Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
[27 - April - 2008] [Font Size - A - A - A]
மப்றூக்

"கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது முதலமைச்சர் பதவிக்காக அல்ல" என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் செய்திதான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இப்போது ஆவிபறக்கும் செய்தியாகும். "முதலமைச்சர் பதவி தேவையில்லை என்றால் நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் தான் என்ன?" என்று கேட்கும் எதிர்த்தரப்பாரின் கேள்விகளுக்கு மு.கா.தரப்பிலிருந்து இன்னும் ஆணித்தரமான பதில்கள் எவையும் வந்து சேரவேயில்லை. உண்மையாகவே ஏன் இவ்வாறு ஹக்கீம் கூறினார் என்பதே இன்றைய விவாதத்துக்குரிய விடயமாகும். இவ்வாறு சொல்லியதன் மூலம் மு.கா. தலைவர் குழம்பியுள்ளாரா அல்லது குழப்புகின்றாரா என்பதுதான் இங்கு சாதாரண வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொருவரையும் குடையும் கேள்வியாகும்.

`பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகக்' கூட ஹக்கீமின் இந்தக் கருத்து மாறியிருக்கலாம். காரணம் இப்போதைக்கு முதலமைச்சர் ஒருவரை அதுவும் குறிப்பாக முஸ்லிம் முதலமைச்சரொருவரைப் பெற்றுக் கொள்வதுதான் தமது நோக்கம் என்று மு.கா.பகிரங்கமாகப் பிரசாரம் செய்யாமைக்கு ஆகக் குறைந்தது இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்பது நமது கணிப்பு.

1. தமிழ் மக்களின் வாக்குகளையும் இலக்கு வைத்தே இத்தேர்தலில் மு.கா.கூட்டணி தனது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதால் முதலமைச்சர் பதவி மு.கா.வுக்குத்தான் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் மனதில் ஒரு பதிவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஹக்கீம் இவ்வாறு கூறியிருக்கலாம். அதாவது முதலமைச்சர் பதவி முஸ்லிம்களுக்குப் போய்விடப் போகிறது என்று எதிர்த்தரப்பிலுள்ள தமிழ்க் கட்சிகள் பிரசாரம் செய்வதைத் தவிர்ப்பதற்காக இப்படி சொல்லியிருக்கலாம்.

2.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா.கூட்டணி தோல்வியடைந்தால் அப்போது ஏற்படும் சங்கடத்தைச் சரி செய்வதற்காக இப்போதே இப்படிக் கூறுவதன் மூலம் ஒரு அடித்தளத்தைப் போட்டு வைக்க முயன்றிருக்கலாம். (அதாகப்பட்டது, தோல்வியடைந்த பின்னர்- நாங்கள் அப்போதே சொன்னோம் தானே மு.கா. முதலமைச்சருக்காகப் போட்டியிடவில்லை என்று , ஆகவே, எதிர்பார்ப்பு இருந்தவர்களுக்குத்தான் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றம். எங்களுக்குத்தான் அந்த எதிர்பார்ப்பே இருக்கலியே என்று நீளமாக டயலாக் விடலாம்).

மு.கா.தலைவர் ஹக்கீம் நம்மால் மேற் சொல்லப்பட்டவைகள் அல்லது சொல்லப்படாதவைகள் என்று எதை நினைத்துச் சொல்லியிருந்தாலும் இந்தக் கூற்றினால் மு.கா. தொண்டர்கள் பலரே குழம்பிப் போயுள்ளனர். முதலமைச்சர் பதவிக்காக கட்சி போட்டியிடவில்லை என்றால் தலைவரின் நோக்கம் தான் என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆக வெளியாரின் வாக்குகளைக் கவர்வதற்காக மு.கா. தலைவரால் கூறப்பட்ட கருத்தானது இன்று அவரின் கட்சித் தொண்டர்கள் மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. ஆனால், இதற்காக குழப்பமடைந்த மு.கா.காரர்கள் தமது வாக்கினை எதிர்த்தரப்புக்கு அள்ளி வழங்கி விடுவார்கள் என்றெல்லாம் அபத்தமாகச் சொல்லி விட முடியாது.

இந்தவேளையில், அரசாங்கத் தரப்பில் போட்டியிடும் முஸ்லிம் தரப்புக்களும் ஒற்றைக் குரலில் இணைந்து சமூகம் சார்ந்த தீர்மானங்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது கிழக்கின் முதலமைச்சராக சுப்பன் வந்தாலும் பரவாயில்லை. சுலைமான் வந்தாலும் பரவாயில்லை அல்லது சிங்கள நபரொருவர் தெரிவானாலும் பரவாயில்லை. ஆனால், கிழக்கு மாகாணத்தவர் ஒருவர் முதலமைச்சராக வந்தாலே தனக்குப் போதுமென்கிறார் அமைச்சர் அதாஉல்லா. ஆனால், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான ஹிஸ்புல்லாவோ முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறுவதில் மிகவும் குறியாக இருக்கிறார். அதுவும் அந்த முஸ்லிம் தானாக இருக்க வேண்டுமென்பதில் அவருக்கு பெரும் அவாவும் இருக்கிறது! இப்படி, ஆளுக்கொரு `கதையும், காலும்' சொல்லிச் சொல்லியே முஸ்லிம் தலைவர்கள் (ஹக்கீம் உட்பட) நமது மகா ஜனத்தாரை ஒரு வழி பண்ணிவிடப் பார்க்கிறார்கள்!

கிழக்கு மாகாணத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு பிரதேசங்களின் தீர்மானங்கள் இம்முறை முஸ்லிம் அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அவதானிகளின் கருத்தாகும்! அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியுமே அப்பிரதேசங்களாகும். முன்னைய பிரதேசம் அமைச்சர் அதாஉல்லாவினதும், பின்னைய பிரதேசம் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினதும் சொந்த ஊர் என்பதோடு, அவர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள பிரதேசங்களுமாகும். அதனாலேயே இவ்வாறனதொரு கருத்து சொல்லப்படுகிறது. இந்த இரண்டு பிரதேசங்களையும் மேற்படி இருவரும் தமது பதவிகளைப் பயன்படுத்தி உச்ச அளவில் அபிவிருத்தி செய்து வைத்துள்ளனர். இதனால், நன்றிக் கடனுக்காகவும், இவர்களின் அபிவிருத்தியினால் கவரப்பட்டமையினாலும் இப்பிரதேசங்களின் பெருவாரியான மக்கள் இவர்களுக்கோ அல்லது இவர்களின் பிரதிநிதிகளுக்கோ வாக்களிப்பதற்கு தயாராகவே இருக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசம் என்பது அமைச்சர் அதாவுல்லாவுக்கு கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமாக ஆதரவுள்ளதொரு பிரதேசமாகும். சுமார் 24 ஆயிரம் வாக்காளர்கள் இப்பகுதியில் இருக்கின்றனர்! தற்போதைய தேர்தலில் அரசாங்கத்தரப்பினூடாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போட்டியிடுவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, அக்கரைப்பற்றில் தான் அமைச்சராக இருப்பதால் ஏனைய ஊர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனும் அடிப்படையில் அதாஉல்லா தனது தரப்பில் மூன்று வேட்பாளர்களை ஏனைய பிரதேசங்களில் நிறுத்தியிருப்பது பற்றியும் கடந்த வாரக் கட்டுரையில் நாம் விபரித்திருந்தோம்.

அமைச்சர் அதாஉல்லா அவரின் பிரதேச மக்களிடம் வெற்றிலைச் சின்னத்துக்கும் அவரது வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வாக்களிக்காவிட்டால் அக்கரைப்பற்று அதாஉல்லா எனும் எம்.பி.யை இழந்துவிடும் என்று கூறுகிறது அமைச்சரின் தரப்பு. இதைக் கொஞ்சம் இலகுவாக அல்லது கொச்சையாகக் கூறினால் ;

"அக்கரைப்பற்றுக்கு அதாஉல்லா எனும் எம்.பி. தேவையென்றால் அவர் சொல்லும் கட்சிக்கும் ஆட்களுக்கும் வாக்களியுங்கள். அதற்கு மாறாக நடந்தால் ஊருக்கு எம்.பி.கிடையாது போ....ீீ!

உண்மையாகவே அதாஉல்லா தரப்புக் கூறுவது போல் அவருடைய விருப்புக்கு மாறாக அவரின் பிரதேசம் இத்தேர்தலில் நடந்து கொள்ளுமானால் எதிர்காலத்தில் வரும் பொதுத் தேர்தலொன்றில் அதாஉல்லாவால் வெற்றி பெற முடியாது. அது மட்டுமன்றி சொந்த ஊரிலேயே தோற்றுப்போனவர் என்கின்ற அவமானத்தோடு தேர்தலின் பின்னர் அவர் அரச உயர்மட்டங்களைச் சந்திக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலையொன்றும் உருவாகிப்போகும். ஆனால், தமது பிரதேசத்தை அபிவிருத்திகளால் அலங்கரித்த தம் மண்ணின் மைந்தனை இவ்வாறு தோற்றுப்போகவும் அவமானப்படவும் அக்கரைப்பற்று மக்கள் விட்டுவிடுவார்களா என்பதே இங்கு எழும் மிகப்பெரும் கேள்வியாகும்.

காத்தான்குடியிலும் இதே நிலைதான். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அப்பிரதேச மக்கள் தேர்தலில் இயங்குவார்களா என்பது கேள்விக்குறியே. அப்படியென்றால் இந்நிலைமையை மு.காங்கிரஸ் எவ்வாறு முகங்கொள்ள முடியும் என்று நமது பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் உரையாடலொன்றினிடையே கேட்டு வைத்தோம். இதற்கு அவர் கூறிய பதில் சுவாரஸ்யமானது.

அக்கரைப்பற்றுப் பிரதேச மக்கள் அதாஉல்லாவுக்கு முரணாகச் செயற்பட்டால் தமதூருக்கான எம்.பி. ஒருவரை இழந்து விடுவார்கள் என்று கூறித்தானே வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அமைச்சரின் தரப்பினர் கேட்கிறார்கள். அப்படியென்றால் அவ்வாறு இழக்கப்படலாம் எனக் கூறப்படும் பாராளுமன்றப் பிரதிநிதியைத் தருவதாக முஸ்லிம் காங்கிரஸ் உத்தரவாதமொன்றை வழங்குவதன் மூலமாக அமைச்சர் அதாவுல்லாவுக்கு எதிரான வியூகமொன்றை அக்கரைப்பற்றில் வகுக்க முடியும் என்றார் விரிவுரையாளர்! மு.கா.வின் அவ்வாறான உத்தரவாதத்தை அதுவும் தேர்தல் காலத்தில் வழங்கப்படும் உறுதிமொழியை மக்கள் நம்புவார்களா என்று, நமது சந்தேகத்தை கேட்டோம். அவர் விளக்கினார்!

மு.காங்கிரஸ் அவ்வாறானதொரு உறுதிமொழியை நேரடியாக வழங்கினால், அதை அக்கரைப்பற்று நம்பாது! காரணம், கடந்த தேர்தல் காலங்களின் போது, மு.கா. தலைமையானது பல பிரதேசங்களுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியிருந்தது! குறிப்பாக, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு கடந்த பொதுத் தேர்தலின்போது, தேசியப் பட்டியல் எம்.பி. நியமனமொன்றை வழங்குவேன் என்று மு.கா. தலைவர் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை அது நிறைவேற்றப்படவேயில்லை. எனவே, இப்போது வழங்கும் உறுதியை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மூலமாக, மு.கா. வழங்கினால் அது மக்கள் மத்தியில் எடுபடும் என்றார் அவர்! காரணம், ரணிலின் கனவான் தன் அரசியலிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவரின் நேர்மையிலும் மக்களுக்கு இன்னும் மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். (அப்படியென்றால், தொடராய் ஏன் சார், அவர் தோல்விகளையே சந்தித்து வருகிறார்? என்று கேட்ட, நினைத்த வினா, தொண்டைக்குழி வரை வந்தும் அடக்கிக் கொண்டோம்) இவ்வாறு, ரணிலின் உத்தரவாதமொன்று வழங்கப்பட்டால், மு.கா.வால் அக்கரைப்பற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம். அதாவது யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்காக அக்கரைப்பற்றுக்கு ஐ.தே.க. வழங்கும் கைமாறு அல்லது சந்தோஷம் என்று கூட இதைக் கூறலாம்! ஹிஸ்புல்லாவை முடக்குவதற்கு இதே வியூகத்தை மு.கா. காத்தான்குடியிலும் பயன்படுத்த முடியும் என்று அவர் விபரித்தார்.

Email this page Your Opinion Print this page
முகமாலையில் சிக்கிய படையினர்
எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
அம்மையார் கெடுத்த ஐ.எஸ்.ஜீ.ஏ.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com