்களுக்கு வந்து சேர்ந்தனர். 33 பேர் மட்டுமே தற்போது காணாமல் போயுள்ளனர். அத்துடன் இராணுவத்தரப்பில் 160 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 32 பேர் சிறிய காயங்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு படை முகாமுக்குத் திரும்பி விட்டனர்.
சில ஊடகங்கள் தெரிவித்திருப்பது போன்று இந்த மோதலில் இராணுவம் பின்னடைவைக் காணவில்லை. புலிகள் படைத்தரப்பின் மீது கடுமையாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், படையினரின் பதிலடியும் காத்திரமானதாகவே இருந்ததால் இறுதியில் புலிகள் பின்வாங்கினர். இச் சந்தர்ப்பத்தில் புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலையத்தை இராணுவம் தம்வசப்படுத்தியது. புலிகள் இரண்டாவது முன்னரங்க காவல் நிலையத்துக்கப்பால் விரட்டப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.