* பிலியந்தலை பஸ் நிலையத்தில் நேற்று மாலை சம்பவம் பிலியந்தலை பஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற சக்திமிக்க குண்டு வெடிப்பில் 24 பயணிகள் கொல்லப்பட்டதுடன் 60 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையிலேயே நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த பஸ் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து கஹபொல பகுதி நோக்கி பெருமளவு பயணிகளுடன் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸினுள்ளேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
கடும் மழை பெய்து கொண்டிருந்தபோது பஸ்ஸினுள் சுமார் நூறு பயணிகள் மிகவும் நெரிசலாக இருந்த போதே மிகவும் சக்திமிக்க குண்டு பஸ்ஸினுள்ளிருந்து வெடித்துள்ளது.
பிலியந்தலை பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டு சுமார் 25 மீற்றர் தூரம் சென்ற போது பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து பஸ் தீப்பற்றி எரிந்ததாக அப் பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பால் பஸ் முற்றாகச் சிதைந்ததுடன் பஸ்ஸினுள்ளிருந்த பயணிகள் பலர் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பலர் பஸ்ஸிற்கு வெளியே தூக்கி வீசப்பட்டதுடன் அந்தப் பகுதியெங்கும் மரண ஓலம் கேட்டதாகவும் அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து அப்பகுதியில் பெரும் தீப்பிளம்பு எழவே, பஸ் நிலையப் பகுதியில் நின்ற மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறியோடினர்.
இவ்வேளையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரும் படையினரும் மேலதிக பொலிஸாரையும் படையினரையும் அங்கு வரவழைத்து அப்பகுதியில் வீதிப் போக்குவரத்துகளை தடை செய்ததுடன் அப்பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் பஸ்ஸினுள்ளிருந்து படுகாயமடைந்தவர்களை மீட்கத் தொடங்கினர்.
மேலதிக பொலிஸாரும் படையினரும் அப்பகுதிக்கு வந்து சேர்ந்த அதேநேரம், அங்கு வந்த பொது மக்களும் இணைந்து சிதைந்து உருக்குலைந்து போயிருந்த பஸ்ஸினுள்ளிருந்து படுகாயமடைந்தவர்களை மீட்டெடுக்கத் தொடங்கினர்.
பஸ்ஸினுள் பெருமளவு பயணிகளிருந்ததாலும் அவர்கள் அனைவரும் மிக மோசமாகப் படுகாயமடைந்திருந்ததாலும் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப் பணிகள் சற்று தாமதமடைந்தன.
எனினும், பலத்த முயற்சியின் மத்தியில் பஸ்ஸின் சிதைந்த பகுதிகள் ஒருவாறு அகற்றப்பட்டு படுகாயமடைந்தவர்கள் பஸ்ஸிற்கு வெளியே இழுத்தெடுக்கப்பட்டு அப்பகுதிக்கு வந்த வாகனங்களில் ஏற்றப்பட்டு களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.
பிலியந்தலை பஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் சகல வீதிகளும் மூடப்பட்டு வாகனப் போக்குவரத்துகள் வேறு பகுதிகளூடாக திருப்பப்பட்டன.
மீட்புப் பணியின் போது பலத்த சிரமங்கள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்பால் பலரது உடைகள் எரிந்தும் சிதைந்தும் போனதால் படுகாயமடைந்த பலரை வேறு துணிகளால் போர்த்தியே ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதாக அந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடித்த பஸ்ஸினுள்ளிருந்து மோசமாகச் சிதைந்த 12 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் படுகாயமடைந்த நிலையில் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுபோவில ஆஸ்பத்திரியில் 60 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 12 பேர் வரை பின்னர் இறந்ததாகவும் தெரிவித்த ஆஸ்பத்திரி பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.ஜி.குணவர்த்தன படுகாயமடைந்தவர்களில் 30 பேரது நிலைமை கவலைக்கிடமாயிருப்பதாகவும் தெரிவித்தார்.
பஸ்ஸினுள் குண்டுவெடித்த போது கொல்லப்பட்டவர்களில் 11 பேரது சடலங்கள் முதலில் பிலியந்தலை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து களுபோவில ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்தவர்களில் ஆறு பேர் நேற்றிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பயணிகள் பெருமளவில் நெருக்கமாயிருந்த இந்த பஸ்ஸின் நடுப்பகுதியில் ஆசனங்களுக்கு மேலே பொதிகள் வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்றினுள்ளிருந்த குண்டே வெடித்ததாகவும் இந்தக் குண்டு நேரக்கணிப்பு குண்டாயிருக்கலாமெனக் கருதப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தது.
எனினும், பஸ்ஸினுள் குண்டுப் பார்சல் எவ்வாறு வந்ததென்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் 7 பெண்களும், 17 ஆண்களும் கொல்லப்பட்டதாக களுபோவில ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடித்த பகுதிகளில் பயணிகள் கொண்டுவந்த பொருட்கள் பலவும் சிதறிக் கிடந்தன. சிதைந்து போன பஸ்ஸினுள்ளும் பொருட்கள் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடந்தன.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசா ரணைகளும் நடைபெற்று வருகின்றன.