Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
[27 - April - 2008] [Font Size - A - A - A]
நாரதர்

இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள் எண்ணிலடங்காதவை. அந்த வகையில் ஒரு படுகொலைக்கு ஒரு விசாரணைக் கமிஷன் என்ற வகையில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமையும் நாடறிந்த உண்மையாகும்.

இதனடிப்படையிலே மூதூரில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி படுலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் (Action Faim-ACF) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன பணியாளர்கள் பதினொரு பேரின் படுகொலையும் திருகோணமலை கடற்கரையில் கடந்த வருடம் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினையும் விசாரிக்கவென ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் அதற்கெதிரான சக்திகளின் செயற்பாடுகளும் மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

இவ்விசாரணைகளை, இனவாத சக்திகள் இக்கமிஷனின் செயற்பாடுகளை அரச சார்பற்ற நிறுவன மயப்படுத்தி அதன் விசாரணைப் போக்கை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 30ஆம் திகதி பிரசுரமான ஜே.வி.பி.சார்பு போக்குடைய லங்கா வார இதழில் மூதூர் மற்றும் திருகோணமலை படுகொலைகள் பற்றி ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் என்.ஜீ.ஒ. காரர்களின் அழுத்தம் என்ற தலைப்பில் பிரசுரமான கட்டுரை அதற்கு நன்று சான்று பகர்க்கின்றது.

அக் கட்டுரையில் பிரசுரமான முக்கிய குறிப்புக்களை தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வத் தொண்டு நிறுவன பணியாளர்களின் படுகொலை பற்றிய செய்தி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இச் சம்பவத்தின் போது இவ்விடயத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிக சிரத்தையுடன் செயற்பட்டு வந்தமை ஒன்றும் இரகசியம் அல்ல. பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்படுகொலைப் பழியை இராணுவத்தினரின் மீது சுமத்துவதில் பெரும் முயற்சியெடுத்து வருகின்ற அதேவேளை ஸ்கொட்லான்யாட் பொலிசாரின் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்தியிருந்தனர்.

இவ் ஆணைக்குழுவின் மூலமே திருகோண மலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விரு சம்பவத்தினது விஷேட தன்மையாதெனில் மூதூர் படுகொலையினை இராணுவத்தினர் மீதும் திருகோணமலை படுகொலையினை விஷேட அதிரடிப்படையினர் மீதும் சுமத்துவதற்கு இவ் அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அக்கறைகொண்டு செயற்பட்டு வருகின்றமையாகும். ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம் இக்குற்றச்சாட்டுக்களை பக்கச் சார்பின்றி விசாரணை செய்வதற்காகும்.

இவ் ஆணைக்குழு அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் அறிந்தோ அறியாமலோ அதற்கு அனுமதியும் வழங்கியுள்ளனர். இவ் விசாரணைக் குழுவின் விசாரணைகளை கண்காணிப்பதற்கென சர்வதேச அரச சார்பற்ற பிரதிநிதிகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அரச சார்பற்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதன் பின்னர் அங்கு வியாபித்திருக்கும் அரச சார்பற்ற பிரதிநிதிகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அரச சார்பற்ற நிறுவனங்களையும் அவற்றின் நபர்கள் பற்றியும் ஆராய்தல் முக்கியமானதாகும். உயர் நீதிமன்ற நீதியரசர் உடலகமவின் தலைமையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவுக்கு அரச சார்பற்ற பிரதிநிதிகள் சிலரும் உள்ளடங்குவதுடன் அதில் மிக முக்கிய பாத்திரத்தையுடையவர் டி.நேசையா என்பவராவர்.

இவ் விசாரணைக் குழு முன்னிலையில் பல தரப்புகள் முன்னின்று செயற்படுகின்றன. அதில் மிகவும் முன்னணி வகிப்பவை அரச சார்பற்ற நிறுவனங்களாகும். விசாரணைக் கமிஷன் 17ஆம் திகதி ஆரம்பமானதன் பின்னர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உட்பட 10இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தன. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிரேஷ்ட சட்டத்தரணி டெஸ்மன்ட் பெர்னாண்டோ தலைமையில் சுமார் இருபது சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.

மீண்டும் நாம் நீதிபதி நேசையா பக்கம் எமது கவனத்தை செலுத்துவோம். இராணுவத்தினர் சார்பில் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ள கோமின் தயாசிறி தெரிவித்த கருத்தின்படி நேசையா என்பவர் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இப்பழியை இராணுவத்தினர் மீது சுமத்துவதற்கு மிகுந்த பிரயத்தனத்தை கைக்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்களில் மிக முக்கிய இடத்தை வகித்து நிற்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தினுலுள்ள நபரொருவராவார். மற்றும் அவர் அந்நிலையத்தின் ஆலோசகருமாவார். அவர் அவ் நிறுவனம் சார்பாக கையொப்பமிடப்பட்டுள்ள பல ஆவணங்களையும் சட்டத்தரணி கோமின் தயாசிறி எடுத்துரைத்துள்ளார். நேசையா விசாரணைக் கமிஷனுக்கு வழங்கியுள்ள முகவரியும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினதாகும். மின்னஞ்சல் முகவரியும் அவ் அமைப்புக்கு சொந்தமானதாகும். இதற்கமைய நேசையாவுக்கு விசாரணைக்கமிஷனில் நீதிபதியாக இருப்பதற்கு எவ்வித தகுதிகளும் இல்லை.

இதனால் இவ்வாறானவொரு நபரொருவரினால் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வு சூனியமானவொன்றாகவே அமையுமென சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். அடுத்ததாக தமக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துகுமிடையிலுள்ள தொடர்பை விசாரணை கமிஷன் முன்னிலையில் தெரிவிக்காததும் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் புலப்படுவதாவது, அரச தரப்பினர் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன என்பதாகும்.

அதேவேளை, கடந்த மாதம் 24 ஆம் திகதி விசாரணை கமிஷன் ஆரம்பிக்கப்பட்டவேளை சட்டத்தரணி டெஸ்மன் பெர்னாண்டோ இப் பதினேழு அரசசார்பற்ற நிறுவன பணியாளர்களும் யாரால் கொலை செய்யப்பட்டார்கள் என்பது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்தார். அத்தகவலை தமக்கு மனித உரிமைகள் மற்றும் இயற்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சரே தெரிவித்தார் என அவர் தெரிவித்த கூற்று பாரிய சர்ச்சைக்குள் ளானது. (இங்கு இவர் அமைச்சர் மகிந்த சமரசிங்ஹவின் பெயரைக் குறிப்பிடாது அமைச்சுப் பதவியை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.)

இக்கட்டுரையினூடாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் விசாரணைக் கமிஷன் மீதும் பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இப்படுகொலைகளை செய்யவில்லையென எடுத்துக்காட்ட முனையும் இக்கட்டுரையாளர் விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. மறைமுகமாக விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதற்கு எத்தனித்துள்ளனர். விட்டால் இக்கட்டுரையாளர் இப்பழியை மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினர் மீது போட்டாலும் போட்டுவிடுவார்.

இவ்விசாரணை கமிஷன் செயற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இவ் வேளையில் மாண்புமிக்க சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவினரின் வெளியேற்றம் (International Independent Group Of Eminent Persons - IIGEP) மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மனித உரிமை அமைப்பின் (UTHR) அரசுக்கெதிரான காட்டமான அறிக்கை என்ற இரு நிகழ்வுகளும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க மீண்டும் உதவியுள்ளது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்கு சிங்களவர்களும் இரு தமிழர்களும் இரு முஸ்லிம்களும் என எட்டுப்பேர் நீதிபதிகளாக அங்கம் வகிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவ் ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் ஆரம்பிக்கப்பட்டது.

அதேவேளை, அரசுத் தரப்பில் எழுந்த மிகக்காட்டமான விமர்சனங்களினாலேயே சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவினர் கண்காணிப்பு பணியிலிருந்து விலகிக்கொண்டனர். இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பும் கமிஷனின் நோக்கமுமாகும்.

யுத்தத்தின் கொடூர வடுக்களின் ஒன்றே இவ் இரு படுகொலைகளும். இதேபோல் இன்னும் ஏராளம் உள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் திரைப்பட இயக்குநர் ழான் ரெனாயர் தெரிவித்த கூற்றொன்றை குறிப்பிடுதல் மிகப் பொருத்தமாய் அமையும். "ஒரு நாடு போர் தொடுக்கிறது என்றால் அந்த நாட்டில் இருக்கிற அனைவரும் போரை ஆதரிக்கின்றார்களா? இல்லை. தங்களின் ஆணவத்தால் போரை அறிவிக்கும் அதிபர்கள் நேரடியாக போர்க்களத்தில் ஈடுபடுகிறார்களா? இல்லை. தங்கள் குடும்பத்தை காக்க வேலைக்குச் சேர்ந்த இராணுவ வீரனே கொல்கிறான், கொல்லப்படுகிறான். மக்களே மக்களைக் கொல்ல பதவியில் இருப்பவர் பாதுகாப்பாக வெற்றி பெறுகிறார். போர் என்பதே மனித நேயத்தின் தோல்வி ! அதில் வெற்றி எப்படி இருக்க முடியும்?" இக்கூற்று இலங்கைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறதல்லவா?

Email this page Your Opinion Print this page
முகமாலையில் சிக்கிய படையினர்
எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
அம்மையார் கெடுத்த ஐ.எஸ்.ஜீ.ஏ.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com