Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
பிலியந்தல குண்டுவெடிப்பு பல கோணங்களில் விசாரணை
[27 - April - 2008] [Font Size - A - A - A]
* 8 பேர் சந்தேகத்தில் கைது

பிலியந்தலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு தொடர்பாக எண்மர் கைது செய்யப்பட்டுள்ள அதேநேரம், இது குறித்து விசாரணை நடத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவை பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்தக் குண்டுவெடிப்பில் இறந்தோர் தொகை 26 ஆக அதிகரித்துள்ள அதேநேரம், படுகாயமடைந்த 73 பேர் மூன்று ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் பிலியந்தலையிலிருந்து கஹபொல நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸினுள்ளேயிருந்த பார்சல் குண்டு வெடித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இந்த நேரக் கணிப்பு பார்சல் குண்டு பஸ்ஸினுள் எப்படி வந்ததென்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், காயமடைந்த பஸ் சாரதி மற்றும் நடத்துநரிடமும் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ்ஸின் நடுப்பகுதியில் பொருட்கள் வைக்கும் மேல் தட்டிலிருந்தே குண்டு வெடித்துள்ளது. மிகவும் சக்திமிக்க உயர் வலு கொண்ட குண்டே வெடித்திருப்பதாக அங்கு ஆய்வுகளை நடத்திய அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தங்கள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகளை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாகவும் அத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பையடுத்து விசாரணைகள் ஆரம்பமான நிலையில், பல்வேறு கோணங்களிலும் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சம்பவம் நடைபெற்றதையடுத்து அப்பகுதியில் விசாரணை நடத்திய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் எண்மரைக் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதைவிட அந்தப் பகுதியில் மேலும் பலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

சம்பவத்தின் போதும் அதன் பின்னரும் 25 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று அதிகாலை களுபோவில ஆஸ்பத்திரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் 73 பேர் மூன்று ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் 9 பேர் கொழும்பு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மாணவர்கள். மூவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுபோவில ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்ட 14 சடலங்களினதும் பிரேத பரிசோதனை நேற்று அங்கு நடைபெற்றது.

சம்பவத்தில் உயிரிழந்த பயணிகளின் உடைமைகள் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடாகவும் மரணச் செலவிற்காக 16 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதுடன் பின்னர், காயங்களின் தன்மைக்கேற்ப 40 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இக் குண்டு வெடிப்பை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளும் படி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com