Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
[27 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.சாந்தி

நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் எப்படி அதிகரிக்கின்றதோ அதேபோல் பொருட்களின் விலைவாசிகளும் அதிகரிக்கின்றன. சாதாரண பொருட்கள் கூட இன்று யானை விலை குதிரை விலைக்கு ஏறிவிட்டது. சராசரி மாதச் சம்பளம் 7,000 ரூபா பெறுபவர் கூட முன்பு முழுக் குடும்ப செலவையும் ரூபா 5,000 இற்கு சமாளிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், இன்று 7,000 சம்பளம் பெறுபவருக்கு கூட 10,000 இற்கு மேலேயே வாழ்க்கைச் செலவு செல்கின்றது. அதிலும் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் தான் பெரிதும் மக்கள் திண்டாடிப் போய் உள்ளனர்.

ஆரம்பத்தில் சமையல் எரிவாயுவின் விலையும் மண்ணெண்ணெய் விலையும் பால் மாவின் விலையும் அதிகரித்திருந்த போதே மக்கள் கஷ்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து அதிரடியாக சீனி, மா, தேங்காய், மரக்கறி வகைகள் என கூடிச் செல்ல ஆரம்பித்தன. தற்போது பேரிடியாக அரிசியின் விலையேற்றமே மக்களை தாக்கியுள்ளது. இந்த விலையேற்றத்தால் பாமரமக்கள் மாத்திரமன்றி மேல் வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. அரசின் இந்த அதிரடியான விலையேற்றத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை கருத்துகளாக எம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

விலைவாசி ஏற்றம் தொடர்பாக பெரிதும் புலம்பித்தள்ளுவது இல்லத்தரசிகளே... எனவே, நாம் முதலில் சந்தித்ததும் ஓர் இல்லத்தரசியையே... திருமதி அனிட்டா ஜோர்ஜ் (மூன்று பிள்ளைகளின் தாய்) இவருடைய கருத்து இவ்வாறு அமைந்தது. நான் கடைதெருக்களுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில்லை. இருப்பினும், வீட்டிற்கு வேண்டிய உணவுப் பொருட்களை நானே எழுதி அனுப்புவேன். கடையில் இருந்து பொருட்களோடு பில்லும் இணைத்து வரும். நான் திருமணம் முடித்த காலத்தில் இருந்து இவ்வாறு தான் ஓடர் செய்து பொருட்களை வரவழைப்பேன். இருப்பினும், அண்மைக் காலமாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் தலையைச் சுற்றுகிறது. என் கணவரின் வருமானத்தில் வீட்டுச் செலவுகள் போக மீதம் என ஒன்று முன்பெல்லாம் இருந்தது. ஆனால், இப்போது அது அடியோடு இல்லாமல் போய்விட்டது. இது பிள்ளைகள் வளர வளர அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் போகவில்லை. பெரும்பாலும் உணவுப் பொருட்களுக்கே செலவாகிறது. இன்று அரிசி 1 கிலோ 105 ரூபாவிற்கு போய்விட்டது. சாதாரண குடும்பமான எங்களுக்கே இந்த நிலையென்றால் அன்றாடம் வேலை செய்பவர்களின் நிலை என்னவோ சொல்ல தெரியவில்லை. அரசாங்கம் அரிசியின் விலையை மாத்திரம் குறைத்தால் போதாது பால்மா, தேங்காய், மாவு போன்ற பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என்பதே என் கருத்து.

அடுத்து நாம் சந்தித்தது தையல் நிலைய உரிமையாளர் ஒருவரை...

செல்வி தர்ஷினி (இவருடைய நிலையத்தில் ஆறு பெண்கள் வேலை செய்கின்றனர்)

கேள்வி: அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் நீங்கள் எவ்வாறான சிரமங்களை மேற்கொள்கிறீர்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் பெரிய குடும்பகாரி என்று சொல்ல முடியாது. இருந்தாலும் என்னிடம் வேலை செய்யும் பெண்கள் குடும்பக்காரர்கள். அவர்களுக்கு நான் கொடுக்கும் பணம் பெரிய அளவில் என்று சொல்ல முடியாது. இருப்பினும், அதிலும் அவர்கள் சமாளித்து குடும்பத்தை நடத்த படும் பாடு நான் அறிவேன்.

இப்ப நீங்க வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு கூட நான் சொல்லிக் கொண்டிருந்தேன். இனிமேல் இப்படி பால் ரீ நல்லா குடிக்க முடியாது. மாவை கொஞ்சம் குறைத்து போடுங்க என்று ஏன் என்றால் என்னுடைய தொழிலை பொறுத்தவரையில் ஓடர்கள் வந்தால் தான் பணம். அதுவும் பொருட்களின் விலையேற்றத்தால் நாங்களும் தையல் கூலிகளை உயர்த்திவிட்டோம். அப்போ ஏதாவது பெருநாள், திருநாள் என்றால் தான் ஓடர்களும் வருகிறது. அதனால் அரசு உண்மையில் மக்கள் மீது அக்கறை உடையதாக இருந்தால் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தொடர்ந்து ஐந்துலாம்புச் சந்தியில் ஆட்டோ தரிப்பிடத்தில் நிற்கும் ஆட்டோ சாரதிகளிடம் கருத்தினைக் கேட்ட போது... கிங்ஸிலி (2 பிள்ளைகளின் தந்தை) நாங்கள் அன்றாடம் ஆட்டோ ஓட்டித்தான் எங்கள் குடும்ப செலவுகளை சமாளிக்கின்றோம். இப்ப பாருங்க நான் 2 மணித்தியாலமாக நிற்கிறேன் ஒரு ஹயர் கூட கிடைக்கவில்லை. பாடசாலைக்கு போற பிள்ளைங்க இருக்காங்க. ஒவ்வொரு நாளும் அவங்கட படிப்புச் செலவை கவனிக்கணும், பஸ் செலவு, வீட்டு சமையல் சாமான்களின் செலவு, மின்சாரம், தண்ணீர், வாடகை இப்படி நாளுக்கு நாள் செலவு கூடிக்கொண்டே போகுது. பெற்றோல் விலையை உயர்த்தினாங்க நாங்களும் ஹயர் விலைகளை உயர்த்தினோம். சவாரி ரொம்ப குறைஞ்சிட்டுது. எப்படிங்க நாங்க குடும்பத்த காப்பாத்துறது. அரிசி விலையை குறைச்சிட்டோம் என்று அறிவிச்சாங்க நான் நேத்துக் (22.04.2008) கூட அரிசி வாங்கினேன் ரூபா 105. நாங்க மொத்தமா வாங்கிறதில்லையே அன்றாட கூலிகாரங்க அன்றன்றைக்கு தான் வாங்குவோம். நான் அரசாங்கத்திடம் கேட்கிறது ஒன்னுதான். நாங்க ஏஸியில் இருந்து உழைப்பவர்கள் அல்ல. மாதச் சம்பளம் வாங்குபவர்களும் அல்ல என்னைப் போல எத்தனையோ இலட்சம் பேர் இந்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை மனதில் வைத்தாவது இந்த அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மாவு, சீனி, பால் மா போன்றதுகளின் விலையை குறையுங்கள்.

நசீர் (கூலி ஆட்டோ ஓட்டுபவர்) இந்த பொருட்களின் விலையேற்றத்தை உடனே அரசு குறைக்க வேண்டும். எங்களைப் போன்ற அன்றாட உழைப்பாளிகளுக்கு இது ரொம்ப கஷ்டம். அதுவும் நான் சுமார் ஒரு நாளைக்கு ரூபா 1,000 உழைக்க வேண்டும். ஆட்டோ வாடகை 300 ரூபா, வீட்டு செலவுக்கு 500 ரூபா கொடுக்க வேண்டும். நான் காலையிலேயே ஆட்டோ எடுத்து வந்து விடுவதால் பகல் உணவு வெளியில் தான் சாப்பிடுறது. அதை தவிர பெற்றோல் அடிக்கணும் ஆட்டோவில் ஏதேனும் உடைந்தால் திருத்தணும் இப்படி எங்களுக்கு எவ்வளவோ இருக்கம்மா. நாங்கள் எல்லாம் இன்னும் அடி மட்டத்திலேயே தான் இருக்கிறம். எங்களுக்கெல்லாம் சேமிப்பென்பதையே நினைத்துப் பார்க்க முடியாது. அரசாங்கம் தன்னுடைய மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் எங்களுடைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தாலே போதும். முன்பெல்லாம் கோழி இறைச்சி வாரத்திற்கு ஒரு நாளாவது சாப்பிடுவோம். இப்ப அதுவும் குறைஞ்சிட்டுது. மரக்கறிகளின் விலை கூட கூடிட்டுது. சும்மா ஆடம்பர பொருட்களான பென்சி அயிட்டங்கள், உடைகளின் விலையை ஏற்றிட்டு இந்தப் பொருட்களின் விலைகளை குறைக்கலாமே.

நான்காம் குறுக்குத் தெருவில் உள்ள T.M.P. என்டர் பிரைஸ் உரிமையாளர் தேவதாஸிடம் கருத்தினைக் கேட்டபோது... தினக்கூலி வேலை செய்பவனுக்கும் சரி, மாத வருமானம் பெறுபவனுக்கும் சரி இது நெருக்கடியான வேலைதான். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், மரக்கறி வகைகளின் விலையேற்றம், தேங்காய் போன்றவற்றின் விலைகளை அரசு குறைத்தால் நல்லது. முன்பெல்லாம் ஒரு பட்ஜெட் போட்டு வாழக்கூடியதாக இருந்தது. இப்போ பட்ஜெட் போட்டு வைத்துவிட்டு திரும்பி பார்த்தால் பட்ஜெட்டுக்கு மேல் விலைகள் போய் இருக்கும். ரொம்ப இல்ல இப்ப மூன்று நான்கு மாதத்திற்கு முன்பு ரூபா 500 இருந்தால் அரிசி, மாவு, சீனி, தேங்காய் என்று ஒரு வாரத்திற்கான சகல பொருட்களையும் வாங்கலாம். இப்ப இதற்கே ரூபா 1,500 தேவைப்படுகிறது என்றால் பாருங்கள். நான் முதலாளியாக இருப்பதால் பரவாயில்லை. இருந்தாலும், என்னிடம் வேலை செய்பவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கும் குடும்பம் இருக்குதானே மாத வருமானத்தை வைத்து வாழ்வதிலும் பிரச்சினைதான்.

கேள்வி: இவர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கலாம்தானே...

பதில்: சம்பள உயர்வு கொடுக்கலாம். அது அரசைப் போல் அடிக்கடி உயர்த்த முடியாதே. எங்களுக்கு பொருட்கள் கொண்டு வருபவர்களுக்கு பணம் கொடுக்கணும். பொருட்களை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் இப்படி அனைத்தையும் அடக்கியுள்ளோம். விற்பனையில் அரிசி விலையை நாங்கள் கூட்டி விற்கவில்லையே. நாங்களே கூடிய விலையில்தான் கொள்வனவு செய்தோம். பின்னர் எப்படி நாங்கள் அடிக்கடி சம்பள உயர்வு கூட்ட முடியும். ஆனால், அரசு நினைத்தால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகளைக் குறைக்கலாம்.

நான்காம் குறுக்குத் தெருவில் கூலி வேலை செய்யும் ரமேஷ், கூறிய கருத்து... நாங்க அக்கா அன்றாடம் மூடை தூக்கினால் தான் எங்களுக்கு காசு. ஒரு மூடைக்கு ரூபா 5 தருவாங்க. அரிசிக் கடையில் இப்போ அரிசி இல்லை. இன்றைக்கு மொத்தமே பத்து மூட்டைதான் வந்துச்சு. அதை மூன்று பேர் பகிர்ந்து தூக்கினோம். நான் 4 மூடைகள் தூக்கினேன். ரூபா 20. காலையில் இருந்து சாப்பிட இல்லை. ஒரு பிளேன் ரீ 20 ரூபா. எப்படி குடிக்கிறது. நாங்கள் அன்றாடம் உழைப்பவர்கள். அதனால் அன்றன்றைக்குத் தான் பொருட்கள் வாங்குறம். முன்பு என்றாலும் சோறும் தேங்காய் சம்பலுடன் என்றாலும் சாப்பிட்டு வந்தோம். இப்ப அதற்கும் கஷ்டம் வந்திடுச்சு. அரிசி ரூபா 70 , தேங்காய் 40- 45 என்று ஏத்திட்டாங்க. அரசாங்கம் ஓட்டு கேக்கிற நேரத்தில மாத்திரம் எங்கள மனிதர்களா நினைக்கிறாங்க. இப்படி விலையை ஏத்தக்க எங்கள நினைக்க மாட்டாங்களா?

வி.பார்த்த சாரதி (கூலி வேலை செய்பவர்) நாட்டில சாராயத்துட விலை, ஆடம்பர பொருட்களுடைய விலையை ஏத்தினா பரவாயில்லை. எங்கட வயித்தில அடிக்கிற மாதிரி அன்றாட சமையல் பொருட்களோட விலையை உயர்த்தினா எப்படி? முன்பு ரூபா 50 க்கு இடியப்பம் வாங்கினா ஐந்து பேர் சாப்பிடலாம். ஆனா, இப்ப ரூபா 150 க்கு வாங்கினாதான் 5 பேர் உணவு. அத்தியாவசியமான அரிசி, சீனி, மாவு விலைகளைக் குறைத்தாலே போதும். மண்ணெண்ணெய் விலையையும் குறைக்க வேணும் என்று தனது ஆதங்கமான கருத்தினை கூறினார்.

மக்கள் அனைவருமே கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், எரிபொருட்களின் விலைகளை நாளுக்கு நாள் உயர்த்துவது மாத்திரமன்றி... அன்றாட உணவுப் பொருட்களை கூட விலையேற்றத்தின் பேரில் மக்களிடம் இருந்து விலக்கி விடுகிறது. அரிசியின் விலையை குறைத்து விட்டோம் என்று கூறியபோதிலும் அரிசியின் விலை கடைக்கு கடை வித்தியாசமான விலைகளில் விற்கப்படுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

விலைகளை கூட்டி விற்கும் கடைக்காரர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற போதிலும் இந்த விலை உயர்வு நடைபெறுகிறது. அத்தோடு, சில கடைகளில் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு தெரியும் எப்படியும் எமது நாட்டின் தேசிய உணவான நெல் அரிசி சோற்றினை யாரும் கைவிடார். எவ்வளவு எதிர்த்த போதிலும் விலை கூட்டிக் கொடுத்தேனும் அரிசியை வாங்குவார்கள் என்று நினைத்து இன்னும் ஓரிரு வாரங்களில் அரிசியின் விலையைக் கூட்டி விடுவார்கள் என்றும் கொச்சிக்கடையில் வசிக்கும் பெண்மணிகள் தமது கருத்துக்களை ஒன்றிணைந்து கூறினார்கள்.

இதேவேளை பொருட்களை விற்பனை செய்யும் சில்லறைக் கடைச் காரரிடம் இதே கேள்வியை எழுப்பிய போது...

நாட்டில் சகல பொருட்களுக்குமே விலை கூடிவிட்டது. நாங்கள் சில்லறைக் கடையில் தொழில் புரிவதால் அன்றாடம் எங்களுக்கு பெரிய பாதிப்பில்லை. இருந்தாலும் எங்களுக்கும் கஷ்டம் உள்ளது. எங்களுடைய முதலாளிமார்களும் அரிசியை கூடிய விலைகொடுத்து மொத்தமாக வாங்கிவிட்டார்கள். ஒரே நாளில் அதனை குறையுங்கள் என்றால் இவர்களுக்கு பெரிய நஷ்டம் தானே. எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்தால் நாங்களும் வேண்டிய பொருட்களை கூறும் விலைக்கு வாங்கலாம். சம்பளம் குறைவு அதே நேரம் பொருட்களின் விலை கூடுதல் எனும் போது தான் மக்கள் ஆத்திரமடைகின்றனர். அரச நிறுவனங்களுக்கு மாத்திரமன்றி தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அரசு சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் இவர்.

அக்கடையில் பொருட்களை வாங்க வந்திருந்த ஒரு பெண்மணியிடம் கருத்து கேட்டபோது...

இவங்க குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி போட்டிருந்த வேளையில் அரசி விலையை அதிகரிக்க சொல்லியிருந்தால்... இருந்தால் என்ன விலை அதிகரிக்க எண்ணியுள்ளது என்ற செய்தியைக் கேட்டாலே ஒரே நாள் இரவில் கூட்டி விடுவார்கள். ஆனால் விலையை குறைக்கச் சொன்னால் தான் எல்லா கதைகளையும் சொல்கிறார்கள்.

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
முகமாலையில் சிக்கிய படையினர்
எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
அம்மையார் கெடுத்த ஐ.எஸ்.ஜீ.ஏ.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com