* தொற்றுநோய் மேலும் பரவும் அபாயம்
சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றுநோய்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணம், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளில் நோயாளர் நிரம்பி வழிகின்றனர்.
சில வைத்தியசாலைகளில் போதிய வசதியின்மையால் சிகிச்சை பெறவந்த நோயாளிகள் வெளி விறாந்தைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் இனங்காணப்படாத வைரஸ் காய்ச்சல் என வைத்தியர்கள் கூறிவந்த காய்ச்சல், இரத்தப் பரிசோதனை மூலம் சிக்குன்குனியா என கண்டறியப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதன் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுளம்புகள் அதிகமாக பரவியுள்ள பிரதேசங்களில் அவற்றை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொற்றுநோய்கள் மேலும் அதிகரிக்குமென சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், சிக்குன்குனியா மற்றும் டெங்கை கட்டுப்படுத்த நுளம்பு பெருக்கத்தை தடுப்பதே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு, நுளம்பு பரவும் சூழலை கொண்டிருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டியது.
இது குறித்து அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க கூறுகையில்,
எதிர்வரும் காலங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனால் நுளம்புகள் பெருக்கெடுக்கும். இதன் மூலம் தொற்றுநோய்கள் உருவாகும் அபாயமுள்ளது. நுளம்பு பரவுவதையும் பெருகுவதையும் ஒழிப்பதனாலேயே இவ்வபாயத்திலிருந்து விடுபட முடியுமென்றார்.