*அகில இலங்கை தமிழர் கூட்டணி முதல்வர் கலாநிதி விக்னேஸ்வரனுடனான நேர்காணல்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களான நமது தனித்துவமும் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்விடயத்தில் திருகோணமலைத் தமிழ் மக்களின் பங்கு மகத்தானது. தமது வாக்குகளை உதிரிகள் மீது விரயம் செய்யாது பயன்படுத்த வேண்டும் என அகில இலங்கை தமிழர் கூட்டணி முதல்வரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான கலாநிதி கா.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தம்முடைய கட்சி தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் எமக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் எமக்களித்த சுருக்கமான பேட்டியின் விபரம் வருமாறு;
கேள்வி: உங்கள் கட்சி எப்போது ஸ்தாபிக்கப்பட்டது? அதன் அடிப்படைக் கொள்கை என்ன?
பதில்: எமது கட்சி 2005 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் சமஷ்டி ஆட்சியை நிறுவுவதும் வடக்கு- கிழக்கை இணைப்பதும் எமது அடிப்படைக் கொள்கையாகும்.
கேள்வி: ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எவ்.எப். போன்ற கட்சிகளுடன் கூட்டமைத்து சேர்ந்து தேர்தல் கேட்பது பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?
பதில்: சிந்தித்தோம். பேச்சுவார்த்தையும் நடாத்தினோம். அரசாங்கத்திடம் பணம் வாங்கும் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவது மிகவும் கடினம் என்ற முடிவுக்கு வந்தோம். எம்மைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் இன்றைய தேவை சுயசக்தியுடன் இயங்கும் தமிழ்க் கட்சியேயாகும்.
கேள்வி: நீங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எத்தனை ஆசனங்களைப் பெறுவீர்கள்?
பதில்:திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து தமிழ் மக்களுடைய ஆதரவும் எனக்குத்தான் உண்டு. தமிழ் மக்கள் எமது தனித்துவத்தையும் தமது பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க கங்கணம் கட்டியுள்ளார்கள். எனவே, எமது கட்சி குறைந்த பட்சம் 3 ஆசனங்களைப் பெறும்.
கேள்வி: மூன்று ஆசனங்களைக் கொண்டு உங்களால் எதனைச் சாதிக்க முடியும்?
பதில்: எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கூட்டமைப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. அவ்வாறான நிலையில் மாகாணத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு எமது கட்சியின் கையில் தான் இருக்கும்.
கேள்வி: யுத்தத்தாலும் கடல்கோளினாலும் இடம்பெயர்ந்தவர்களின் எதிர் காலம் என்ன?
பதில்: இடம்பெயர்ந்த அனைவரும் தத்தமது வதிவிடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர். வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தொழில் வசதிகள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
கேள்வி: புனரமைப்பு, அபிவிருத்தி பற்றி சுருக்கமாகக் கூறமுடியுமா?
பதில்: எமது 50 அம்சத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளன.
கேள்வி: திருகோணமலை மாவட்ட மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?
பதில்: தமிழ் மக்களான நமது தனித்துவமும் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்விடயத்தில் திருகோணமலைத் தமிழ் மக்களின் பங்கு மகத்தானது. தமது வாக்குகளை உதிரிகள் மீது விரயம் செய்யாது எமது கூட்டணியின் சின்னமான தோடம்பழத்திற்கு வாக்குகள் எல்லாவற்றையும் அளித்து எம்மைப் பலப்படுத்தும் படி நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு கலாநிதி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் தலைசிறந்த பொறியியலாளர்களில் ஒருவரான கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன் தனது கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 66 வயதையுடைய இவர் முதலாம் வகுப்பில் எந்திரவியல் பட்டம் பெற்றவர். கனடாவிலுள்ள வோட்டர்லூ பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
1964 ஆம் ஆண்டு திருகோணமலையில் புகையிரதத் திணைக்களத்தில் எந்திரவியல் உதவியாளராக தொழில் ஆரம்பித்த கலாநிதி விக்கினேஸ்வரன், பின்னர் நீர்ப்பாசன எஞ்சினியர், பிரதம எஞ்சினியர், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 10 ஆண்டுகளாக அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் இலங்கை எந்திரிமார் நிறுவனத்தின் கௌரவ உயர் உறுப்பினருமாவார்.
1988 ஆம் ஆண்டு வடக்கு- கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட காலத்தில் இலங்கை எந்திரவியல் சேவையைச் சேர்ந்த கலாநிதி விக்னேஸ்வரன், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு புதிய நிர்வாகத்திற்குத் தேவையான அனைத்து நிறுவனங்களையும் அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர் கலாநிதி விக்னேஸ்வரன் ஆவார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையின் தலைவராகவும் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றிய கலாநிதி விக்னேஸ்வரன் அண்மைக்காலத்தில் மக்கள் வங்கியின் பணிப்பாளர் ஒருவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அரசியல் ரீதியாகவும் ஈ.பி.டி.பி. அமைப்புடன் சேர்ந்து பணியாற்றிய கலாநிதி விக்னேஸ்வரன் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய யாப்பின் நகலை சமர்ப்பிப்பதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஈ.பி.டி.பி. சார்பில் கலந்துகொண்டார். அக்கால கட்டத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். கருத்து வேற்றுமை காரணமாக கலாநிதி விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பி.யில் இருந்து 2005 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் தம்மை விலத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து அகில இலங்கை தமிழர் கூட்டணியை அவர் ஸ்தாபித்தார்.
2006 ஆம் ஆண்டில் சர்வ கட்சி மாநாட்டிற்கும் சர்வ கட்சிப் பிரதிநிதி குழுவுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் கலாநிதி விக்னேஸ்வரனும் இடம்பெற்றார். சமஷ்டி யாப்பினை சிபார்சு செய்த அக்குழுவினது பெரும்பான்மை அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் கலாநிதி விக்னேஸ்வரனும் ஒருவராவர்.