*தந்தை செல்வா நினைவு தினத்தில் மாவை. சேனாதிராஜா
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வென்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது தந்தை செல்வநாயகம் கூறியிருந்தார். இதனால், ஐரோப்பியரிடம் இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று தந்தை செல்வாவின் நினைவுத் தூபியில் நின்று பகிரங்க வேண்டுகோள் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வநாயகத்தின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற போது அஞ்சலியுரையாற்றுகையிலேயே மாவை. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.
தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழுத்தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவை சேனாதிராஜா மேலும் உரையாற்றுகையில்;
தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் நாங்கள் இன்று கூடியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டுமென்று தந்தை செல்வநாயகம் போராடினார். இதற்காகவே அவர் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவுடனும் டட்லி சேனாநாயக்கவுடனும் ஒப்பந்தங்களைச் செய்தார். அவை எதுவும் வெற்றி பெறாத நிலையில் இறுதியில் அவ்வொப்பந்தங்களெல்லாம் சிங்களத் தரப்பால் கிழித்தெறியப்பட்டன.
1972 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மாற்றத்தில் கூட தமிழ் மக்களுக்கு சாதகமான திருப்பங்கள் எவையும் ஏற்படவில்லை இந்த நிலையிலேயே 1977 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமரர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், தொண்டமான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்குத் தமிழீழத்தைத் தவிர எமக்கு வேறு வழியில்லையென்று தந்தை செல்வா கூறியிருந்தார். அதுதான் எமக்குரிய இறுதித் தீர்வாக இருக்குமென்று இன்றும் நாங்கள் கருதுகின்றோம்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கான உரிமையை வழங்குவதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. இந்த நிலையில் தந்தை செல்வாவின் இலட்சியத்தை தீர்க்கதரிசனத்தை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
எங்களிடத்தே இருக்கின்ற சோர்வையும் பிளவுகளையும் கருத்து முரண்பாடுகளையும் நீக்கி எமது இலட்சியத்தை வென்றெடுக்க எல்லோரும் பாடுபட வேண்டுமென்று தந்தை செல்வாவின் நினைவுத் தூபியில் நின்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தந்தை செல்வாவின் சமாதியும் நினைவுத் தூபியும் அமைந்துள்ள வளாகம் புனிதமானது. இங்கு ஆயுதப் படையின் நடமாட்டமும் காவலரண்களும் இருப்பதும் அப் புனிதத் தன்மையை மாசுபடுத்துகின்றதென யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்குக் கூறியுள்ளேன்.
இவற்றை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் அஞ்சலியுரையாற்றினர்.