Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
இமயமலைச் சாரலில் கரடுமுரடான செம்பாதை
[26 - April - 2008] [Font Size - A - A - A]
இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் நடைபெற்ற அரசியல் நிருணய சபைக்கான தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் பணிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தான் முழுமையாக முடிவுற்றன. இத்தேர்தலில் அதி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய தனிக் கட்சியாக மாவோ வாத கம்யூனிஸ்ட் கட்சி திகழும் என்று எந்தவொரு அரசியல் நிபுணருமே கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. முன்னாள் மன்னர் பிரேந்திராவினால் 1990 ஆம் ஆண்டு பல கட்சி ஜனநாயக அரசியல் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவையாக விளங்கிவந்த நேபாள காங்கிரஸுக்கும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கும் அடுத்தபடியாக மூன்றாம் இடத்துக்கே மாவோவாதிகள் தள்ளப்படுவர் என்றே அயல் நாடான இந்தியா உட்பட உலக நாடுகளினால் எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அரசியல் அவதானிகளையும் சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கின்றன. ஒருவேளை இத்தகையதொரு வெற்றி தங்களுக்குக் கிடைக்குமென்று மாவோவாதிகள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

601 ஆசனங்களைக் கொண்ட அரசியல் நிருணய சபையில் 240 ஆசனங்களுக்கான தேர்தல் தொகுதிவாரி அடிப்படையிலும் 335 ஆசனங்களுக்கான தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையிலும் நடைபெற்றன. எஞ்சிய 26 ஆசனங்களுக்குமான பிரதிநிதிகளை புதிய அமைச்சரவைதான் நியமிக்க வேண்டும். இதில் முதல் 240 தொகுதிகளில் மாவோவாதிகள் 120 தொகுதிகளையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தலில் 30 சதவீத வாக்குகளைப் பெற்று 100 ஆசனங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மாவோவாதிகளுக்கு அமோக வெற்றி கிட்டவில்லை. நேபாள மக்கள் தேர்தலில் அவர்களுக்கு வெற்றியை அளந்தே கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு தசாப்த காலமாக 13 ஆயிரத்துக்கும் அதிகமானோரைப் பலியெடுத்த மாவோவாதிகளின் ஆயுதக் கிளர்ச்சிக்கு முடிவைக் கட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் விளைவாக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனநாயக அரசியலில் இணைந்துகொண்ட அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல் நிருணய சபை இடைக்காலப் பாராளுமன்றமாக செயற்படுகின்ற அதேவேளை, நேபாளத்துக்கான புதிய குடியரசு அரசியலமைப் பொன்றை வரைவதற்கான ஆணையையும் கொண்டிருக்கிறது. மாவோவாதிகள் தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது. அவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்துதான் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியம் என்று வர்ணிக்கப்பட்ட நேபாளத்தில் மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசொன்றின் கீழ் முதலாவது அரசாங்கத்தை அமைப்பதில் மாவோவாதிகளுடன் யார் யார் இணைந்து கொள்வார்கள் என்பதை அடுத்து வரும் நாட்களில், வாரங்களில் காணக்கூடியதாக இருக்கும். மாவோவாதிகளைக் காத்திருக்கும் சவால்கள் மிகவும் பாரதூரமானவை. முதலாவதும் முக்கியமானதுமான சவால் மன்னர் கயனேந்திராவை மாளிகையிலிருந்து அப்புறப்படுத்துவதாகும். ஏப்ரல் தேர்தலுக்குப் பிறகு நேபாளம் ஒரு குடியரசாக மாறுவதற்கு மாவோவாதிகளும் ஏனைய பிரதான அரசியல் கட்சிகளும் கடந்த டிசம்பரில் இணக்கம் கண்டிருந்தன. மன்னரை நேரடி யாகவே சென்று சந்தித்து கௌரவமான முறையில் மாளிகையிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாவோவாதிகளின் தலைவர் பிரசந்தா கூறியிருந்தார்.

நெருக்கடிகள் ஏற்படுகின்ற வேளைகளில் நேபாள ஆட்சியாளர்கள் வழமையாகச் செய்வதைப் போன்று மன்னர் கயனேந்திராவும் இந்தியாவில் தஞ்சமடையக்கூடும் என்று வதந்திகளும் ஊகங்களும் கடந்த சில நாட்களாகக் கிளம்பியிருந்தன. ஆனால், நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் மன்னருக்குக் கிடையாது என்று மாளிகை வட்டாரங்கள் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தற்போதைய இடைக்கால அரசியலமைப்பின் கீழ் அரசாங்க விவகாரங்களில் மன்னருக்கு எந்தவிதமான பங்குமே கிடையாது. நேபாளம் ஒரு ஜனநாயகக் குடியரசாகவே கருதப்படுகிறது. தற்போது மக்களினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசியல் நிருணய சபையின் முதலாவது அமர்வில் நேபாளத்தை குடியரசாகப் பிரகடனம் செய்யும் ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட இணக்கப்பாடாகும். மாவோவாதிகளுடன் ஒத்துழைத்து முடியாட்சியை முற்றுமுழுதாக ஒழித்துக் கட்டினால், அவர்கள் தங்களது அதிகாரப்பிடியை வலுப்படுத்திவிட்டு ஏனைய கட்சிகளை ஓரங்கட்டிவிடுவார்கள் என்ற அச்சம் பல கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கிறது. இத்தலைவர்கள் மத்தியில் இருக்கின்ற இத்தகைய உணர்வைப் பயன்படுத்தி புதிய அரசியலமைப்பை வரையும் முயற்சிகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதில் மன்னருக்கும் திட்டங்கள் இல்லாமல் இல்லை. மாவோவாதிகளின் தேர்தல் வெற்றியை அயல்நாடான இந்தியா திருப்தியுடன் ஏற்றுக்கொண்டிருப்பதாக நம்புவதற்கில்லை. அதனால் நேபாளக் கட்சிகளிடையே செல்வாக்கைக் கொண்ட இந்தியாவின் நகர்வுகளும் இதுவிடயத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியவையாகும்.

முன்னாள் கம்யூனிஸ்ட் போராளிகள் சுமார் 30 ஆயிரம் பேரை நேபாளத்தின் தேசிய இராணுவத்தில் சேர்ப்பதில் மாவோவாதிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றின் கீழ் பணியாற்றுவதில் எந்தப் பிரச்சினையுமே இல்லை என்று கூறும் இராணுவ உயர் பீடம் அரசியல் ரீதியில் போதனை செய்யப்பட்ட முன்னாள் மாவோவாத போராளிகளை இராணுவப் படையணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று திரும்பத் திரும்பக் தெரிவித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இராணுவத்துக்கும் மாவோவாதிகளுக்கும் இடையே கடுமையான பகைமையுணர்வு இருப்பதால் போராளிகளை இராணுவத்தின் படையணிகளில் சேர்க்கும் விவகாரம் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. சமூக மாற்றத்துக்காக ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிஸ்ட் அரசியல் இயக்கமொன்றை ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் இணைப்பதற்கான முயற்சிகள் எதிர்நோக்கவேண்டியிருக்கின்ற சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் நேபாள நிலைவரம் மிகவும் தெளிவான படிப்பினைகளைத் தரும் என்பது நிச்சயம். மாவோ வாதிகள் ஆயுதக் கிளர்ச்சியைக் கைவிட்டு தேர்தலில் பங்கேற்கக் கூடியதாக நேபாள அரசியல் நிலக்காட்சியில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு பெரும் சவால்களுக்கு மத்தியிலும் விட்டுக் கொடுத்து ஒத்துழைத்துச் செயற்பட்ட அரசியல் சக்திகள் அடுத்து வரும் சவால்களையும் அதே உணர்வுடன் சந்தித்து வெற்றி கொள்ளுமா? இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைச் சாரலில் கரடுமுரடான செம்பாதையில் மாவோவாதிகளின் பயணத்தை முழு உலகும் அவதானித்துக் கொண்டிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com