கத்தோலிக்க மக்களின் யாத்திரைத் தலமாக விளங்கும் மடுமாதா தேவாலயப் பகுதியை அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என்று இறை ஆசிவேண்டி நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட வழிபாடுகளும் செபமாலைப் பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றன.
மருதானை பற்றிமா மாதா ஆலயத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசேட வழிபாட்டில் அருட்சகோதரிகள் குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மடுமாதா திருச்சொரூபம் மீண்டும் மடுக்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் எதுவித தடையுமின்றி அங்கு சுதந்திரமாகச் சென்றுவர வேண்டும் எனவும் நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட வேண்டும் எனவும் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை விசேட பிரார்த்தனையும் உண்ணாவிரதமும் இடம்பெற்றது. இதில் பௌத்த, இந்து மக்களும் கலந்து கொண்டனர் .
இதேபோல மன்னார் மறை மாவட்டத்தில் மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் இடம்பெற்றன.
யாழ். மறை மாவட்டத்திலும் நேற்று சனிக்கிழமை மடுமாதாவின் பெயரில் ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றன.
மரியாயின்சேனை அமைப்பினர் வீடுகளில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் பின்னர் விசேட பிரார்த்தனை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடுமாதா ஆலயப்பகுதியை அமைதி வலயமாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சர்வமத ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இலங்கை அரசுக்கும் மகஜர்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.