மடு மாதா தேவாலயப்பகுதி படையினர் வசமிருந்தாலும் அங்கு மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் கொண்டு சென்று கொலு வைப்பதற்கு உடனடியாகச் செல்லமாட்டோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண. இராயப்பு யோசப் ஆண்டகை சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மடு மாதா தேவாலயப்பகுதியில் இருந்து நான்கு திசைகளிலும் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும் என்றும் அப்படி நின்று கொண்டு உள்ளே வரமாட்டோம் என்றும் உள்ளே நின்றோ அல்லது வெளியே நின்றோ எந்தவிதமான இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் எனவும் உத்தரவாதம் தரவேண்டும்.
அத்துடன், மடுமாதா திருச் சொரூபத்தை மீண்டும் மடு மாதா ஆலயத்துக்குள் கொண்டு வந்து கொலு வைப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
அதனைத் தொடர்ந்தே மாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் மடுக் கோவிலுக்குக் கொண்டு வரமுடியும் அவ்வாறு உத்தரவு தரப்படாவிட்டால் மீண்டும் மடுக்கோவிலில் இருந்து நாம் இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ஆயர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இரு தரப்பினரிடமிருந்து உறுதி மொழிகளை நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மடு மாதா தேவாலயத்துக்கு நான்கு பகுதிகளிலும் இருந்து வீதிகள் வந்து சந்திக்கின்றன. அந்த வீதிகளைப் பயன்படுத்துவதற்கு சகலருக்கும் உரிமையுண்டு அதை நாம் தடை செய்ய முடியாது.
அதனால், யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வீதிகளின் ஊடாக மடுத்திருத்தல வட்டாரத்துக்குள் வரவோ அல்லது அப்பகுதிகளில் இருந்து நடவடிக்கை எடுக்கவோ நாம் அனுமதிக்கமாட்டோம்.
எனவே, இவ்வாறான ஒரு சூழலை தாங்களாகவே எமக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று வாக்குறுதி அளித்தால் நாம் மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் இங்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.
இரு தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றே நம்புகிறோம் தர வேண்டும் அப்படித் தராவிட்டால் மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் ஆலயத்துக்குக் கொண்டு வந்து ஆராதானைகளை நடத்த முடியத நிலைமையே ஏற்படும்.
இந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம் ஷெல் தாக்குதல்களால் சேதமடைந்தாக எமக்குத் தகவல் கிடைத்தது எனவும் ஆயர் குறிப்பிட்டார்.
வேறு அழிவுகள், சேதங்கள் பற்றி எதுவித தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை என ஆயர் மேலும் கூறினார்.