யூசுப்பதான், ஸ்மித் அதிரடி ஆட்டம் கைகொடுக்க டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் `ருவென்ரி- 20' போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் `திறில்' வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதமடித்த சைமண்ட்ஸின் ஆட்டம் வீணானது.
நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். லீக் போட்டியில் லட்சுமண் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வோர்னை கப்டனாகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக லட்சுமண், கில்கிறிஸ்ட் வந்தனர். சிறப்பாக பந்துவீசிய யூசுப்பதான் கில்கிறிஸ்டை (13 ) வெளியேற்றினார். அடுத்து அதிரடி அப்ரிடி வந்தார். அதே ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய இவர் (10 ) கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க யூசுப்பதான் தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
சைமண்ட்ஸ் வந்த வேகத்தில் முனாப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். திரிவேதி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். மறுமுனையில் லட்சுமண் வோர்ன் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். இவர் 16 பந்தில் 16 ஓட்டங்களை எடுத்தார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சைமண்ட்ஸ் அரைச்சதம் அடித்தார். வோர்ன் பந்தில் ஒரு சிக்சர் அடித்து இத்தொடரின் அதிவேக சதம் பதிவு செய்தார். இதற்கு இவருக்கு 47 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரோகித் 36 , அர்ஜூன் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்தது. சைமண்ட்ஸ் 117 ஓட்டங்களுடன் (11 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமலிருந்தார்.
கடின இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு அக்மல் (12 ) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த யூசுப் பதான் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி ஓட்ட எண்ணிக்கையை ரொக்கெட் வேகத்தில் உயர்த்தியது.
அபாரமாக ஆடிய யூசுப்பதான் , சமிந்த வாஸ் வீசிய 5 ஆவது ஓவரில் 2 சிக்சர் , ஒரு பவுண்டரி உட்பட 22 ஓட்டங்களை எடுத்தார். நல்ல போர்மில் இருந்த இவர் ஆர்.பி.சிங். பந்தையும் விட்டு வைக்கவில்லை. அவரது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்துக் கலக்கினார் . 21 ஆவது பந்தில் 50 ஓட்டங்களைத் தொட்டு இத்தொடரின் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாட நினைத்த இவர் 6 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 28 பந்தில் 61 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் (4 ) இம்முறை சோபிக்கவில்லை.
அடுத்து கைவ் வந்தார். இவர் சைமண்ட்ஸ் ஓவரில் மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் அரைச்சதம் அடித்த ஸ்மித்தும் பந்தை வரிசையாக பவுண்டரிக்கு விரட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த ஜோடி வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்க லட்சுமண் அப்ரிடியிடம் பந்தைக் கொடுத்தார். இவரது முதல் பந்தில் கைவ் ஆட்டமிழந்தார். இவர் 16 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ஸ்மித்தும் (45 பந்தில் 71 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ராஜஸ்தான் ரோயலுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால், கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் தள்ளப்பட்டது. இதில் அதிரடியாக விளையாடிய கப்டன் வோர்ன் வரிசையாக ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசி அணிக்கு `திறில்' வெற்றி தேடிக் கொடுத்தார். ராஜஸ்தான் ரோயல்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்து வென்றது. வோர்ன் 22, பங்கஜ் சிங் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இன்று 26 ஆம் திகதி நடக்கும் அடுத்த போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்சை சந்திக்கிறது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி நாளை 27 ஆம் திகதி நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.