கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகக் கட்டிடத்துக்குள் (தாருஸ்ஸலாம்) கடந்த வாரம் ஒருநாள் நண்பகல் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி ஆயுதந்தாங்கிய பொலிஸார் திடீரென புகுந்து முழுக் கட்டிடத்திலும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த பொலிஸ் குழுவில் கறுப்புச் சீருடையணிந்தவர்கள் சிலரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றோ, முன்னறிவித்தல் கொடுத்தோ பொலிஸார் அங்கு தேடுதலை மேற்கொள்ளவில்லை. அரசியல் கட்சி அலுவலகமோ அல்லது வேறு எந்த கட்டிடமோ பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதற்கு சட்டத்தில் இடமளிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதே சட்டத்தின்படி இந்த நடவடிக்கைக்கான காரணத்தைத் தெரிவித்து முன்னறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், பொலிஸ், படையினருக்கு கறுப்புச் சீருடை கிடையாது. அந்தவகையில் பார்க்கும்போது பொலிஸாருடன் வெளியார் சிலரே கறுப்புச் சீருடையுடன் வந்திருப்பதாகவே ஊகிக்க முடிகிறது. பொலிஸ் தரப்பு அதன் கடமையைச் செய்யும்போது வெளியார் இணைந்து செயற்பட சட்டத்தில் இடம் கிடையாது. அவசரகாலச் சட்ட விதிகளுக்கமைய பொலிஸார் எந்த இடத்திலும் தேடுதலை மேற்கொள்ள இடமிருக்கின்ற போதிலும், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஜனநாயக அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்தினுள் புகுந்து காரணம் தெரிவிக்கப்படாமல் முழுக் கட்டிடத்தையும் சல்லடை போடுவதானது அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் கூறுவது வேறுவிதமான கதையாகும். ஒரு வாரத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிட்டியதையடுத்தே அங்கு சென்று ஒரு அறையில் மட்டும் தேடுதல் மேற்கொண்டதாகவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன், அங்கு போனதன் பின்னரே அக்கட்டிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமெனத் தெரியவந்ததாகவும் அவர் கூறியிருக்கின்றார். சுமார் ஒரு மணிநேரம் வரை அங்கு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், எவரும் கைது செய்யப்படவோ தேடிக்கண்டுபிடிக்கப்படவோ இல்லை. பொலிஸார் ஒரு மணிநேரத்தின் பின்னர் வெறுங்கையுடனேயே வெளியேறியுள்ளனர். இங்கு இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்தது அநாமதேய தொலைபேசித் தகவலாகும். அத்தகைய தகவலின் உண்மைத் தன்மையை உறுதிசெய்து கொள்ளாமல் தகவல் கிடைத்த கையோடு பொலிஸார் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து ஆட்டம் காட்டியது புத்திசாலித்தனமான செயலாகக் கருத முடியுமா? ஒரு கட்சி அலுவலகம் அல்லது அரசியல்வாதி தொடர்பாகவோ வேறு நபர்கள் குறித்தோ பொலிஸாரை தவறாக வழி நடத்தும் பொருட்டு பொய்த்தகவல்கள் தெரிவிக்கப்படலாம். அவ்வாறான சூழ்நிலையில் பொலிஸார் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கடும் நடவடிக்கைகளில் இறங்குவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. இதன் மூலம் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தளவுக்கு மனத்தாக்கமும் அவமதிப்பும் ஏற்படும் என்பதை அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவசரத் தொலைபேசித் தகவல்கள், அநாமதேய தகவல்களை வைத்து பொலிஸார் தேடுதல்களிலீடுபடத் தொடங்கினால் அவர்களால் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவோ உறுதிப்படுத்தவோ முடியுமாவெனக் கேட்க விழைகின்றோம். பாதுகாப்புத் தரப்பு புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ள முற்படுவதால் ஏற்படக்கூடிய விழைவுகளுக்கு அதிகாரிகள் என்ன பதிலைக் கூறப்போகின்றார்கள்? பொலிஸார் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்துக்குள் நுழைந்தபோது அங்கு கட்சித் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் அரசியல் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தவேளையில் பொலிஸாரின் பிரவேசம் கூட்டத்திலிருந்தோரை குழப்பமடையச் செய்துள்ளது. இக்களேபரம் காரணமாக அக்கூட்டமும் இடைநடுவில் முடிவுக்கு வந்துள்ளது. எந்தக் கட்சியும் அல்லது கட்சியைச் சார்ந்தவர்களும் அரசாங்கத் தரப்போடு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை அவர்களைப் போன்ற `நேர்மையானவர்களோ', `ஜனநாயகவாதிகளோ' எவருமே இருக்க முடியாது. தவறியேனும் தடம்மாறிவிட்டால் குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காகச் சுமத்தப்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதுபோன்ற நெருக்கடிகளைப் பலமுறை சந்தித்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசிலிருந்து வெளியேறிய மறுதினமே வருமான வரி அதிகாரிகள் அவரது வீட்டினுள் புகுந்து அவரது மனைவியின் வர்த்தக நிறுவன கணக்குக் கோவைகளை அள்ளிச் சென்று பூதக் கண்ணாடி போட்டு அலசினர். ஹக்கீமின் பாதுகாப்பு கூட பறிக்கப்பட்டது. இதேபோன்று அமைச்சர்களாக இருந்த மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி போன்றோர் விடயத்திலும் அரசு அதன் கைவரிசையைக் காண்பிக்கத் தவறவில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் களமிறங்கியிருக்கின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இது பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்தத் தருணம் பார்த்து முஸ்லிம் காங்கிரஸுக்கு தொடர் தலையிடியைக் கொடுக்கும் முயற்சிகளில் ஆளும்தரப்பு முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவே நோக்க முடிகிறது. அதில் ஒரு அம்சமாகவே இந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் மீதான தேடுதலையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆளும்தரப்போ பொலிஸ் தரப்போ என்னதான் காரணங்களைக் கூற முற்பட்டாலும் தாருஸ்ஸலாம் மீதான தேடுதல் அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே நோக்க வேண்டியிருக்கிறது.