Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
[27 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழித்தொழிக்கும் பேரினவாத அரசாங்கத்தின் இலட்சியக் கனவை நனவாக்கும் நோக்குடனேயே அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்ஸிம் கூட்டுமுன்னணியை ஆரம்பிக்கும் நாடகத்தை அரங்கேற்றியதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரான பஷீர் சேகுதாவூத் தெரிவிக்கின்றார்.

உம்மா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புக்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் முற்று முழுதாக முஸ்லிம் காங்கிரஸை நிர்மூலமாக்கும் எண்ணம் கொண்டவையாக காணப்பட்டதாகவும் இதில் தாம் தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்டதன் காரணமாக அரசாங்கத்தினது திட்டத்தை தவிடு பொடியாக்க முடிந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் முயற்சி தோல்விகண்டது பற்றிய விளக்கத்தை அளிக்கையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டவுடன் தேர்தலில் போட்டியிட விரும்பிய எல்லா அரசியற் கட்சிகளும் வியூகங்களை வகுக்கத் தொடங்கின. கிழக்கு விடுவிக்கப்பட்ட பின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஏற்கனவே இருந்தது.

அரசாங்கமே தேர்தல் பற்றிய அறிவித்தலை அறிவிக்க வேண்டும் என்பதால், தேர்தலை நடத்த வேண்டிய காலப்பகுதி குறித்து எல்லாக் கட்சிளையும் விட அரசாங்கக் கட்சிக்கு முன்னதாகவே தகவல் தெரிந்திருந்தது. எனவே, எல்லாக் கட்சிகளையும் விட அரசாங்கக்கட்சி வியூகம் வகுப்பதில் முந்திக்கொண்டது. அரசாங்கத்தின் அந்த வியூகத்தில், கிழக்கின் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் முஸ்லிம்களின் வாக்குகளை சிதைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான போக்கில் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் விதத்திலும் அசிரத்தையாவும் நடந்துகொண்ட காரணத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில்தான் முஸ்லிம்களுடைய உரிமைக்கான விளக்கங்களை முன்வைத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருந்தது. இதன் காரணமாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் பங்குகொள்ளாது என்று அரசாங்கம் கணக்குப் போட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்களின் மிகப் பெரும் வாக்கு வங்கியைக் கொண்ட கட்சி என்பதால், அக்கட்சியை உடைப்பதுதான் முஸ்லிம் வாக்குகளைச் சிதைப்பதற்குள்ள மிகச் சிறந்த வழி என்று அரசு எண்ணியது. இதன் அடிப்படையில்தான் ஏற்கனவே வகுக்கப்பட்ட வியூகத்துக்கு அமைவாக அரசின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நாடகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்கின.

காலத்துக்குக் காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகளையும் நுஆ உட்பட தனி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரையும் இணைத்து முஸ்லிம் கூட்டு முன்னணி ஒன்றை அமைத்துத் தேர்தலுக்கு முகம்கொடுப்பது என்ற ஒரு கருத்து அரசினால் புதிதாக உருவாக்கப்பட்டது.இதனடிப்படையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு, அரசில் அங்கம் வகிக்காது ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

முஸ்லிம் கூட்டு முன்னணி என்ற பெயரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசசார்பு முஸ்லிம் கட்சிகளை இணைக்கும் பொறுப்பை ஒப்படைக்க பொருத்தமான சிவில் அமைப்பும் தெரிவு செய்யப்பட்டது. அதுதான் `உம்மா' அமைப்பாகும். `உம்மா' ஒரு அரசியல் நோக்கோடு உருவாக்கப்பட்டு, பின்னர் தேர்தலில் பங்குகொள்ளாத ஒரு சமூக அமைப்பாகச் செயற்பட்டு வருகிறது. ஆனாலும் இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பிலுள்ள பலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள சிலரின் சகபாடிகள் அல்லது உறவினர்களாவர். இவ்வமைப்பு, முஸ்லிம் கட்சிகளுடன் இக்கூட்டு முன்னணியை அமைப்பது சம்பந்தமாகப் பேசியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் `உம்மா' அமைப்பினர் பேசிய முதல் சுற்றுப் பேச்சில் கூட்டு முன்னணியின் அவசியம் பற்றி அதன் பிரமுகர்கள் பிரஸ்தாபித்தனர். இக்கூட்டு முன்னணி அமைப்பதற்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கையளவில் சம்மதம் தெரிவித்தது. `உம்மா' பிரமுகர்கள் முன்னதாக ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் பேசியதற்கு அமைவாக அக்கட்சிகள் மரச்சின்னத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்திருப்பதாகவும் பொதுச் சின்னம் ஒன்று தெரிவு செய்யப்படல் வேண்டும் எனத் தெரிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எடுத்துரைத்தனர்.

ஆனாலும், இவ்விடத்தில் அமைக்கப்படவேண்டிய முஸ்லிம் கூட்டு முன்னணி மரச்சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியத்தையும் அதற்கான நியாயங்களையும் `உம்மா' பிரமுகர்களுக்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக விளக்கியது.

அவையாவன:

தேர்தலொன்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தினால் கட்சியொன்று பதிவு செய்யப்படுவது இடைநிறுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி எவ்வகையிலும் முஸ்லிம் கூட்டு கூட்டணியைத் தேர்தலுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது என்பதால் முஸ்லிம் கட்சிகள் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டோம்.

சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ற கருத்து `உம்மா'வினால் முன்வைக்கப்பட்ட போது, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலுள்ள பாதகமான அம்சத்தை விளக்கியது. அதாவது மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதால் சுயேச்சைக் குழுவொன்று கட்சியாகப் பார்க்கப்படமாட்டாது. மூன்று வெவ்வேறு கட்சிகளாகவே சுயேச்சைக் குழுக்கள் அடையாளம் காணப்படும். இதனால் இரண்டு `போனஸ்' ஆசனங்களைப் பெறும் தகுதியை நாம் இழந்துவிடுவோம். எனவே, கூட்டு முன்னணி உருவாக்கப்படுவதன் அடிப்படை நோக்கமான நமது ஆட்சியைக் கிழக்கில் ஏற்படுத்துவது என்பது சாத்தியமாகாமற்போகும்.

அதுமட்டுமன்றி நாம் முஸ்லிம் கூட்டு முன்னணியாக மூன்று மாவட்டங்களிலும் அதிகூடிய வாக்குகளையும் அதிக ஆசனங்களையும் கைப்பற்றினாலும் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் நாம் அதிக வாக்குகளையோ அதிக ஆசனங்களையோ பெற்ற ஒற்றைக் கட்சியாகப் பார்க்கப்படமாட்டோம். எனவே, தனிக்கட்சி என்ற அடிப்படையில் நம்மைவிட குறைந்த ஆசனங்களைப் பெறும் வேறொரு கட்சியையே ஆளுநர் ஆட்சியை அமைக்க அழைப்பார். இந்த வகையில் அக்கட்சி பெரும்பாலும் அரசாங்கமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கூட்டாக இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே இருக்கும். எனவே, முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் இம்முடிவு அரசுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் மறைமுகமாக வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் தெளிவுபடுத்தினோம்.

ஏனைய கட்சிகளின் சின்னங்களை விட அதாவது புறா (நுஆ), குதிரை (தேசிய காங்கிரஸ்), மயில் (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்) ஆகியவற்றை விட மரச்சின்னம் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. 20 வருடங்களுக்கும் மேலாக மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பது. எனவே, மரச்சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானதாகும் என்று கூறினோம்.

இன்று ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாகவும் கிழக்கைச் சேர்ந்த தனி அமைச்சர்களாகவும் இருக்கின்ற அனைவரும் `மரத்தினால்' அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அமைச்சர்களான அமீரலி, நஜீப் ஏ மஜீத், நிஜாமுதீன் ஆகியோரின் இன்றைய பாராளுமன்றக் கதிரைகள் மரச்சின்னத்தின் மூலமே பெறப்பட்டவை என்பதையும் நினைவூட்டினோம். இவ்வாறு யதார்த்தமிருக்கையில் ஏன் இவர்கள் மரச்சின்னத்தில் கூட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றினூடாகத் தேர்தலில் போட்டியிட முடியாது? என்றும் கேள்வி எழுப்பினோம்.

எமது விளக்கங்களில் உள்ள நியாயங்களை விளங்கிக் கொண்ட `உம்மா' அமைப்பின் பிரமுகர்கள் மற்றைய கட்சிகளைச் சந்தித்துவிட்டு மீண்டும் எங்களைச் சந்திப்பதாகக் கூறினர். மேலும், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மரச்சின்னத்தில் போட்டியிடுவதை அறவே விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும், அவர்களிடம் இந்த நியாயங்களை நாம் கூறிப்பார்க்கிறோம் என்று தெரிவித்த `உம்மா' அமைப்பினர் எல்லா முஸ்லிம் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்தித்துப் பேசவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் தெரிவித்து விடைபெற்றுச் சென்றனர்.

ஏனைய முஸ்லிம் கட்சிகளைச் சந்தித்துவிட்டு `உம்மா' மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை இரண்டாவது தடவையாகச் சந்தித்தது. இச்சந்திப்பில் மரச்சின்னத்தில் போட்டியிட அரச சார்பு முஸ்லிம் கட்சிகள் தயாரில்லை என்பதை தெளிவாகச் சொன்ன ்உம்மாீ பிரமுகர்கள் எங்களை மரத்திலிருந்து இறங்கிவரச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துரைத்தோம். எங்களுடைய விடாப்பிடியானது கௌரவப் பிரச்சினையின் பாற்பட்டதல்ல என்றும் நிச்சயமாக எமது நிலைப்பாடு எமது முதலாவது சந்திப்பில் சொல்லப்பட்ட நியாயங்களின் பாற்பட்டதாகும் என்றும் மீண்டும் அவர்களுக்கு விளக்கினோம்.

பாராளுமன்றத்தில் சந்திப்பு

பாராளுமன்றத்தில் முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்கள் சிலரும் சந்தித்தோம். ஏற்பாட்டாளர்களான `உம்மா' பிரமுகர்களும் கிழக்கிலங்கைப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும் உடனிருந்தனர். ்உம்மாீத் தலைவரினால் நோக்கவுரை நிகழ்த்தப்பட்டது. எல்லா முஸ்லிம் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்த பின் தொக்கி நின்ற ஒரே விடயமான ்முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்ீ என்ற கருப்பொருள் தலைமை மேசையில் அப்படியே அசைவற்றுக் கிடந்தது. ்உம்மாீ தலைவரின் உரையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பேரியல் அம்மையார் பேசத் தொடங்கினார். அவரின் உரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளாக அமைந்தது. ்உம்மாீ வின் தனித்தனிச் சந்திப்புக்களில் முடிவு காண்பதற்கு எஞ்சியிருந்த அந்த விடயம் மூர்ச்சையாகி தொடர்ந்தும் அசைவற்றே கிடந்தது. முஸ்லிம் காங்கிரஸ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றே எல்லா முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

இக்கருத்துக்குப் பதிலளித்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் . அரசும் அதனுடன் இணைந்துள்ள பேரினவாத சிந்தனையைக் கொண்ட சில கட்சிகளும் முஸ்லிம்களுடைய உரிமையைப் பறிக்க எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், என்றுமே அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றார். "நாங்கள் அண்மையில்தான் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இருக்கிறோம். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதி நிறுத்தப்பட்டு நிவாரணமளிக்கப்படாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேருவது சாத்தியமில்லைீீ என்று ரவூப் ஹக்கீம் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

உடனே ஏனைய அமைச்சர்கள் கோரஸாகக் குரல் கொடுத்தார்கள். ்"அரசுடன் சேர்ந்து போட்டியிடாவிட்டால், ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியாமல் போகும். முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதை விரும்புகிறதா? இல்லையா? என்று சொல்ல வேண்டும்." என்பதே அந்த கோரஸாகும். அதாவது முஸ்லிம் காங்கிரஸுக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற விருப்பமில்லை என்ற எதிர்ப் பிரசாரத்தை கிழக்கு முஸ்லிம்களிடம் கட்டவிழ்த்து விடுவதற்கு அரசினால் ஏற்கனவே வகுத்துக்கொடுக்கப்பட்ட உபாய வியூகத்தின் அடிப்படைக்கு அமைச்சர்கள் வந்து சேர்ந்தார்கள். மேலும், மேலும் முஸ்லிம் காங்கிரஸை மடக்க முனைந்தார்கள். இந்த உபாயத்திற்கு ்உம்மாீவையும் கிழக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரையும் சாட்சிகளாக்கும் உள்நோக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
முகமாலையில் சிக்கிய படையினர்
எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
அம்மையார் கெடுத்த ஐ.எஸ்.ஜீ.ஏ.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com