* அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்
இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வடபோர் முனையிலும் மன்னார் களமுனைகளிலும் எம்மால் தகுந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிலடி இலங்கையரசையும் அதன் இராணுவத்தையும் ஆட்டம்காணவைத்துள்ளதென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த நடேசன் மேலும் கூறியதாவது;
"இலங்கை அரசைப் பொறுத்த வரையில் இன்று எல்லோரையுமே புலிகளாக எண்ணி விமானத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இலங்கை அரசுக்கு புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. புலிகளாக எண்ணி தாக்குதலை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மீது நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் பயன்பாட்டில் மட்டும் தங்கியிருப்பது அல்ல. மக்கள் என்ற மாபெரும் சக்தியிலேயே தங்கியுள்ளது. உலகில் மக்கள் ஆதரவுமிகுந்த விடுதலைப் போராட்டங்கள்தான் விடுதலை பெற்று நாடுகளை அமைத்துள்ளன. நாமும் வல்லரசுகளின் துணையுடன் எமக்கு எதிராக போர் புரிந்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இலங்கை அரசு இளைய தலைமுறையை அழித்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடுகளாகவே பல முனைகளில் எம் மண் மீது வன்பறிப்புப் போரைத் தொடுத்துள்ளது.
அரசின் கொடிய போரை கைகளைக் கட்டிக்கொண்டு தமிழராகிய நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு ஆசிரியர்களும் ஏன் பௌத்த பிக்குகளும் படைகளுக்கு ஆட்களைத் திரட்டுகின்றனர்.
இந்தநிலையில் தமிழர்கள் நாம் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எமக்குப் பெரிய பலம் மாணவர் சக்தி தான். உலகிலேயே பல விடுதலைப் போராட்டங்களில், புரட்சிகள் நடைபெற்ற தேசங்களில் மாணவர்களே போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
இந்தநிலையில் மாணவர் சக்தியை கொடிய போரைத் திணித்துள்ள அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும். அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வடபோர் முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பதிலடி அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.
எமது தலைவரின் தலைமையில் தமிழர்களின் வீரமரபு போர்க்களங்களில் வெளிப்பட்டு வருகின்றன. போரைத் திணித்துள்ள அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி சகல அடக்குமுறைகளையும் உடைத்து எறிய வேண்டும்".