*மகாத்மா காந்தியின் பேத்தியும் தென்னாபிரிக்காவிலிருந்து வருகை
`சமயம் மூலம் சமாதானம்' என்ற தொனிப் பொருளில் 70 நாடுகளைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச மாநாடு நாளை மறுதினம் திங்கட்கிழமை கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சமூக, சமய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன.
28 ஆம் திகதி கண்டியிலும், 30 ஆம் திகதி திருகோணமலையிலும் இச்சர்வதேச சமயத் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளதுடன், இதன்போது பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
மதங்களுக்கிடையிலான நல்லுறவு, இன முரண்பாடு, சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயம் குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
சமயம் மூலம் சமாதானத்திற்கான உலக அமைப்பு, தேசிய சமாதானப் பேரவை மற்றும் சமயம் மூலம் சமாதானத்திற்கான இலங்கை அமைப்பு இணைந்தே இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
இம்மாநாட்டில் கம்போடியா நாட்டின் தலைமை மதகுரு, தென்னாபிரிக்கா தேசிய காங்கிரஸ் எம்.பி.எலாகாந்தி (மகாத்மாவின் பேத்தி), நோபல் பரிசு குழுவின் முன்னாள் உபதலைவரும் ஐரோப்பிய மத கவுன்ஸில் தலைவருமான பேராயர் கார்ணர், இந்தோனேசிய தலைமை முஸ்லிம் மதகுரு நொரியா சர்கி ஆகியோருடன் பல்வேறு நாட்டு சமயத் தலைவர்களுடன் இலங்கையின் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களுடன் கிறிஸ்தவ மறை மாவட்ட ஆயர்கள், இந்து குருமார் மற்றும் இஸ்லாமிய உலமாக்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.