டெங்குநோய் தோட்டப் பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்காதிருப்பது குறித்து குருவிட்ட பிரதேச சபை உறுப்பினர் விசனம் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமற்ற சூழலில் தொழிலாளர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வதிவிடங்களில் இந்நோய் வேகமாய் பரவும் சாத்தியம் இருப்பது குறித்து அதிகாரிகள் அக்கறை கொள்ளாதிருப்பது பற்றியும் அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
இந்நோய் அதிகரித்திருப்பது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்;
"தோட்டப் பிரதேசங்களில் முழுமையாக சுத்தம் பேணக்கூடிய வாய்ப்புகள் மிக குறைவாக உள்ள நிலையில், நோய் பரவும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இதனால் தொழிலாளர்களில் கணிசமானோர் நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலைமை மாற வேண்டும். நாமும் இந்நாட்டு மக்களே, நானும் பொது மக்கள் வாக்களித்தே இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். எம்மை தமது பிரதி நிதிகளாக்கிய மக்கள் எம்மில் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது எமது கடமையாகும்.
குருவிட்ட பகுதியில் மிக வேகமாகப் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுகாதாரத்துறையினர் கவனத்திலெடுத்து தோட்ட மக்கள் மத்தியில் இந்நோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும்" என்றார்.