முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் சிதறடிக்கப்பட்டு தனிப்பட்ட நலன்களுக்கான காய் நகர்த்தல்களே இன்று எமது முஸ்லிம் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் சுதந்திர முன்னணியின் ஸ்தாபக ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே.எம்.அன்வர் நௌஸாத் தெரிவித்தார்.
முஸ்லிம் சுதந்திர முன்னணி மற்றும் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் இணைந்த சுயேச்சைக் குழுவின் வேட்பாளர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமை வகித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை சாய்ந்தமருது ரெட் சிலி ஹோட்டலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பாளர் அன்வர் நௌஸாத் மேலும் கூறியதாவது;
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் ஒரு தூரநோக்குடன் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து எமது சமூகத்திற்கான பேரம் பேசும் சக்தியாக அதனை வளர்த்தெடுத்தார். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினதும் இப்பிராந்தியத்தினதும் முக்கிய சில தேவைகளை அவர் நிறைவேற்றித் தந்தார். குறிப்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் போன்றவை மறைந்த தலைவரின் சாணக்கியத்தினால் அரசுடன் பேரம் பேசி வென்றெடுக்கப்பட்டவையே.
ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி சற்றும் முன்னகர்த்தப்படவில்லை. ஒலுவில் துறைமுகத்திற்கென ஒரு கல் தானும் மேலதிகமாக வைக்கப்படவில்லை.
இன்று எமது சமூகத்தில் நிறைய அரசியல் தலைமைகளும் கட்சிகளும் உருவாகியுள்ளன. அதுவே எமது சமூகத்தின் சாபக்கேடாகவும் அமைந்துள்ளது. தத்தம் அரசியல் அந்தஸ்துகளையும் பதவிகளையும் உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளிலேயே முஸ்லிம் தலைமைகள் ஈடுபட்டு வருகின்றன.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான எவ்வித முயற்சிகளும் இன்றைய அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்படவில்லை. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்களை வழி நடத்துவதற்கும் அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குமான ஒரு தலைமைத்துவம் கிடையாது.
இந்நிலையில் மார்க்க சிந்தனையுடன் கூடிய சமூகப்பற்றுமிக்க ஒரு சக்தி கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இதனை மக்கள் மத்தியில் வலியுறுத்துவதற்கான ஒரு களமாகவே இத்தேர்தலை நோக்குகின்றோம்.
இத்தகைய தேவைப்பாட்டின் அடிப்படையிலேயே மூன்று மாவட்டங்களிலும் ஒரு கொள்கைத் திட்டத்துடன் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றோம். இத்தேர்தல் நமது பயணத்தின் தொடக்கமே தவிர முடிவல்ல என்பதை வேட்பாளர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வுகள் காணப்பட வேண்டும். எமது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அனைத்து இன மக்களிடையேயும் சகவாழ்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய இலட்சியங்களுடனேயே நாம் இத்தேர்தலை சந்திக்கின்றோம். எந்தவொரு சக்திக்கும் நாம் அடிமைப்படமாட்டோம். எவரது அதிகாரத்திற்கும் அஞ்சமாட்டோம். யதார்த்தங்களையும் நியாயங்களையும் பேசுவதற்கான ஒரு களமாக இம்மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்துவோம்.
இக்கலந்துரையாடலில் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் தவிசாளர் செயிட் அஸ்லம் சக்காப் சற்.மௌலானா, வேட்பாளர்களான கே.அப்துல் ஹமீட், எம்.எம்.எம்.நூறுல் ஹக், எம்.எஸ்.எம்.றிம்ஸான், எம்.ஐ.எம்.இஸ்திகார், எம்.எம்.நௌபர், எஸ்.எம்.நௌஸாத், யூ.கே.சர்ஜுன் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.