யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியை நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜ சந்தித்துள்ளார்.
பலாலி இராணுவ தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது கவலையை மாவை இச்சந்திப்பின் போது யாழ். இராணுவத் தளபதியிடம் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த யாழ். தளபதி சந்திரசிறி, தற்போது வன்முறைச்சம்பவங்கள் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை, துணைப் படைக்குழுக்கள் குடாநாட்டில் இயங்குவதை யாழ். இராணுவத் தளபதி ஏற்றுக் கொண்டதாக மாவை சேனாதிராஜா `தமிழ் நெற்றுக்கு' கூறியுள்ளார்.
உரிமை மீறல்களில் பரா இராணுவக்குழுக்களின் சம்பந்தம் இருக்கின்றதென்ற தனது சந்தேகத்தையும் அவர் வெளியிட்டதாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
யாழ்.குடாநாட்டில் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போது துணைப்படைக் குழுக்கள் எவ்வாறு கொலைகள், கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருக்க முடியுமென தான் கேட்டதாகவும் மாவை கூறியுள்ளார்.