*பரல் 200 டொலரை எட்டக்கூடுமென ஆய்வாளர் எச்சரிக்கை
ஹஸ்ரன்: எரிபொருள் விலை உலகசந்தையில் பரலொன்று 120 டொலர்களைக் கடந்த வெள்ளிக்கிழமை எட்டியுள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுமென பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எண்ணெய்க்கு ஏற்பட்டிருக்கும் அதிகளவு கிராக்கியும் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான நிலையும் தொடர்ந்தும் எரிபொருள் விலை உயர்ந்த மட்டத்திலிருப்பதற்கான அறிகுறியே தென்படுகிறது.
எண்ணெய் விலை பரலொன்று 200 டொலரை எட்டுவதற்கான சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாதென சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வருடத்திலும் பார்க்க ஏறக்குறைய மசகு எண்ணெய் விலை இருமடங்காக அதிகரித்திருக்கிறது. உண்மையான பெறுமதியிலும் பார்க்க சந்தைப் பெறுமானம் மிக அதிகளவுக்கு உயர்ந்திருக்கிறது.
மசகு எண்ணெய்க்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்தியா,சீனா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் தேவையும் அதிகரித்துவருவதால் எந்தவொரு நிவாரணமுமின்றி பாவனையாளர்கள் பெரிதும் அவதிப்படும் நிலமை உருவாகிவருகிறது.
பாரசீகக் குடாவில் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒப்பந்தக் கப்பல் உப படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வெளியான செய்திகளையடுத்து மசகு எண்ணெய் விலை பரலொன்று 120 டொலராக அதிகரித்திருக்கிறது.
இந்தப் படகுகள் ஈரானுடையதாக இருக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. நைஜீரியாவில் எண்ணெய்க் குழாய் மீதான தாக்குதல் மற்றும் ஸ்கொட்லாந்தில் எண்ணெய் வடிகட்டல் துறைத் தொழிலாளரின் வேலை நிறுத்தம் என்பவற்றால் ஏற்கனவே எரிபொருள் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் போது எரிவாயுவின் சில்லறை விற்பனைவிலையும் உயர்வடைவது வழமையாகும். ஒரு கலன் 3.60 டொலராக உயர்ந்துள்ளது.
ஆனால் தேவையான எண்ணெய்யை தாங்கள் விநியோகித்துவருவதாக ஒபெக் நாடுகள் கூறுகின்றன.
ஆனால் பணவீக்க அதிகரிப்பு, அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விலை மனுவை வர்த்தகர்கள் அதிகளவுக்கு முன்வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் அடுத்த இரு தசாப்தங்களில் உலக எரிபொருள் தேவை 50 சதவீதத்தால் அதிகரிக்குமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி பலவீனமடைந்திருப்பதும் எரிபொருள் உற்பத்திநாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமின்மையும் எந்தவொரு காலத்திலும் மசகெண்ணெய்யின் விலை 100 டொலருக்குக் குறைவாக வீழ்ச்சியடைப் போவதில்லையென கூறப்படுகிறது. 2010 இல் 110 டொலராக மசகெண்ணெய்விலை இருக்குமெனவும் ஆனால் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் 200 டொலராக அதிகரிக்கும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாதெனவும் டெக்ஸாஸ் ஏ அன்ட் எம் பொருளாதாரப் பேராசிரியர் ஜோன் மொரோனி கூறியுள்ளார்.