Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பாதுகாப்பு நிலைவரம்
 
முகமாலையில் சிக்கிய படையினர் (தொடர்ச்சி) விதுரன்
இதற்கிடையில், விடியும் வேளைக்கு முன்பாக புலிகளின் முதலாவது முன்னரங்க நிலையை தாண்டிய 55 ஆவது படையணி, ஏற்கனவே திட்டமிட்டவாறு புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைக்கப்பால் 53 ஆவது படையணியுடன் இணைந்து முன்னேறுவதற்காக 53 ஆவது படையணிக்காக காத்திருந்தது. எனினும் விடிந்து விட்ட போதும் 53 ஆவது படையணி திட்டமிட்டவாறு அவ்விடத்திற்கு வராததால் மேலும் முன்னேறுவதா அல்லது 53 ஆவது படையணியையும் இணைத்துக் கொண்டு முன்னேறுவதா எனத் தடுமாறியது. அதேநேரம், 53 ஆவது படையணி இல்லாது மேலும் முன்னேறுவதென்பது தங்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுமென உணர்ந்த போது புலிகள் 55 ஆவது படையணி மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.

இந்தநேரத்தில், முகமாலைக்கும் கிளாலிக்குமிடையே முன்னேறிய போது புலிகளின் பொறிக்குள் சிக்கிய கெமுனு படையணியும் விஜயபா காலாட் படையணியும் பலத்த இழப்புக்களைச் சந்தித்தன. புலிகளால் முற்றுகையிடப்பட்ட அவர்கள் புலிகளின் கடும் தாக்குதலுக்கிலக்காகினர். காலை 8 மணி முதல் 10 மணி வரை இவர்கள் மீது புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கவே 53 ஆவது படையணியால் மேலும் முன்னேற முடியவில்லை. புலிகளின் பொறிக்குள் சிக்கிய படையணிகள் அந்த முற்றுகையை முறியடிக்க மிகக் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது.

`ஏ 9' வீதியை மையமாக வைத்து அதன் இரு புறங்களாலும் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் முன்னேறிய போது இரு படையணிகளையும் இணைய விடாது அவர்களுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி படை நடவடிக்கையை தோல்வியுறச் செய்ய வேண்டுமென்பதே புலிகளின் திட்டமாகும். அதற்கேற்பவே 55 ஆவது படையணிக்கு முதலில் கடும் எதிர்ப்பு காட்டாது அவர்களைத் தங்கள் முதல் முன்னரங்க நிலைகளுக்குள் வரவிட்ட புலிகள் 53 ஆவது படையணியை மையமாக வைத்து அவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையாகத் தாக்கி அவர்களை முன்னேற விடாது தடுத்து இரு படையணிகளும் தங்கள் முதலாவது முன்னரங்க நிலைகளுக்கப்பால் ஒன்றிணைவதைப் புலிகள் தடுத்து நிறுத்தினர்.

புலிகளின் இந்தத் தந்திரோபாயத் தாக்குதலால் 53 ஆவது படையணி புலிகளது முதலாவது முன்னரங்க காவல் நிலைகளுக்கு முன்னால் கடுமையான பதிலடிக்குள்ளாகி பலத்த இழப்புகளைச் சந்திக்க, `ஏ9' வீதியின் மற்றப் பக்கத்தால் முன்னேறி வந்த 55 ஆவது படையணியை தங்களது முதலாவது முன்னரங்க நிலைக்கும் 2 ஆவது முன்னரங்க நிலைக்குமிடையில் வைத்து மிகக் கடுமையாகத் தாக்கி அவர்களுக்கும் புலிகள் பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நாகர்கோவிலுக்கும் முகமாலைக்குமிடையே முன்னேறி வந்த 55 ஆவது படையணி புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளைக் கைப்பற்றி அதற்குள் நிலையெடுத்த போது, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த முன்னரங்க நிலையை நோக்கி புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழியவே 55 ஆவது படையணியினர் நிலைகுலைந்து போயினர். தங்களது முதலாவது முன்னரங்க நிலையுள்ள தூரத்தை துல்லியமாகக் கணித்திருந்த புலிகள் அதற்குள் நிலை கொண்டிருந்த படையினர் மீது ஷெல்களையும் மோட்டார்களையும் மழைபோல் பொழிந்து படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தினர்

ஒருபுறம் `ஏ 9' வீதிக்கு தெற்கே 53 ஆவது படையணியை முன்னேற விடாது தடுத்து நிறுத்தி பொறிக்குள் சிக்கவைத்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் மறுபுறம் `ஏ9' வீதிக்கு வடக்கே 55 ஆவது படையணியை முன்னேறவிட்டு அவர்களை தங்கள் எல்லைக்குள் வர அனுமதித்து தாக்கி அவர்களுக்கும் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த முறியடிப்புச் சமருக்கு புலிகள் சுமார் எண்பது ஆட்லறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி சுமார் ஏழு கிலோ மீற்றர் அகலத்தில் இருக்கும் கிளாலிக்கும் முகமாலைக்குமிடையே முன்னேறிய படையினரை தாக்கி பலத்த சேதம் விளைவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

`ஏ9' வீதியின் இரு புறத்திலும் 53 ஆவது படையணியும் 55 ஆவது படையணியும் சந்தித்த கடும் இழப்பையடுத்து இராணுவ தலைமைப்பீடத்தின் அவசர உத்தரவின் பேரில் முன் நகர்வு முயற்சி நிறுத்தப்பட்டு படையணிகள் பழைய இடங்களுக்கு திருப்பி அழைக்கப்பட்டன.

ஒட்டகத்தின் கழுத்து போன்ற அகலம் குறைந்த மேற்படி பகுதியில் `ஏ9' வீதியை மையமாக வைத்து தங்கள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களை பிரதானமாகப் பயன்படுத்தி தங்கள் தரப்புக்கு மிகவும் குறைந்த சேதத்துடன் (25 போராளிகள் பலி) படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி ( சுமார் 200 படையினர் பலி 500 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயம்) வடபோர்முனையில் தங்கள் பலத்தை புலிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

வடபோர் முனையில் `தீச்சுவாலை' உட்பட நான்காவது முறைபடையினர் பலத்த இழப்புடன் படைநடவடிக்கையில் தோல்வியடைந்துள்ளனர். இந்தத் தோல்வியால் 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டார உடனடியாக அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இப்பதவிக்கு 55 ஆவது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் கமல் குணரட்ன நியமிக்கப்படுவதுடன் 55 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாக மாவிலாறு மற்றும் வாகரை படை நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய பிரிகேடியர் பிரசன்ன சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சமரை விடுதலைப் புலிகளே ஆரம்பித்ததாக படைத் தரப்பு கூறிவருகிறது. புதன் கிழமை இந்தச் சமர் ஆரம்பமான செய்திவெளிவந்த நேரம் முதல், வடக்கே படையினரே புலிகளின் பகுதிநோக்கி பாரிய படைநகர்வை மேற்கொண்டுள்ளதாக படைத் தரப்பு கூறிவந்தது. எனினும் இந்தப் படைநகர்வு பெரும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து புலிகளே இங்கு தாக்குதலை ஆரம்பித்ததாகவும் படையினர் அதனை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும் கூறியதன் மூலம் படையினர் தங்கள் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

வடக்கே தற்போது வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் முகமாலை பகுதியில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு களமுனையும் ஒவ்வொரு விதமானது. வவுனியா, மணலாறு களமுனைகள் அடர்ந்த காடுகளைத் கொண்டதால் அங்கு படைநகர்வு மிகமிக மந்தமாகவேயுள்ளது. புலிகளுக்கு அது வாய்ப்பாக உள்ளது. படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். இதேநேரம் மன்னார் களமுனை திறந்த வெளிகளைக் கொண்டிருப்பதால் படைபலமும் ஆயுத வளமும் அதிகமுள்ள படைத்தரப்புக்கு சற்று சாதகமாயுள்ளது. அதேநேரம் யாழ். குடா களமுனை எவ்வாறுள்ளதென்பதற்கு முகமாலைச் சமர் நல்ல உதாரணம்.

இவ்வாறு வடபகுதி போர்க்கள நிலைமைகளிருக்கையில் அங்கு படைநடவடிக்கையை தொடர்ந்து நடந்தி மேலும் மேலும் பாரிய உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தவே அரசு முயல்கிறதே தவிர இனியாவது இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அரசு முனையாதா என்ற கேள்வியே அனைவர் மத்தியிலும் எழுகிறது.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com