Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
முகமாலையில் சிக்கிய படையினர்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
விதுரன்

வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது.

வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்திற்கும் மேல் தேவைப்பட்டது. இது, வன்னியில் இடம்பெறும் படை நடவடிக்கையில் படையினர் எந்தளவுக்கு தடுமாறுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக வவுனியாவிலிருந்து தொடங்கிய படை நடவடிக்கை அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவிக்கிறது. அதேநேரம், வவுனியாவிலிருந்து சென்று கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதற்கிடையில் விடுதலைப் புலிகள் யாழ்.குடா நாட்டை முற்றுகைக்குள் கொண்டு வந்து விடுவரென்ற அச்சமும் படையினர் மத்தியிலிருக்கிறது. இதனால் தென்மராட்சியின் கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து முன்நகர்வதன் மூலம் விரைவில் கிளிநொச்சி சென்றுவிடலாமென்ற எண்ணம் படையினரிடமுள்ளது.

இதனால்தான் வடபோர் முனையில் படையினர் மீண்டும் மீண்டும் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு ஆனையிறவு வரையாவது சென்றுவிட முயல்கின்றனர். எனினும், வடபோர் முனை என்றுமே தாக்குதல் சமருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமென்பதை படைத்தரப்பு இன்னமும் புரிந்துகொள்ளாதது பெரும் ஆச்சரியமாயிருப்பதுடன் புலிகளின் பலம் குறித்து அவர்கள் தொடர்ந்தும் தவறான கணிப்பீட்டை கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

2000 ஆம் ஆண்டில் ஆனையிறவைக் கைப்பற்றிய புலிகள் முகமாலை, கிளாலி வரை முன்நகர்ந்திருந்தனர். யாழ் நகர நுழைவாயிலுக்கும் சென்றிருந்தனர். எனினும், யாழ் நகரிலிருந்து புலிகள் பின்வாங்கவே, வடபோர் முனையின் எல்லை கிளாலி- முகமாலை- நாகர்கோவிலாக அமைந்தது. ஆனையிறவை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் இந்தக் களமுனையிலிருந்து படையினர் ஆனையிறவை நோக்கி மிகப்பெரும் படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர். `தீச்சுவாலை' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை நடவடிக்கை, தொடங்கிச் சில மணிநேரத்திலேயே முடிவுக்கு வந்தது.

பல நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட ஆயிரம் படையினர் வரை படுகாயமடைந்தனர். இதில் அங்கவீனமான படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தப் படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வி அப்போதைய சந்திரிகா குமாரதுங்கவின் அரசை அதிரவைத்தது. தாங்கள் முகமாலையில் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்ததாக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருந்தார். இந்தத் தோல்வியே பின்னர் ஐ.தே.க. அரசை புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாட்டை கைச்சாத்திடும் நிலைக்கு இட்டுச் சென்றதெனக் கூடக் கூறலாம். அந்தளவிற்கு இந்தக் களமுனையில் `தீச்சுவாலை' படை நடவடிக்கை பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன் பின் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே களமுனையில் பாரிய படை நகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனையிறவை நோக்கிய நகர்வாக அது இருக்குமெனக் கூறப்பட்டது. படையினர் தங்கள் சகல வளங்களையும் ஒன்று திரட்டி டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதம் கிளாலி மற்றும் முகமாலைப்பகுதியிலிருந்து முன்நகர்வை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் படையினர் பாரிய படை நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர் என்ற செய்தி வெளியுலகிற்கு தெரியவரமுன்னர் இந்தப் படை நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டது.

சுமார் மூன்று மணி நேரத்தில் 190 படையினர் கொல்லப்பட 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆறு டாங்கிகள் அழிக்கப்பட்டன. அரசுக்கு இது பேரிடியாக அமைந்தது. இந்தத் தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இந்தப் பிரதேசம் மீது படையினரின் கவனம் திரும்பியது. இதனூடாக புலிகளின் பகுதி நோக்கி எப்படியாவது பாரிய முன்நகர்வை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்திய அதேநேரம் இந்தப் பிரதேசத்தில் புலிகளின் முன்னேற்ற முயற்சியையும் தடுத்துநிறுத்த வேண்டுமென்றதொரு நிலையையும் ஏற்படுத்தியது.

இதனால் 2007 ஆம் ஆண்டு முற்பகுதியில் இதே கள முனையில் படையினர் மீண்டுமொரு முறை பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டபோது அதனையும் புலிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். ஏற்கனவே இரு முறை இந்தக் களமுனையில் பெற்ற அனுபவத்தின் மூலம் இங்கு பாரிய படை நகர்வு மேற்கொள்ளப்பட்டதால் இழப்புகள் சற்று குறைந்தது. எனினும், இந்தப் படைநகர்வும் பெரும் தோல்வியில் முடிவடையவே, இங்கு புதிய தந்திரத்தை பயன்படுத்தி பாரிய படைநகர்வை மேற்கொள்ள படைத்தரப்பு ஆலோசித்தது. இதற்காக குடாநாட்டினுள் டாங்கிகள், கவச வாகனங்களை தருவித்து கவசப் படையணியை வெகுவேகமாக உருவாக்கினர்.

அடுத்து வரும் படைநகர்வுகளில் டாங்கிகள், கவச வாகனங்களை முன்னிறுத்தி, கிளாலி முதல் முகமாலை வரையான சுமார் ஏழு கிலோ மீற்றர் அகலம் கொண்ட குறுகலான பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கைக்கேற்ப திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. டாங்கிகளும் கவச வாகனங்களும் முன்னே செல்ல ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுகளையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் மழைபோல் பொழிந்தவாறு புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைவதுதான் படையினரின் திட்டம். புலிகளின் முதலிரு முன்னரங்க பாதுகாப்பு நிலைகளையும் (Forward Defence Line) கைப்பற்றி அவர்களின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பின்னர் வெகுவேகமாக முன்னேறிவிட முடியுமென்பது படையினரின் திட்டம்.

முதலிரு முன்னரங்க பாதுகாப்பு நிலைகளையும் தான் புலிகள் பொறிகளாக வைத்து முறியடிப்புச் சமருக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாக படையினர் கருதினர். இதற்கேற்ப வடபோர் முனையில் புதியதொரு களமுனையை திறக்கப்போவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கூறியிருந்தார். யாழ். குடாநாட்டுக்கு இம்மாத முற்பகுதியில், தமிழ் ஊடகவியலாளரைத் தவிர்த்து சிங்கள மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அழைத்து விரைவில் வடபோர் முனையில் புதிய களமொன்று திறக்கப்படுமெனக் கூறியிருந்தார்.

எனினும், எந்தவொரு மரபு வழி படையணியும் தான் எங்கு புதிய களமுனையை திறக்கப் போகின்றதெனக் கூறி எதிரியை உஷார்படுத்திவிட்டு பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளாதென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக வடபோர் முனையில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் புதியதொரு சமர்க்களத்தை திறக்க படைத்தரப்பு முடிவு செய்தது. இதற்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிக்கு டாங்கிகளும் கவசவாகனங்களும் நகர்த்தப்பட்டு 23 ஆம் திகதி புதன்கிழமை பாரிய படை நகர்வை மேற்கொள்ளவும் திகதி குறிப்பிடப்பட்டது.

படையினரின் இந்த ஏற்பட்டை புலிகளின் புலனாய்வாளர்கள் அறிந்து விடவே முதல்நாள் 22 ஆம் திகதி முகமாலை மற்றும் கிளாலி பகுதியில் படையினரின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகள் மீதும் ஆயுதக் களஞ்சியங்கள் மீதும் புலிகள் மிகக் கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலை திடீரென நடத்தினர். இந்தத் தாக்குதலில் முகமாலைப் பகுதியில் படையினரின் டாங்கியொன்று அழிக்கப்பட்டது. அதைவிட படையினரின் இரு ஆட்லறி ஏவுதளங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. கிளாலி சந்திக்கு அருகிலுள்ள ஆட்லறி ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பற்றி (6 ஆட்லறிகள்) ஆட்லறிகள் மீதும் புலிகளின் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதன்போது ஆட்லறி ஷெல் களஞ்சியமும் தீப்பற்றி எரிந்துள்ளது. கிளாலி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்லறிகளில் குறைந்தது 3 ஆட்லறிகள் சேதமடைந்திருக்கலாமென விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவித்தன. இவ்வேளையில் முகமாலைக்கு பின்னால் எழுதுமட்டுவாளிலுள்ள ஆட்லறி ஏவுதளம் மீதும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததாகவும் இங்கும் ஆட்லறிகள் சேதமடைந்திருக்கலாமெனவும் அந்தச் செய்திகள் தெரிவித்ததுடன் ஷெல் களஞ்சியத்திற்கும் சேதமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவசர அவசரமாக பலாலிக்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் மறுநாள் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆராய்ந்து விட்டு கொழும்பு திரும்பினார்.

இதற்கமைய மறுநாள் அதிகாலை 2 மணியளவில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் பாரிய படைநகர்வு ஆரம்பமானது. கெமுனு படையணியையும் விஜயபா காலாட் படையணியையும் கொண்ட 53 ஆவது படையணியும் 53-3 ஆவது படையணியும் `ஏ9' வீதிக்கு தெற்காக (முகமாலைக்கும் கிளாலிக்குமிடையில்) புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர, 55 ஆவது படையணி `ஏ9'வீதிக்கு வடக்காக (கிளாலிக்கும் நாகர்கோவிலுக்குமிடையில்) புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்ந்தன. 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டார தனது படையணியையும் 55 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரட்ன தனது படையணியையும் வழிநடத்தினர்.

`ஏ9' வீதியின் இருபுறங்களாலும் இவ்விரு படையணிகளும் நகர்ந்து புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலைகளை நோக்கிச் சென்றபோது அவர்களது முன்நகர்வுக்கு ஆதரவாக ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுகளும் புலிகளின் நிலைகளை நோக்கி மழை போல் பொழிந்தன. படையினரின் முன்னரங்க நிலைகளுக்கு பின்னாலிருந்து டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களிலிருந்தும் பீரங்கிகள் முழங்க முன்நகரும் படையணிகளுக்கு முன்னால் குண்டு மழை பொழிய அந்தப் பாதுகாப்பில் புலிகளின் பகுதியை நோக்கி படையணிகள் நுழைந்தன.

புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை உடைத்தபின் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் இணைந்து புலிகளின் 2 ஆவது முன்னரங்க நிலைகளை உடைத்துக் கொண்டு முன்னேறுவதும் அதனைத் தொடர்ந்து கவசப் படையணி புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்து பின் வேகமாக முன்னேறிச் செல்வதும் தான் படையினரின் திட்டமாகும்.

இதற்கேற்ப கிளாலிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே நகர்ந்த 55 ஆவது படையணி புலிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில் அவர்களது முதலாவது முன்னரங்க நிலையைத் தாண்டிச் சென்றது. எனினும் முகமாலைக்கும் கிளாலிக்குமிடையே புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்ந்த 53 ஆவது படையணி மீது விடுதலைப் புலிகள் மிகவும் உக்கிரமான தாக்குதலை தொடுக்கவே அவர்களால் முன்நகர முடியாது போனதுடன் முன்நகர்ந்து வந்த படையணியொன்றை மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்பளித்த புலிகள் அவர்களைப் பொறிக்குள் சிக்க வைப்பதற்காக தங்கள் நிலைகளிலிருந்து சிறிது பின்நகரவே 53 ஆவது படையணியின், கெமுனு படையணியின் ஒரு பிரிவும் விஜயபா காலாட் படையணியின் ஒரு பிரிவும் மேலும் முன்நகர்ந்து வர புலிகள் திடீரென அவர்களைப் பிரிக்கும் விதத்தில் அவர்களுக்குப் பின்புறமாக கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மழைபோல் பொழிய அவர்கள் புலிகளின் பொறிக்குள் சிக்கிக் கொண்டனர்.

(தொடர்ச்சி Sunday Thinakkural பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
முகமாலையில் சிக்கிய படையினர்
எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம்...!
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி விசாரணைக் குழுவும் இனவாதிகளின் ஆதங்கங்களும்!
முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் திட்டம் தோல்வியடைந்தது ஏன்?
அம்மையார் கெடுத்த ஐ.எஸ்.ஜீ.ஏ.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com