தென் பகுதியின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய திடீர் மினிசூறாவளி , அடைமழை காரணமாக சுமார் முப்பது வீடுகள் சேதமடைந்துள்ளன.
எம்பிலிப்பிட்டிய , உடவளவை , செவனகல, சித்துல்மினிகம, ஹிங்குறாகல, மொறகாகெட்டி ஆகிய பிரதேசங்களில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உடவளவை அணைக்கட்டின் மீது சென்று கொண்டிருந்த சம்பத் எக்கநாயக்க (25 வயது) என்ற இளைஞர் இடிமின்னல் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பல இடங்களில் மரங்கள் முறிந்து வீதிகளின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் விழுந்து முறிந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தோட்டப்பயிர்களும் கால்நடைகளும் மழை வெள்ளத்தால் சிக்கியுள்ளன. பல குடும்பங்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். 60 மைல் வேகத்தில் இப்பகுதிகளில் இந்தக் காற்று வீசியதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருத்த வேலைகள் நடைபெற்றன.