Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மகிந்த சிந்தனை அரசு எதிர்கொள்ளும் மும்முனைப் போர்
[26 - April - 2008] [Font Size - A - A - A]
காலகண்டன்

மகிந்த சிந்தனை அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் மும்முனை யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் வன்னி நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தம், கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான யுத்தம். தெற்கில் அரிசித் தட்டுப்பாட்டுடனான யுத்தம். இந்த மூன்று பிரதான யுத்த முனைகளுடன் அவற்றுக்குரிய பல்வேறு உபமுனைகளும் இணைந்து காணப்படுகின்றன. இவை அனைத்தினதும் கொள்கை வகுப்பாளர்களாகவும் தந்திரோபாய முன்னெடுப்பாளர்களாகவும் ராஜபக்ஷ சகோதரர்களே இருந்து வருகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்டவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முப்படைகளினதும் ஆணை பிறப்பிக்கும் தளகர்த்தராகவும் உள்ளார்.

அதேவேளை, தற்போதைய வடக்கு யுத்தத்திற்கு வழிகாட்டும் பொறுப்பு ஜனாதிபதியின் இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இருந்து வருகிறது. அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்துகொண்டே இந்த அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையை வழிநடத்துபவராகச் செயற்பட்டு வருகிறார். மேலும் கிழக்கில் இடம்பெற்று வரும் தேர்தல் யுத்தத்திற்கு மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்‌ஷ தலைமை தாங்கி வருகிறார். இவ்விரண்டு யுத்த முனைகளையும் எதிர்கொண்டு வந்த அரசாங்கத்திற்கு தற்போது தெற்கிலே உருவாகியுள்ள அரிசித் தட்டுப்பாடு என்ற யுத்த முனை புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ராஜபக்‌ஷ எதிர்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்.இவ்வாறான மும்முனை யுத்த அரங்கிலே ராஜபக்ஷ சகோதரர்கள் பெரும் சவால்களையும் கடும் எதிர்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

வடக்கின் யுத்தமுனை

மகிந்த சிந்தனை அரசாங்கம் கிழக்கைக் கைப்பற்றியமை போன்று வடக்கையும் கைப்பற்றிக்கொள்ளும் என்ற சூளுரைப்பு ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். வன்னி நிலப்பரப்பிலிருந்து புலிகள் இயக்கத்தை அழித்தொழித்து முழு வடக்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்போம் என்ற முழக்கத்தை அரசாங்கம் அடிக்கடி மீட்டுக்கொண்டிருக்கிறது. அதனை நம்பிய தெற்கின் சிங்கள மக்கள் மிகுந்த ஆவலோடு வன்னி மீட்பை எதிர்பார்த்து தமது இடுப்புப் பட்டிகளை நாளாந்தம் இறுக்கிக்கொண்டு வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பை மிகுந்த சிரமங்களுடன் தாங்கி வருகின்றனர். ஆனால், வன்னி மீட்போ, புலிகளின் அழிப்போ இலகுவானதாக இருக்கமாட்டாது என்பதைப் பாமர சிங்கள, மக்கள் அறிய அதிகம் வாய்ப்பு இல்லை. அந்த ளவிற்கு பேரினவாதப் பிரசாரம் சிங்கள ஆங்கில ஊடகங்களால் குறிப்பாக அரசாங்க சார்பு ஊடகங்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு மீதான யுத்தம் கிழக்கில் இடம்பெற்றவை போன்று இருக்கமாட்டாது என்பது ஏற்கனவே இராணுவ ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்ட ஒன்றாகும். கிழக்கிலிருந்து புலிகள் இயக்கம் பின்வாங்கிச் சென்றமை போன்று அவர்களால் வடக்கிலிருந்து பின்வாங்கிச் செல்வதற்கு வேறு பிரதேசம் கிடையாது. எனவே, வாழ்வா சாவா என்ற நிலையில் தமது முழுப் பலத்தையும் திரட்டிய கடுமையான யுத்தத்தில் புலிகள் இயக்கம் ஈடுபடவே செய்யும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அந்த வகையிலேயே வடக்கில் மணலாறு, வவுனியா, மன்னார், முகமாலை ஆகிய பிரதான முனைகளில் இராணுவம் முன்னேற முனைந்து நிற்கின்றது. அதற்கான இராணுவ முன்நகர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இம் முன்னேற்றத்திற்கு மழை ஒரு தடைக் காரணமாகக் கூறப்பட்டு வந்த போதிலும் அவ்வப்போது மட்டுப்படுத்தப்பட்ட முன்நகர்வுகள் இடம்பெற்றே வந்துள்ளன. பெரும் எடுப்பிலான வன்னித் தாக்குதலால் சுமார் இரண்டு அல்லது மூன்று லட்சம் வன்னி வாழ் மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து குவிந்து கொள்வார்கள் என்பது அரசாங்கத் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறு நிகழும் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் பற்றி பல்வேறு நிலைகளிலும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதன் மூலம் வன்னி மீதான தாக்குதல்களின் வேகம் எந்தளவில் இருக்கப் போகின்றது என்பதை ஊகிக்க முடியும்.

ஆனால், கடந்த புதன்கிழமை முகமாலையில் இடம்பெற்ற முன்நகர்வும் அதன் காரணமாக மூண்ட பெரும் மோதல்களும் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கப் படைகள் கண்ட உயிர் இழப்புகளும் படுகாயப்பட்ட இராணுவத்தினரது தொகையும் புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்ற யதார்த்த நிலையை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும், புலிகளின் போர் உத்தியானது தாக்குதலை விடத் தற்காப்பு நிலையைக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. அத்தகைய தற்காப்பு வியூகத்திற்குள் அரசாங்கப் படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு முன் நகர்வில் ஈடுபடுவது எளிதாக இருக்கமாட்டாது என்பதையே முகமாலையில் ஏற்பட்ட பாரிய மோதல் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், இம் மோதலானது இரு தரப்பிலும் ஏற்பட்ட பெருந் தொகையான இழப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது. அரசாங்கம் பரப்புரை செய்து வந்ததை நம்பிய சிங்கள விவசாயிகளும் உழைக்கும் மக்களும் வடக்கின் போர்முனைகளிலிருந்து வெற்றிச் செய்தியைத் தமது ஏழைப் பிள்ளைகள் அறிவிப்பார்கள் என்றே நம்பினார்கள். அவர்கள் அவ்வாறு தான் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால், நடந்திருப்பதோ வேறு விதமானதாகும். தத்தமது பிள்ளைகளின் இழவுச் செய்திகளையும் படுகாயச் செய்திகளையும் தான் சாதாரண கஷ்டப்பட்ட சிங்களப் பெற்றோர்களும் உறவினர்களும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறே தான் ஏழைத் தமிழ்ப் பெற்றோரும் தமது பிள்ளைகள் போர்க்களத்தில் மாண்டு வித்துடல்களாகிவிட்ட செய்தியறிந்து கதறியழுது நிற்கிறார்கள். இந்தக் கொடிய யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பதே நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்களின் ஏக்கமாகும்.

ஆனால், மகிந்த சிந்தனையும் ராஜபக்‌ஷ சகோதரர்களும் அவர்களுக்கு பக்கத்துணை நின்று வரும் பேரினவாத அரசியல் வெறியர்களும் யுத்தத்தின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்றே சிங்கள மக்களுக்குக் கூறிவருகின்றனர். அதனை நடைமுறையில் சாதித்து விடலாம் என இராணுவ வியூகம் அமைத்து வரும் யுத்தப் பிரியர்களான தளபதிகளும் இராணுவ வல்லுநர்களும் சதா முயன்று வருகின்றனர். ஆனால், அவர்களது இராணுவ மூளைகளில் தற்போதைய முகமாலைத் தாக்குதல்களும் மோதல்களும் பாரிய இழப்புகளும் ஏதாவது சிறு அதிர்வைத் தானும் தருமா என்றே சில இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில், இது முகமாலையில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் இழப்பு என்பதை உணர்ந்தால் மட்டுமே யுத்தமுனைப்புச் சிந்தனையில் மாற்றம் ஏற்பட முடியும்.

கிழக்கின் தேர்தல் யுத்தம்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் என்பது ஒரு யுத்த களம் போன்றே காணப்படுகின்றது. இந்த தேர்தலுக்கான வியூகம் அமைப்பதில் ஜனாதிபதியின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆலோசகருமான பசில் ராஜபக்‌ஷ முன்நின்று செயலாற்றிக் கொண்டார். வெற்றிலைச் சின்னத்தின் கீழ் தமிழ், முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைப்பதில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யார் முதலமைச்சர் என்பதை முன் கூட்டியே எடுத்துரைப்புச் செய்யாமலே தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் உள் இழுக்கப்பட்டன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிள்ளையானும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து காய்வெட்டி வந்த எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாவும் தாம் தான் முதலமைச்சர் என்றவாறு மனக்கோட்டை கட்டியபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அரசாங்கத்தின் தேர்தல் வியூகத்தை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கை கோர்த்துக் களத்தில் இறங்கி நிற்கின்றன.

எவ்வாறாயினும் அரசாங்கம் தனது சகல வளங்களையும் இத்தேர்தலில் பயன்படுத்துகின்றது. அரசாங்க ஊடகங்கள் யாவும் அப்பட்டமான வகையில் வெற்றிலைப் பக்கம் பிரசாரம் செய்வதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் அரசாங்க வாகனங்கள், அதிகாரிகள், ஊழியர்கள், காரியாலயங்கள் வெற்றிலையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் ஆயுத மிரட்டல்களும் கொலைகளும் வீழ்ந்து வருகின்றன. இவை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் அபாயம் தோன்றியிருப்பதாகவே சுயாதீன தேர்தல் அவதானிப்போர் கூறி வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்கள் இருந்து வருவதையும் அதனால் அச்சுறுத்தல்கள் விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்குப் பதிலளித்த அரசாங்கத் தரப்பு அமைச்சர் ஒருவர்; "ஆயுதங்கள் வைத்திருப்பது தவறல்ல. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதே முக்கியமானது" என வரைவிலக்கணம் கூறியுள்ளார். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பம்மாத்து எங்கே வந்து நிற்கின்றது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.

ஆயுத அடாவடித்தனம் மிக்க பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழான தேர்தல்கள் பலவற்றை இந்த நாடு ஏலவே பகிரங்கமாகக் கண்டு வந்துள்ளது. அப்பட்டமான மீறல்கள்,கள்ள வாக்கிடல்கள் என்று ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்ட பின்பும் அதன் காரணமாக எந்தக் கட்சியும் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் தத்தமது பதவிகளை இழந்ததாகச் சரித்திரம் இல்லை. அவ்வாறெனில் கிழக்கின் தேர்தல் மட்டும் புதுமையானதாக அமையப் போவதில்லை. இந்தத் தேர்தல் யுத்தத்தில் அரசாங்கம் எத்தகைய அடாவடித்தனங்கள், முறைகேடுகளைப் பாவித்தும் வெற்றி பெறவே முயன்று வருகின்றது. இதுவரை நான்கு கொலைகள் உட்பட பதின்நான்கு வன்முறை, அத்துமீறல்கள் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அடுத்த இருவாரங்களில் கிழக்கின் தேர்தல் யுத்தமுனை மிகக் கடுமையானதாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

அரிசித் தட்டுப்பாட்டு யுத்தம்

தெற்கிலே இருந்து வந்த பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு என்ற யுத்தகளமானது அமைதியாகவே இருந்து வந்தது. வடக்கு, கிழக்கின் யுத்தத்தைக் காட்டி மக்கள் எதிர்ப்புகள் மேல் கிளம்புவது தடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அரிசித் தட்டுப்பாடானது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி நடு இரவு முதல் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை வரம்பு விதிக்கப்பட்டது. இதனால், அரசாங்கத்திற்கும் அரிசி மொத்த வர்த்தகர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. ஒரு நாள் புறக்கோட்டையில் கடைகள் பூட்டி எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. புறக்கோட்டை அரிசி வர்த்தகத்தில் அதிகளவு ஈடுபடுவோர் தமிழர்கள் , முஸ்லிம்களாவர். எனவே, அரிசித் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் அவர்களே காரணம் எனத் திசை காட்டப்பட்டது. அதேவேளை, அரசாங்கத்தின் இயலாமையும் அரிசித் தட்டுப்பாட்டிற்கான உண்மைகளும் மறைக்கப்பட்டன.

இம்முறை பெரும்போக நெல் உற்பத்தியில் அமோக விளைச்சல் என அரசாங்கம் ஏற்கனவே பிரசாரம் செய்து கொண்டது. ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக மழையால் நெல் அறுவடையில் குறிப்பிட்ட தொகை பழுதடைந்து அழிவுற்றன.

இருப்பினும் எண்பது வீதமான நெல் நன்றாகவே கிடைத்ததாக விவசாய சம்மேளனம் அறிவித்துள்ளது. அதேவேளை, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல் அரசாங்கம் வரையறை செய்த 22 ரூபாவிற்குக் குறைவாகவே தனியார் துறையினரால் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டது. அந்நெல் முழுவதையும் பெரும் நெல் ஆலைச் சொந்தக்காரர்களான முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வழிவகை செய்தனர். இந்த முதலாளிகள் என்போர் யார்? நிச்சயம் அரசாங்க ஆதரவாளர்களாவர். சிலர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் பதுக்கப்பட்ட நெல்லை விடுவித்து அரிசியாக்க அரசாங்கம் தயாரா? இது ஒரு புறம் என்றால் இறக்குமதி அரிசியில் கொள்ளை இலாபம் சம்பாதிப்போரும் அரசாங்க ஆதரவு வர்த்தகர்கள் தான்.

இவ்வாறு அரிசியால் பெரும் இலாபம் சம்பாதிப்போர் எவ்வகையிலும் நட்டமடைய வாய்ப்பில்லை. அவர்கள் எதை எதை எல்லாம் எவ்வாறு அரிசியில் கலந்து மக்களின் கண்களில் மண்ணைத் தூவலாம் என்பதை வழமையாகவே அறிந்து வைத்தே வியாபாரம் செய்து வந்தனர். அத்தகையோருக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலை மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அரிசி நமது நாட்டின் பிரதான உற்பத்தியும் அத்தியாவசிய உணவுமாகும். அதனைத் திட்டமிட்டு அழித்து வந்தவர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் அரசாங்கங்களுமாகும். எனவே, அவர்களிடமே மக்கள் அரிசி யுத்தத்தில் நியாயம் கேட்டுப் போராட வேண்டும் என்பதே உண்மையாகும்.

Email this page Your Opinion Print this page
மகிந்த சிந்தனை அரசு எதிர்கொள்ளும் மும்முனைப் போர்
வறுமையை நோக்கி நகரும் இலங்கைப் பொருளாதாரம்
கண்ணகி கோட்டத்தையும் கச்சதீவு ஆக்கிவிடக்கூடாது
ஈழத்தமிழர் இறைமையின் ஆதாரத்தில் கொசோவோ போன்று ஒரு அரசை உருவாக்க முற்பட்ட தந்தை செல்வா
`ராஜீவ் படுகொலையில் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது தமிழக அரசின் கடமை'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com