*திருமலை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் பரசுராமன் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு இணைப்பைப் பிரித்து கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையாக்க முயற்சிக்கும் இந்த அரசின் நடவடிக்கையைத் தோற்கடிப்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அ.பரசுராமன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரான கலாபூஷணம் அ.பரசுராமன் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் போதிய சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைத் தடை செய்வதே இந்த அரசின் திடமான நோக்கமாகும். போதிய சுயாட்சி என்ற பாதையில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்களை பின்நோக்கித் தள்ள முயற்சிக்கும் இந்த அரசின் நோக்கங்களை எதிர்க்க வேண்டியுள்ளது.
ஜனநாயக விரோத சக்திகளை முறியடிக்கவும் இந்த நாட்டில் மீண்டுமொரு ஜனநாயக சமூகத்தை உருவாக்கவும் மூவின மக்களின் பேராதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் தமிழ் வேட்பாளர்களாக நானும் சட்டத்தரணி வரதனும் போட்டியிடுகின்றோம்.
மூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த சேனையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, சம்பூர், கூனித்தீவு மற்றும் அதனோடு சார்ந்த கிராம மக்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
எனது நடுநிலைத் தன்மையையும் மக்கள் சேவையையும் கருத்தில் கொண்டு சகல மக்களுக்கும் முடியுமான சேவையை எவ்வித வேறுபாடுமின்றி செய்ய உறுதிபூண்டுள்ளேன்.
இன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் எனக்கென்று தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களாகிய உங்களை எவ்வித சிரமத்துக்கும் உள்ளாக்க விரும்பவில்லை. எனவே, உங்களது அடிப்படை உரிமையாகிய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி எனக்கு ஆதரவு தாருங்கள்.