கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 9,412 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் கல்முனைத் தொகுதியில் 944 பேரும் சம்மாந்துறை தொகுதியில் 1,230 பேரும் பொத்துவில் தொகுதியில் 2,209 பேரும் அம்பாறை தொகுதியில் 5,029 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் இவர்களுக்கான வாக்கு அட்டைகள் ஏற்கனவே திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரியுமான லக்ஸ்மேந்திர தமயந்த குமார தென்னக்கோன் தெரிவித்தார்.
இதற்கிடையில் தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் விடுமுறை மே மாதம் 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ஆர்.டீ.பி.காமினி அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 561 பேர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
அம்பாறை தொகுதியில் 1,42,170 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 153 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 64,316 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 60 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 69,069 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 77 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 1,33,765 பேர் வாக்களிப்பதற்கு 140 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.