*வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம்; எச்சரிக்கிறது பவ்ரல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயமிருப்பதாக எச்சரித்த பவ்ரல் அமைப்பு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் நீதியான தேர்தலுக்கும், மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மருதானையிலுள்ள சமூக, சமய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பவ்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்றிகோ இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
நீண்ட காலத்திற்குப்பின் கிழக்கில் நடைபெறும் தேர்தலானது பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
தேர்தலில் பல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளமையாலும், அரச வளம் அதிகமாக உபயோகிக்கப்படுவதாலும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டத்தாலும் அங்கு வன்முறைகள் அதிகரிக்கும் அபாயமுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடானது நீதியான தேர்தலுக்கும், மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இது குறித்து உரிய தரப்பினர் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.
அரசியலமைப்புப் பேரவை செயற்படுமாயின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மூலம் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை எம்மால் எதிர்பார்க்க முடியும். முறைகேடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன்நிறுத்தி வாக்களிப்பைக் கூட ரத்துசெய்ய முடியும்.
எனினும், சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இயங்காமையால் தேர்தல் ஆணையாளர் அதிகாரமற்று விளங்குகிறார். அரசியல் கட்சிகள் இதுபற்றி அலட்சியப்போக்குடன் செயற்படுகின்றமையே ஆணைக்குழு நிறுவப்படாமைக்கு பிரதான காரணமாகும்.
இதேசமயம், கிழக்கு தேர்தலில் அரசாங்கத் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் தேர்தல் அத்துமீறலாகவே கருதப்படும்.
கிழக்குத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.`பவ்ரல்' எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு நல்காது. எமது அமைப்பினை ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தி வெளியாகிய பத்திரிகைச் செய்தி ஆதாரமற்றது. அதனை நிராகரிக்கிறேன் என்றார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் தேசிய சமாதானப் பேரவைப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா `பவ்ரலின்' உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹனி ஹெட்டியாராச்சி உள்ளிட்டோருடன் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.