Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
இலக்கிய இதயங்களில் நிறைந்து நிற்கும் ஈழத்துச் சோமு
[28 - April - 2008] [Font Size - A - A - A]
* இன்று இரண்டாவது நிைனவு தினம்

அ. கனகசூரியர்

நம் நாட்டு கலை இலக்கியத் துறையில் சிறப்பாக சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த தீபமொன்று அணைந்து இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு பெறுகின்றன. அந்தத் தீபம் அணைந்தாலும் கலை இலக்கிய அபிமானிகளின் இதயங்களில் இன்றும் அந்தத் தீபச் சுடர் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த சுடருக்கு உரியவராகப் போற்றப்படும் பெருமைக்குரியவர் "ஈழத்துச் சோமு" என பலராலும் அறியப்பட்ட அமரர் நா. சோமகாந்தன்.

ஒரு பத்திரிகையாளராக - சிறுகதை எழுத்தாளராக - நாவலாசிரியராக - கட்டுரையாளராக - பத்தி எழுத்தாளராக - விமர்சகராக - வானொலி, மேடைப் பேச்சாளராக மட்டுமல்லாது, ஒரு சமூக சேவையாளராகவும் சமயத் தொண்டராகவும் திகழ்ந்து ஆற்றிய பணிகள் வரலாற்றுப் பதிவாக இன்னும் பெருமை பேசுகின்றன.

முற்போக்கு எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கிய அமரர் சோமகாந்தன், நம் நாட்டின் கலை இலக்கியத் துறையில் ஆழமான பங்களிப்பைச் செய்து சாதனை படைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அமைப்புச் செயலாளராக விருந்து ஆற்றிய பணிகள் காத்திரமானவை; போற்றுதலுக்குரியவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சாதித்த சாதனைகளுக்கு - குறிப்பாக அதன் மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விழாக்கள் போன்ற அனைத்தும் வெற்றிபெறுவதற்கு இவரது பங்களிப்பின் ஊடான செயற்திறனும், உழைப்பின் மேன்மையும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பிரேம்ஜி ஞானசுந்தரன் "மக்களின் வாழ்வை, அதன் பல்வேறு கோணங்களில் - கோலங்களில் - வெளிப்பாடுகளில் தரிசித்து, அதை அழியா இலக்கியப் படைப்புகளாகச் சிருஷ்டிப்பதில் சோமு கைதேர்ந்த வல்லவராகத் திகழ்ந்தவர்" என புகழாரம் சூட்டுகிறார். (சோமகாந்தம் - மணிவிழா மலர் - 1996).

எந்தவொரு பணியையும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டால், சலிக்காது அதனைச் செம்மையான வகையில் நிறைவேற்றுவதன் மூலம், அமரர் சோமகாந்தன் ஒரு நல்ல ஏற்பாட்டாளராகத் திகழ்ந்ததுடன், அதன் ஊடாக வெற்றியாளராகவும் சாதனையாளராகவும் மதிக்கப்பட்டவர். இவரைப் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி, சோமகாந்தம் - மணிவிழா மலரில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நோக்குவது பொருத்தமாகவிருக்கும்.

"சோமு இன்று மிகத் திறமை வாய்ந்த ஒரு ஒழுங்கமைப்பாளராக மேற்கிளம்பியுள்ளார். கொழும்பு முதல் தமிழகம் வரை தெரியப்பட்ட இலக்கிய நண்பராகிவிட்டார். சோமுவின் சாதனை என நான் கருதுவது, அவரின் இலக்கிய விழா ஒழுங்கமைப்புத்திறன் ஆகும். 1959 ஆம் ஆண்டு சாகிரா கல்லூரி முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு முதல் இன்று வரை பல இலக்கிய வைபவங்களை சீர்பட அமைத்து நடத்திய பெருமை அவரைச் சாரும். அந்த விடயத்தில் முக்கிய மைல்கற்களாக அமைபவை என நான் கண்டவை, 1963 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க விழா (குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சாமியார் கோயிலில் நடத்தியது), 1969 இல் நாவலர் சிலையை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற விழா, 1972 இல் இலங்கை கலாசாரப் பேரவையின் சாகித்திய விழா, 1996 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியப் பேரரங்கு மற்றும் சின்மயானந்த மிஷன் சுவாமிஜியின் வருகை விழா என்பவைகளைக் கூறலாம்" என்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி.

அமரர் சோமகாந்தன் ஸ்ரீலஸ்ரீஆறுமுகநாவலர் சபையின் ஸ்தாபகர். 1969 இல் நாவலருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கும் நாவலர் சிலையை உருவமைத்து அதனை கொழும்பிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அனைவரினதும் தரிசனத்துக்கு இடமளிக்கப்பட்டதற்கும், சிலையை மணி மண்டபத்தில் நாட்டப்பட்டதற்கும், நாவலரை தேசியப் பெரியாராக - தேசிய வீரராக பிரகடனம் செய்யப்பட்டதற்கும், நாவலர் தபாற் தலைவெளியிடப்பட்டதற்கும் இவரது உழைப்பே துணைக் காரணமாக இருந்தமை பலராலும் அறியப்பட்ட உண்மையாகும்.

1968 ஆம் ஆண்டில் சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அங்கு தமிழ் அறிஞர்களுக்கு சிலை எடுத்தார்கள். அப்போது ஆறுமுகநாவலரை மறந்துவிட்டார்கள் என்பது இலங்கைத் தமிழ் மக்களிடையே பெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியது என்பதால், நாவலர் பெருமானுக்கு நமது நாட்டிலே சிலை எடுத்துக் கௌரவிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இதற்கு செயல்வடிவம் கொடுக்க அமைக்கப்பட்டதே ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் சபையாகும். அமரர் சோமகாந்தன் ஸ்தாபகராகவும், அமைப்புச் செயலாளராகவுமிருந்து ஆற்றிய பணிகள் காத்திரமானவை. வெண்கலச் சிலை உருவாக்கப்பட்டதுடன், சிலை நாட்டுப் பெருவிழாவின் பின்னர் யாழ். முற்றவெளியில் ஒருவார காலம் நாவலர் மாநாடு கலை இலக்கிய நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டமையும், மாநாட்டு மலரை வெளிக்கொணருவதிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக போற்றத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமாஸ் லிமிட்டெட் நிறுவனத்தினரால் திரைப்படமாக்கப்பட்டதுடன், இதற்கான வர்ணனைகளை அமரர் சோமகாந்தனின் குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் சிறப்புத் தகவலாகும்.

நாவலர் சபையினால் வெளியிடப்பட்ட "நல்லை நாவலர்" என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நாவலரின் 150 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி நாவலர் சபையினால் நடாத்தப்பட்ட சிறுகதை, கவிதை, பேச்சுப்போட்டிகளுக்குப் பொறுப்பானவராகவும், நாவலர் ஜெயந்தி மலரின் ஆசிரியராகவுமிருந்து ஆற்றிய சேவைகளும் வரலாற்றுப் பதிவாகியுள்ளன.

அமரர் சோமகாந்தன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இந்து சமய ஆலோசனைக் குழுவின் அங்கத்தவராகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் ஒரு பணியாளராகவும் இருந்ததன் ஊடாக சமயத்துறைக்கும் இவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

ஐம்பதுகளில் கலை இலக்கியத் துறையில் பிரவேசித்த அமரர் சோமகாந்தன், தனது ஆக்கங்களாக ஆகுதி (சிறுகதைத் தொகுப்பு), விடிவெள்ளி பூத்தது (நாவல்), ஈழத்து இலக்கியம், பல்துறை நோக்கு (ஆய்வுக் கட்டுரைகள்), தத்துவச் சித்திரம் (ஒழுக்க விழுமியங்கள் பற்றிய கட்டுரைகள்), பொய்கை மலர் (ஆன்மீக பண்பாட்டியல் நாவல்), நிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுப்பு), நிகழ்வுகளும் நினைவுகளும் (பத்தி இலக்கியம்), ஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை (அரசியல் வரலாறு) போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளார். வீரகேசரி வாரவெளியீட்டில் ஏற்கனவே வெளிவந்த இவரது கனடாவின் பயண அனுபவ தொடர் கட்டுரைகள் அடங்கிய நூல் "சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனிநாடு" என்ற பெயரில் இவரது மறைவுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. இவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சிறப்பு மலர்களும், தொகுப்பு ஏடுகளும் ஏராளமானவை. இலங்கையில் முதன் முதலாக எழுபதுகளில் தமிழில் வெளிவந்த "வரதரின் பல குறிப்பு" முற்று முழுதாக இவரது பங்களிப்பாக சிறப்பாக அமைந்திருந்ததை அந்நாளில் பலரும் பாராட்டிப் போற்றியிருந்தார்கள்.

அமரர் சோமகாந்தனின் துணைவியார் திருமதி பத்மா சோமகாந்தனும் நம்நாட்டு கலை இலக்கியத் துறையில் பிரபல்யம் பெற்றவர் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயமாக இருப்பாள் என்ற ஆங்கில அறிஞன் ஒருவரது கருத்தின் உண்மை, சோமகாந்தன் தம்பதியினருக்குப் பொருந்துகிறது என்பது, அவர்களுடன் நெருங்கிப் பழகிய பலரது கூற்றாக அமைந்துள்ளது. சோமகாந்தனின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கெல்லாம் உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் விளங்கியவர் அவரது துணைவியார் என்கிறார் பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா. (சோமகாந்தம் - மணிவிழா மலர் - 1996)

மணிவிழா கண்ட பெருமகன் பவளவிழா காணுவதற்கு முன் மறைந்துவிட்ட துயரம், இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நம் நாட்டு கலை இலக்கிய ரசிகர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இவரின் பல்வேறுபட்ட பணிகளையும், பங்களிப்புகளையும், வெவ்வேறு பார்வைகளில் ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகும். ஆனால், இங்கு சுருக்கமான நிலையிலேயே நோக்கப்பட்டிருக்கிறது.

இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சிருக்கும் வரை, அமரர் சோமகாந்தனின் நினைவுகளும் தொடரும் என்பது மட்டும் உண்மையாகும்.

Email this page Your Opinion Print this page
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'
இலக்கிய இதயங்களில் நிறைந்து நிற்கும் ஈழத்துச் சோமு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com