நெஞ்சம் படபடத்த போட்டியில் ஜோகிந்தர் சர்மா கடைசி ஓவரை பதற்றப்படாமல் வீச, சென்னை சுப்பகிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
சச்சின் இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணியின் போராட்டம் மீண்டும் வீணானது. ஹைடன், சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது.
ஐ.பி.எல்., `ருவென்ரி - 20' தொடரில் சென்னையில் நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது. காயம் காரணமாக இப்போட்டியிலும் சச்சின் இடம் பெறவில்லை. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் பொறுப்பை மீண்டும் ஹர்பஜன் ஏற்றார்.
நாணயச் சுழற்சியில் வென்ற ஹர்பஜன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். சென்னை அணிக்கு ஹைடன், பார்த்திவ் படேல் அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். பொலக் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார் பார்த்திவ். நெஹ்ரா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பின்னர் ஹைடன் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். பொலக் வீசிய மூன்றாவது ஓவரில் வாணவேடிக்கை காட்டிய இவர் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். பைஸ் மூலமாக 4 ஓட்டங்கள் கிடைக்க, இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்குள் எடுக்கப்பட்டன.
இந்த நேரத்தில் நெஹ்ரா பந்தில் பார்த்திவ் (14) வெளியேறினார். அடுத்து வந்த மைக்கேல் ஹசியும் (5) ஏமாற்றினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த இவர் இம்முறை 5 ஓட்டங்களுக்கு குல்கர்னி பந்தில் வீழ்ந்தார்.
இதற்குப் பின் ஹைடன், சுரேஷ் ரெய்னா இணைந்து பட்டையை கிளப்பினர். மிகவும் விவேகமாக ஆடிய இவர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் ரெய்னாவின் ஆட்டம் ஹைடனை மிஞ்சியது. ஹர்பஜன், பிராவோ பந்தில் தலா ஒரு சிக்ஸர் அடித்தார். பின்னர் யெலிகாட்டி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். நாயர் வீசிய 14 ஆவது ஓவரில் ஹைடன், ரெய்னா தலா ஒரு இமாலய சிக்ஸர் அடித்தனர். அதிரடியாக அரைசதம் அடித்த ரெய்னா 53 ஓட்டங்களுக்கு கோட்டே பந்தில் ஆட்டமிழந்தார்.தனது அதிரடியை தொடர்ந்து ஹைடன், மின்னல் வேகத்தில் அரைச்சதம் அடித்தார். இவருக்கு கப்டன் தோனி சிறப்பாக ஒத்துழைக்க கடைசி கட்டத்தில் ஓட்ட எண்ணிக்கை ஜெற்வேகத்தில் உயர்ந்தது.
பிராவோ வீசிய 16 ஆவது ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி அடிக்க சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். குல்கர்னி வீசிய 18 ஆவது ஓவரில் ஹைடன் இரண்டு மற்றும் தோனி ஒரு பவுண்டரி அடித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹைடன் 81 ஓட்டங்களுக்கு (12 பவுண்டரி, 2 சிக்ஸ்) ஹர்பஜனின் துல்லிய `த்ரோவில்' ஓட்டங்களில் அவுட்டானார். கப்டன் தோனி 30 ஓட்டங்களுக்கு வெளியேறினார். 20 ஓவரில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்தது. ஓரம் (5), பத்ரிநாத் (2) ஆட்டமிழக்காமலிருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. முதல் ஓவரில் பத்ரிநாத் த்ரோவில் ரோஞ்சி (2) ஓட்டங்களில் அவுட்டானார். இதற்குப் பின் ஓரத்தின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடக்கிய சனத் ஜயசூரிய அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர் தோனி பந்தில் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த உத்தப்பா விளாசித் தள்ளினார். ஓரம் வீசிய 5 ஆவது ஓவரில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து மொத்தமாக 19 ஓட்டங்கள் எடுத்தார். இவர் ஜோகிந்தர் சர்மா வேகத்தில் 43 ஓட்டங்களுக்கு (6பவுண்டரி,1சிக்ஸர்) போல்டானார். பழனி அமர்நாத் பந்தில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்த பொலக், அடுத்த பந்தில் 17 ஓட்டங்களுக்கு போல்டாக சிக்கல் ஆரம்பமானது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிராவோ சிறிது நேரம் அதிரடி காட்டினார். அமர்நாத் ஓவரில்3 பவுண்டரி அடித்த இவர் 24 ஓட்டங்களுக்கு வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் கப்டன் ஹர்பஜன் நாயர் துணிச்சலாக போராடினார். பழனி அமர்நாத் வீசிய 17 ஆவது ஓவரில் ஹர்பஜன் ஒரு சிக்ஸ் அடித்தார். நாயர் இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்க மொத்தம் 21 ஓட்டங்கள் கிடைக்க மும்பைக்கு நம்பிக்கை பிறந்தது. ஓரம் வீசிய அடுத்த ஓவரில் ஹர்பஜன் இரண்டு சிக்ஸர் அடிக்க பதற்றம் ஆரம்பமானது. முரளி சுழலில் ஹர்பஜன் (28) ஆட்டமிழக்க திருப்புமுனை ஏற்பட்டது.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் `ருவென்ரி - 20' உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் சாதித்த ஜோகிந்தர் கையில் பந்தைக் கொடுத்தார் கப்டன் தோனி. முதல் இரண்டு பந்தில் நாயர் இரண்டு பவுண்டரி அடிக்க பரபரப்பு அதிகமானது. மூன்றாவது பந்தை நோ-போலாகப் போட்டார். நல்லவேளை பிரி-ஹிட்டில் ஒரு ஓட்டம் தான் கொடுக்கப்பட்டது. இதற்குப் பின் சுதாரித்துப் பந்துவீசிய ஜோகிந்தர் வெற்றியை உறுதி செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்து.