* தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களை தூண்டிவிட்டு மோதவிடுகின்ற பிரித்தாளும் தந்திரத்தை அரசாங்கம் மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் பதவியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இனத்துவேசம் கக்குவதாகவும், எனவே தமிழ்பேசும் சமூகம் ஒன்றுபட்டு இனவாதச் சக்திகளை தோற்கடிக்க முன்வர வேண்டுமெனவும் அவை அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட எம்.பி.கே.துரைரெட்ணசிங்கம் கூறுகையில்,
தமிழர் மற்றும் முஸ்லிம்களின் தாயகப் பகுதியே கிழக்கு மாகாணமாகும். இரு சமூகங்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றன.
பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் தாம் முதலமைச்சர்களாக வரவேண்டுமென்பதற்காக தமது பகுதிகளில் மிகமோசமான இனவாதப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இரு சமூகங்களுக்கு எதிராக மாறிமாறி கருத்துக்களை முன்வைக்கின்றனர். முதலமைச்சர் பதவியைச் சொல்லியே துவேசம் கக்குகின்றனர்.
இன்றைய ஜனாதிபதி கிழக்கில் இரு சமூகங்களும் பிரிந்து வாழும் பிரித்தாளும் முயற்சியை கையாளுகிறார். இதற்கெதிராக எமது இரு சமூகங்களும் ஒன்றுபடுவது பிரதானமாகும்.
இனவாதச் சக்திகளை தோற்கடிக்க இத்தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இதற்கு இரு சமூகங்களும் ஒன்றுபடுவது அவசியமாகும். அரசாங்கத் தரப்பின் இனவாதப் பிரசாரங்களுக்கு எவ்வகையிலும் துணைபோக வேண்டாமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது.
இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி கூறுகையில்,
இவ்வரசாங்கம் இனவாத சக்திகளின் ஆளுகைக்குட்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் சமூகங்களை தூண்டிவிட்டு மோதவிட்டு அதில் குளிர்காய இனவாதச் சக்திகள் காத்திருக்கின்றன. இரு சமூகங்களிலுமுள்ள சிலர் இனவாதத்தை கக்குவதன் மூலம் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குகளை குவிக்கலாமென அரசாங்கம் திட்டமிடுகிறது.
இதற்காக கிழக்கில் இரத்தக் களரியை ஏற்படுத்தவும் இவர்கள் தயாராயுள்ளனர். இனவாதம் மூலமே தேர்தலில் வெற்றியடையலாம் என்ற சிந்தனையை தோற்கடிக்கவும், உரிமையை நிலைநாட்டவும் இரு சமூகங்களும் ஒற்றுமை எனும் தியாகத்திற்கு முன்வரவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புடன் அழைப்பு விடுக்கிறது.