* கையிருப்பைக் கொண்டு சமாளிப்பதாக கூறுகிறார் முல்லைத்தீவு அரச அதிபர்
ரொஷான் நாகலிங்கம்
உலர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கிடைப்பது தாமதமடைவதால் இடர் பாடுகளை முல்லைத்தீவு மாவட்டம் எதிர் நோக்கிய போதிலும் கையிருப்பில் உள்ளவற்றைக் கொண்டு சமாளிப்பதாக அந்த மாவட்ட அரச அதிபர் திருமதி. இ.சுகுமார் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் மாவட்டத்தின் நிலைமை குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
இந்த வருடத்தின் முதலாம் காலாண்டுக்குரிய உலர் உணவுப் பொருட்கள் கிடைக்காமையால் சில இடர்பாடுகளை எதிர் நோக்கிய போதும் எமது கையிருப்பிலுள்ளவற்றைக் கொண்டு சமாளித்து வருகின்றோம்.
அதாவது, எமக்கு உலக உணவுத் திட்டம் இடம்பெயர்ந்தவர்களுக்கான இலவச உணவு விநியோகம் மற்றும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமே உலர் உணவுப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றது. இந்த நிலையில் உலக உணவுத் திட்ட உணவுப் பொருட்கள் தொடர்பில் எந்த சிக்கலுமில்லை. எனினும், இலவச உணவு மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமான உணவு விநியோகத்துக்கு இது வரை கூட்டுப்படை தலைமையகத்தால் அனுமதி வழங்கப்படாததனால் இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளோம்.
இதேவேளை, இவ்வருட காலாண்டு மருந்துப் பொருட்கள் இதுவரை கிடைக்காமையால் சில சிக்கலை எதிர் கொண்ட போதும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. எனவே, அவற்றை எடுத்துவரும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும், எமது மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களுக்கு மாதமொன்றுக்கு 8 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படினும் 5 ஆயிரம் லீற்றர் அனுமதியை கோரியிருந்த போதும் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
அதுபோல் வைத்தியசாலைக்கு ஜப்பானால் வழங்கப்பட்ட ஜெனரேட்டரைக் கொண்டுவருவதற்கு அனுமதி கோரியிருக்கின்றோம். ஏற்கனவே வவுனியா இராணுவ தளபதியின் அனுமதி பெற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனரேட்டரே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது பழுதடைந்தால் மற்றீடாகப் பாவிப்பதற்கு ஏதுமில்லையென்பதால் இதற்கான அனுமதியை கோரியுள்ளோம் என்றார்.