நம்முள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் இயக்கத்தினர் தம்மை இடைநிறுத்தியதற்கான முதலாவது காரணம், அப் பேச்சு வார்த்தைகளில் புனரமைப்பு, புனர்வாழ்வு சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பின்தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டமை. இரண்டு, பேச்சுவார்த்தைகளாவன வடக்குக் கிழக்குக்கு அபிவிருத்தி உதவிகள் வழங்கும் வழிமுறையமைப்புக்களை அபிவிருத்தி செய்யத் தவறியமை. இது சம்பந்தமாக உருவாக்கப்பட்ட கூட்டுப்பணிக்குழு (JTF) உடனடி மனிதாபிமான மறுசீரமைப்புத் தேவைகளுக்கான உபகுழு (Sub Commitee for Immediate Humanitarian and Rehabilitation Needs) ( SIHRN) போன்றவற்றால் நிலைமையைக் கையாள முடியாமற் போனமை. மூன்றாவதாக படிப்படியாக இரு தரப்பாரினதும் சமநிலை பாதிக்கப்பட்டு வருவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கருதியமை. அத்துடன் நான்காவதாகச் சர்வதேச சமூகம் நிபந்தனைகள் விதித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்த விளைந்தமை. இதன் பின்னணியில் அரச சதி முயற்சிகள் தென்பட்டதாக அவர்கள் கருதியிருக்கக் கூடும்.
கூட்டு முயற்சியின் பங்குதாரர்களிடையே சமத்துவம், சமச்சீர், நம்பிக்கை ஆகியன இருந்தால்த்தான் ஒருமித்து செயலாற்ற முடியும். அவை பாதிக்கப்பட்டதால்த்தான் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இடை நிறுத்தம் ஏற்பட்டது. இடைநிறுத்தம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தியது. இதனால் பல சக்திகள் சமாதானத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க அது வழி வகுத்தது.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சமாதான இடை நிறுத்தத்திற்கு யார் காரணம் என்பது பற்றி எழுத்து மூலப் பரிமாறல்களில் ஈடுபட்டனர். எனினும் விடுதலைப் புலிகள் தமது காரியங்களைச் செவ்வனே செய்தனர் என்றே கூறவேண்டும். ஏன் என்றால் இக்கருத்துப் பரிமாறல்களைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) பற்றிய ஆவணத்தை அரசாங்கத்தின் பரிசீலனைக்காக அவ்வியக்கம் வைத்தது. பல்தேச சட்ட வல்லுநர்கள் பலர் இதனைத் தயாரிக்க உதவினர். அகச்சுயாட்சிக்கு வழிவகுப்பதாகவே ஒஸ்லோ பேச்சு வார்த்தை அமைந்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். "ஐக்கிய இலங்கை - அதனுள் சமஷ்டி அடிப்படையில் உள்நாட்டுச் சுயாட்சி" - இதுவே ஒஸ்லோப் பேச்சின் ஏகோபித்த முடிவு. அதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே ஐ.எஸ்.ஜீ.ஏ (ISGA) ஆவணம் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கையில் அதனை நடைமுறைப்படுத்த விடாமல் அத்துடன் அதனையே சாட்டாக வைத்து 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி சந்திரிகா ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க அமைச்சுக்கள் மூன்றைப் பலாத்காரமாக சுவீகரித்துக் கொண்டார். "உள்நாட்டுச் சுயாட்சி" என்ற கருத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஆராயத் தொடங்கிய கணமே சிங்களப் பேராதிக்க வெறி முட்டுக்கட்டைகளைப் போட விளைந்தது.
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து தமிழ் - சிங்கள உறவுகளில் நான் முன்னர் இக் கட்டுரைகளில் கூறியவாறு ஒரு முக்கியமான அரசியல் இழையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. முதலில் சிங்கள அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவன (Aggression). அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர். (Reaction). பின்னர் சமாதானம் என்று கூறி ஒரு ஒப்பந்தம் போன்றதொன்று ஏற்படும். (Seeming Reconciliation) சில காலத்தின் பின் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டு எதிர்த்தடிப்பு செய்யப்படும். (Resiling and / or Abrogation). அதன் பின் பழைய குருடி கதவை திறடி கதைதான்!
முதலில் சிங்களம் மட்டுஞ் சட்டம் (Agression), பின்னர் தமிழர் எதிர்ப்பு (Reaction), அதன் பின் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் (Reconciliation) அதன் பின்மிக விரைவில் ஒப்பந்தம் கிழித்தெறியப்படல் (Abrogation). அதன் பின் ஆக்கிரமிக்கும் நடவடிக்கை கைவிட்ட இடத்திலிருந்து தொடரும். இப்படியாக ஆரம்பித்த அரசியல் விளையாட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இக் கட்டுரைகளின் தற்போதைய காலகட்டத்தில் இது வரையில் நடந்தவை பின்வருமாறு - பிரச்சினைகளின் பின்னணியில் சமஷ்டி அடிப்படையில் ஒஸ்லோ ஒப்பந்தம். அதன் பின் ஒப்பந்த அடிப்படையில் ISGA ஆவணம். (Reconciliation) அதன் பின் ஜனாதிபதியின் அதிகாரப்பிடுங்கலால் எதிர்த்தடிப்பு. (Resiling) இப்படியே நாடகம் தொடர்கிறது.
ஜனாதிபதி ஜயவர்த்தன பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுண்டு. மக்களால் எதிர்க்கப்படப்போகும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமானால் அச்சட்டத்திற்கு மேலதிகமாக மேலும் கொடூரமான பல ஷரத்துக்களை உள்ளடக்கி முதல் வரைவொன்றை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவாராம். அங்கத்தவர்கள் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்தவுடன் "நான் ஜனநாயகத்திற்குக் கட்டுப்பட்டவன்" என்று கூறி அந்த மேலதிக கொடூர ஷரத்துக்களைக் கைவாங்கி விடுவாராம். அவருக்குத் தேவையான சட்டம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்! அது போலத் தான் மற்றைய சிங்களத் தலைவர்களும் தமக்குத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். தமிழர்கள் ஏமாளிகள்!
பல தமிழர்கள் முக்கியமாகக் கொழும்புத் தமிழர்கள் மரங்களில் மனதைப் பறிகொடுத்து வனமதனுள் வழுவி விட்டோம் என்பதை உணர்வதில்லை. (Not see the wood for the trees). அமைச்சுக்களை அபகரித்தது சந்திரிகாவின் அரசியல்த் தந்திரமே. அது நடந்திராவிட்டால் ISGA நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இத் தமிழர்கள் கூறிவருகிறார்கள். எவ்வாறெனினும் ISGA ஐ நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்தோம். ஆனால் அதை ஜனாதிபதி தடைசெய்து விட்டார் என்று ஐக்கிய தேசிய முன்னணி எத்தருணத்திலுங் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. உண்மையில் சந்திரிகா எடுத்த நடவடிக்கை அவர்களுக்கு ஒருவிதத்தில் மன ஆறுதலைக் கொடுத்தது எனலாம். ISGA க்கு அக்கட்சியில் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அண்மையில் சமஷ்டிக்கு நாங்கள் உடன்பாடில்லை என்று கூட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார். கருணாவைப் பிரித்தெடுத்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரிய பங்கிருந்தது என்பது தெரிந்த விடயமே. ஆகவே அடிப்படையில் தமிழர்களுக்குச் சுயாட்சி கொடுக்கக் கூடாது என்பதே பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. எவ்வளவு தான் பல் இளித்து பல நன்மைகளைத் தமிழர்கள் நாங்கள் செய்தாலும் சிங்கள அரசியல் வாதிகள் அவர்களின் அடிப்படையில் இருந்து சரியமாட்டார்கள் என்பதே எனது கருத்து. தனிப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்கள். அவ்வளவு தான். தமிழர்களுக்கு உரித்துக்கள் வழங்குவது சிங்கள இனத்துக்குச் செய்யுந் துரோகம் என்ற எண்ணம் பரவலாகச் சிங்கள மக்களிடையே இருந்து வருகிறது. அதை மாற்றும் படியான சூழல்கள் இன்னும் ஏற்படவில்லை.
சிங்கள நீதிபதிகளிடையே கூட அவர்களின் நோக்கின் அடிப்படையிலிருந்து மூன்று பிரிவினரை அடையாளம் காண முடியும்.
அது பற்றி அடுத்தவாரம் ஆராய்வோம்.