போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதையே முகமாலையில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது என்று இடதுசாரி முன்னணின் அமைப்புச் செயலாளர் சமில் ஜெயநெத்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
முகமாலையில் கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 400 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது. விடுதலை புலிகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இருசாரர்களின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.
இதன் மூலம் ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. அதாவது யுத்தத்தின் மூலம் ஒரு தீர்வை கொண்டுவர முடியும் என்பது பொய்யாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மரணமடைந்திருப்பது பனை மரணங்கள் நிறைந்த அவர்களின் தாயகப் பூமியிலாகும். அதேநேரம், சிங்கள இளைஞர்கள் தொழிலுக்காக தமது தாயகப் பகுதிகளிலிருந்து அந்நியப் பிரதேசத்திற்கு சென்று தமது உயிர்களை அநியாயமாக மாய்த்துள்ளனர்.
தென்னிலங்கை இளைஞர்கள் மீது இலங்கை அரசாங்கம் காட்டும் பரிவும் பாசமும் எவ்வளவு தூரத்திற்கு இருக்கிறது என்பது தற்போது நடந்துள்ள அனர்த்தங்களிலிருந்து அறிய முடிகிறது. போதிய பயிற்சிகள் இன்றியும் போர்த் தளபாட வசதிகள் இன்றியும் உணவு, நீர் விநியோக தடங்கல்களுடனும் தற்போது படையினர் மோதல்களில் ஈடுபடுவதாக தெரிகின்றது.
அரசாங்கம் யுத்தம் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவது தெளிவாகியிருக்கிறது. அநியாயமாக சிங்கள இளைஞர்கள் பலியாவதற்கு அரசாங்கமும் அரசாங்கத்திற்கு ஆலவட்டம் பிடிக்கும் பேரினவாத சக்திகளும் பொறுப்புக் கூறவேண்டும்.
இந்த நாட்டில் யுத்தத்தினால் அநியாயமாக இளைஞர்களும் பொதுமக்களும் கொல்லப்படுவதற்கு எதிராக தேரிய ரீதியிலும் சர்வதேச ரீதியாகவும் பலமான கருத்தியலை வளர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.