*கலாநிதி குமரகுருபரன் கண்டனம்
`அகிம்சைத் தன்மையுடைய ஆயுதமற்ற ஜனநாயகப் பண்புகளை எள்ளி நகையாடுவதும் இம்சைப்படுத்துவதும் ஜனநாயகவாதிகளின் செயலாகாது. முஸ்லிம் காங்கிரஸின் தலைமைச் செயலகத்தை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடாத்தியது ஜனநாயக விழுமியங்களை அசிங்கப்படுத்தும் செயலாகும் இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைச் செயலகமான தாருஸ்ஸலாமில் பொலிஸார் தீவிர தேடுதல் நடாத்தியது தொடர்பாக கட்சியின் சார்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அகிம்சைத்தன்மை கொண்ட, ஜனநாயக விழுமியங்களைப் பேணும், பலராலும் உயர்வாக மதிக்கப்படுகின்ற ஜனநாயக பாரம்பரியம் மிக்க அமைப்புக்கள் மீது நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி நியாயமான காரணமின்றி இத் தேடுதல் ஏவிவிடப்பட்டிருக்குமாயின் இது ஜனநாயகத்தையும் அதன் பண்பையும் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். அத்துடன் ஜனநாயகத்தை எள்ளி நகையாடும் இத்தகைய செயற்பாடுகள் வன்முறைகளைத் தூண்டிவிட அரசினால் மேற்கொள்ளப்படும் சதியாகவே தென்படுகிறது. இதனை மேலக மக்கள் முன்னணியின் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.