Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கருணாரட்ண, லக்ஷ்மன் டி அலவிஸ் ஆகியோரின் மரணம் விளையாட்டுத்துறைக்கு பெரும் இழப்பாகும்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
கம்பஹா வெலிவேரியா பகுதியில் கடந்த ஞாயிறு நடைபெறவிருந்த சர்வதேச தரத்திலான மரதன் ஓட்டப் போட்டியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சர்வதேசதரத்தில் புகழ்பெற்று விளங்கிய பல முன்னாள் வீரர்கள் பலியானது விளையாட்டுத்துறைக்கு, குறிப்பாக மெய்வல்லுநர் விளையாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இறந்தவர்களில் ஒலிம்பிக் வரைசென்று இலங்கைக்கு பெருமைதேடிக்கொடுத்த முன்னாள் மரதன் ஓட்ட வீரர் கே.கருணாரட்ணவும், தேசிய மெய்வல்லுநர் சங்கப் பயிற்சியாளரான லக்ஷ்மன் டி அல்விஸும் முக்கியமானவர்களாவர்.

காலஞ்சென்ற முன்னாள் மரதனோட்ட வீரரான 52 வயது கருணாரட்ண 1980 ஆம் ஆண்டு முதல் மரதன் ஓட்டத்தில் சிறந்து விளங்கினார். 1994 ஆம் ஆண்டு வரை இலங்கையில் மரதன் ஓட்டத்தில் இவர் பல புதிய சாதனைகளை ஏற்படுத்தியவர்.

1991 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 5 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும், 1993 ஆம் ஆண்டு பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 6 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் இலங்கைக்கு மரதன் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த முதலாவது வீரராவார்.

இதேநேரம், 1992 ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 25 ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களைப் பெறாவிட்டாலும் இறுதிவரை சளைக்காது ஓடி 23 ஆவது இடத்தைப் பெற்றவர்.

1990 ஆம் ஆண்டு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற 11 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 1994 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மரதன் ஓட்டப் போட்டியில் முறையே 4,6 ஆம் இடங்களைப் பெற்றவர்.

இதேநேரம், இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.

மரதன் ஓட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்பு கருணாரட்ணா கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியா பகுதியில் `அதிஷ்தா' என்ற விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்து மரதன் ஓட்டத்தில் ஆண்,பெண் இருசாராருக்கும் பயிற்சிகளை வழங்கிவந்தவர்.

சர்வதேச தரத்திலான மரதன் ஓட்டப் போட்டி ஒன்றை தனது கிராமத்தில் நடாத்த வேண்டுமென்று கருணாரட்ணவுக்கு நீண்டநாள் அவாவாகும். இதன் காரணமாகத்தான் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் ஆதரவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பகுதியில் நடாத்த ஏற்பாடு செய்திருந்த மரதன் ஓட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கலந்துகொண்டு போட்டியை ஆரம்பித்தபோதுதான் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அமைச்சரும், அவருக்கு அருகில் நின்ற கருணாரட்ணவும் காலமானார்கள்.

இக்குண்டுவெடிப்பில் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் பயிற்சியாளரும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளருமான லக்ஷ்மன் டி அல்விஸ், இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் மத்தியஸ்தர்களான லெப்.கேணல் பி.எஸ்.எஸ்.ஆர்.உதயவீர, சிசிக வணிகசேகரா, ஓட்டவீரர் சிலர் ஆகியோரும் இக்குண்டு வெடிப்பில் மரணமானவர்களில் சிலராவர்கள். இவர்கள் அனைவரும் மெய்வல்லுநர் போட்டிகளில் பல தேசிய சாதனைகளை நிகழ்த்திய முன்னாள் வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெலிவேரிய குண்டு வெடிப்பில் பலியான விளையாட்டு உத்தியோகஸ்தர்களில் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தேசிய பயிற்சியாளரான லக்ஷ்மன் டி அல்விஸ் முக்கியமானவராவார். இவர் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 100,200,400 மீற்றர் ஓட்டங்களில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்தவர்.

1970 ஆம் ஆண்டு முதல் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் டி அல்விஸ், ஓரிரு வருடங்கள் புரூணை நாட்டின் மெய்வல்லுநர் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

வெலிவேரியாவில் நடைபெறவிருந்த மரதன் ஓட்டப்போட்டியின் பிரதான அமைப்பாளராகவும் லக்ஷ்மன் டி அல்விஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இளம் வயதில் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றியபோது லக்ஷ்மன் டி அல்விஸ் அவருக்கு பயிற்சிகளை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Email this page Your Opinion Print this page
ரட்ணம் கழகம் அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும்
இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு ஜோசப் பிளட்டர் பாராட்டு
பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டம் மேயில் ஆரம்பம்
கருணாரட்ண, லக்ஷ்மன் டி அலவிஸ் ஆகியோரின் மரணம் விளையாட்டுத்துறைக்கு பெரும் இழப்பாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com