இந்திய ஹொக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்கு இலஞ்சம் வாங்கிய புகார் குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, சர்வதேச ஹொக்கி சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் எல்ஸ் வேன் பிரெடா வெரிஸ்மென் கடிதம் அனுப்பியுள்ளார்.
`ஆஜ் தக்' தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், இந்திய ஹொக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்கு இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜோதிகுமரனிடம் இலஞ்சம் கொடுப்பதுபோன்ற காட்சி பதிவானது. இது தொடர்பாக அவர் மறுப்பு தெரிவித்ததுடன் தனது பதவியையும் இராஜிநாமா செய்தார்.
இலஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை இந்திய ஹொக்கி சம்மேளனம் நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.என்.நடராஜன், தமிழ்நாடு பொலிஸின் முன்னாள் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் செயலர் ராஜீவ் மேதா ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் பதிவான அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்தக் குழு விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமென்று இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.
இதற்கிடையில் இலஞ்ச விவகாரம் தொடர்பாக இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ். கில்லும் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் இந்திய ஒலிம்பிக் சங்கக் கூட்டத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட்டுவிடும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கே.பி.எஸ்.கில்லுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.