Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'
[28 - April - 2008] [Font Size - A - A - A]
* விடிவை நோக்கி.... என்ற தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுப் பேருரை

எஸ்.ஜே.வி. அவர்கள் சமஷ்டிக்காகப் போராடியவர். தமிழ் மக்களின் விடிவிற்காகப் போராடியவர். நாடு ஒன்றுபட்டு நிற்பதானால் சமஷ்டியே உரிய முறை அன்றேல் பிரிவதைத் தவிர எமக்கு வழியில்லை என்று பல முறை ஆணித்தரமாகக் கூறி வந்தவர். எமது நாடு பிரிவினையை நோக்கிப் போகின்றதோ சமஷ்டியை நோக்கிச் செல்கின்றதோ நான் அறியேன். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சி செலுத்திய காலத்தில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவன் என்ற முறையிலோ என்னவோ இந்த நாட்டைக் கூறு போட்டு எமக்கெனத் தனி ஒரு கூட்டமைத்து வாழ வேண்டும் என்ற வெறி ஏனோ என்னுள் இதுவரையில் உருவாகவில்லை. போதிய உச்சக் கட்டத் தன்னாட்சி கிடைத்தால் போதுமானது என்றே இன்று வரையில் நினைத்து வருகின்றது எனதுள்ளம். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள் 1926 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சமஷ்டியே சிறந்தது என்று கூறியதைப் பல தமிழ் மக்கள் பெருமையாகப் பிற் காலத்தில் குறிப்பிட்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், அவரின் அந்தக் கருத்துக்கு பலமான எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அன்றைய காலத் தமிழ் மக்களே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். முழு இலங்கையிலும் எமக்கு முக்கியத்துவம் கிடைக்கையில், வட கிழக்கு மூலையில் நாங்கள் ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று அன்று கேட்டவர்கள் தமிழர்களே. ஆங்கிலேய கால அரசு என்றென்றுந் தொடர்ந்திருக்கும் என்ற எண்ணமோ என்னமோ அவர்களை அன்று அப்படிச் சிந்திக்க வைத்தது. நாங்கள் வாழும் இடம், சூழல், வசதி போன்றவை எங்கள் நோக்குகளையும் கருத்துகளையும் முடிவுகளையும் பாதிக்க வல்லவை.

ஆனால், இன்று தமிழர் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் பிறந்து தமிழ்ச் சூழலில் வளர்ந்து சிங்கள மக்களை அந்நியர்களாகவும் அரக்கர்களாகவும் நினைக்கும் பாங்கு கொண்ட தமிழ் பேசும் மக்கள் பிரிவினை ஒன்றே எம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியென்று எப்பொழுதோ தீர்மானம் எடுத்திருக்கக் கூடும். அதற்கு தந்தை செல்வநாயகம் அவர்களின் அந்திம கால "அகற்சியே அடுத்த கட்டம்" என்ற அவரின் கருத்துரை ஆதாரமாக இருந்திருக்கக் கூடும்.

ஆகவே "விடிவை நோக்கி" என்ற தலையங்கத்தில் பேச வரும் என்னிடம் தந்தை செல்வா காலத்திற்கு வேண்டுமானால் உச்சக்கட்ட தன்னாட்சி அடிப்படையில் சமஷ்டி ஒரு தீர்வாக அமைந்திருக்கலாம். இன்று இவ்வளவும் பட்ட பின் சமஷ்டி ஒரு தீர்வாக அமையலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா என்று வினவலாம். அதுவுந் தலையங்கத்தை "விடிவை நோக்கி...." என்று வைத்துக் கொண்டதால் ஒரு தற்காலிகத் தங்குமிடம் பற்றிப் பேசவா வந்துள்ளீர்கள் என்று கூட நீங்கள் கேட்கலாம்.

எமது இலக்குகளையும் இலட்சியங்களையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினையே எங்கள் இலக்கு. சமஷ்டித் தீர்வு ஒரு தங்குமிடம் என்பது ஒரு நோக்கு. சமஷ்டியே எங்கள் இலக்கு. பிரிவினையே எமது பேரம் பேசும் ஆயுதம் என்பது இன்னொரு நோக்கு. இவற்றை விட இன்னுமொரு நோக்குடையவர்களும் உள்ளார்கள். தமிழர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டில் இருப்பார்களோ அவர்களைத் தமிழர்களாக வாழ விடுவார்களோ தெரியாது. நாங்கள் இருக்கப் போவது சில காலம். இருக்குங் காலத்தில் தந்திரமாய் அபகரிக்கக் கூடியதை அபகரித்து வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்வோம். இதற்காக எவன் காலடியில் விழுந்தாலும் பரவாயில்லை. எவனிடம் மரியாதை கெட்டாலும் பரவாயில்லை. எனது சுயநலமே முக்கியம் என்பது இவர்களின் நோக்கு. ஆகவே இன்று இந்த மூன்று நோக்குகளுக்குமிடையே இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் செய்வதறியாது மயங்கிக் கிடக்கின்றனர்.

ஒவ்வொரு நோக்கையும் முதலில் ஆராய்வோம். சுயநலமிகள் பற்றி முதல் வார்த்தை. கொழும்பை ஒட்டிய சில இடங்களில் பல தமிழர்கள் இன்று வாழ்கின்றார்கள். முக்கியமாக மலை நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் இவர்கள். இருக்கும் வரையில் இன்பமாய் வாழ்வோம். கிடைப்பதைச் சுருட்டி வைத்துக் கொள்வோம் என்ற எண்ணத்துடன் தமது பெயர்களைக் கத்திரித்து நடையுடை பாவனைகளை மாற்றி பெரும்பான்மையினராகத் தம்மைச் சித்திரித்து வாழ்கின்றார்கள். இவர்கள் படித்தது சிங்கள மொழிப் பாடசாலைகளில், கேட்பது சிங்கள மொழிச் சினிமா இசை. விஜேந்திரன் விஜேயாகவும், சோமகாந்தன் சோமேயாகவும், தர்மேந்திரன் தர்மேயாகவும் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில் தாமும் சிங்களவரே என்று நிரூபிக்கும் நடத்தையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டில் பெற்றோருடனும் தமது பாரியாருடனும் தமிழில் பேசினாலும் அவர்கள் குழந்தைகளும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தலைமுறை சிங்களமாகி அதற்கடுத்த தலைமுறை "துட்டகைமுனுக்கு ஜே!" என்று கொடி பிடிக்கும் என்று எதிர் பார்க்கலாம். கேட்டால் நல்ல தமிழ் மொழிப் பாடசாலைகள் இல்லை. எங்களைத் தமிழர்கள் என்று வெறுத்து ஒதுக்குகின்றார்கள். ஆகவே எம்மை மாற்றி அவர்களுடன் சேர்ந்து பொருளாதார விருத்தியைப் பெற்று வருகின்றோம். அதற்கு உங்களுக்கு என்னையா பிரச்சினை என்று கேட்காமல் கேட்கின்றார்கள். இன்று சிங்கள மக்களிடையே கூடத் தமிழர்க்கெதிராகப் போர்க் கொடி தூக்கும் பலரின் பூர்வீகம் இத்தகையதே. உதாரணமாக சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன் தர்மபால என்ற அரசனுக்கு மகுடஞ் சூட்ட உள்ளூரில் உரியவர்கள் இல்லை என்றதால் மதுரையில் இருந்து முனிவம்சத்துத் தமிழர்கள் பலர் கொண்டு வரப்பட்டார்கள். முடிசூட்டல் முடிந்ததும் நீங்கள் இங்கேயே எங்கள் பெண்களை மணந்து வாழலாமே உங்களுக்குக் காணிகள் பூமிகள் நான் தருகின்றேன் என்றார் அரசர். தேங்கி நின்று விட்டார்கள். அந்தச் சுத்த மதுரைத் தமிழர்கள். இன்று தமிழனைக் கொல்லு. தமிழனுக்கு உரித்துகள் கொடுக்காதே என்று கூறுவதில் முன்னிலையில் நிற்கும் பலரின் பூர்வீகம் இது தான்.

இங்கிலாந்தில் இருந்து ஒரு பையன் சுவீடன் நாட்டுக்கு வந்து அங்கு கல்வி கற்றான். ஆனால், படித்ததோ அவனின் தாய்மொழியில் அல்ல. வேறு மொழியில். வயது வந்த பின் அவன் சொன்ன வார்த்தைகள் பின்வருமாறு;

`ஒரு புதிய தாய்மொழி என் மீது திணிக்கப்பட்டது. எனது மொழி, எனது வரலாறு, எனது கலாசாரம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தது. எனது பாடசாலையும் கல்லூரியும் எனது பாரம்பரிய மொழிக்குப் பதிலாகப் புதியதொன்றை என்னுள் உட்புகுத்தியிருந்தன. நான் தற்பொழுது அந்த மொழியில் மிக்க தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனால், எனக்கு அந்நியனாக அமைந்திருந்ததொன்றிருந்தது. அது "நான்" தான். ஏமாற்றப்பட்டது போல் நான் உணர்ந்தேன்". "மொழிசார் மனித உரிமைகள் வேண்டும்" என்ற தலையங்கத்தில் சுவீடன் நாட்டு றொஸ்கில்ட் பல்கலைக்கழக ஆராச்சியாளர்களான டீ.ஸ்குண்ட்நாப் கங்கஸ் என்பவரும் ஆர்பிலிப்சன் என்பவரும் சேர்ந்து எழுதிய ஒரு கட்டுரையில் இதைப் படித்தேன். மொழிபோனால் முழுவதும் போய்விடும் என்ற கருத்துக்கு இந்த உண்மைக் கதை உதாரணமாக அமைகின்றது.

இன்று தமது வாழ்க்கை முறையை மேம்படுத்தலாம் என்ற வகையில் தமது பாரம்பரியத்தை இழக்கச் சிலர் முன் வந்துள்ளார்கள். கிடைக்காத ஒன்றிற்காகப் போராடுவதிலும் பார்க்கக் கிடைப்பதை வைத்துக் கொண்டு சொகுசாக வாழலாம் என்பது இந்தச் சுயநலமிகளின் நோக்கு. நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலான இடம்வாழ் பல தமிழ் மக்கள் இன்று தங்களைச் சிங்களவர்கள் என்று அடையாளம் காட்டுவது அவர்களின் முன்னோர்களின் அந்தச் சுயநலச் செய்கையின் நிமித்தமே.

புதுக்கடையில் அதாவது ஹல்வ்ஸ்டோர்ஃபில் சுமார் 35 வருடங்களுக்கு முன் என்னைப் போல சட்டத்தரணியாகத் தொழில் பார்த்த "பெர்னாண்டோ" என்ற பெயர் கொண்ட எனது நண்பர் ஒருவர் பலர் முன்னிலையில் தான் சிங்களவரே என்று அடையாளம் காட்டி விட்டுத் தனிமையில் இவ்வாறு கூறினார். விக்னேஷ்! இன்றைய அரசியல் சூழ்நிலை அவ்வாறு பேசவைத்தது. நீ என் நண்பன். உனக்கொன்று கூற விரும்புகின்றேன். எனது தாயாருக்கு இப்போது 86 வயது. இன்றுந் தமிழ் பைபிளையே வாசிக்கின்றார். தேவாலயத்தில் தமிழ் மொழி வழிபாடுகளிலேயே இன்றும் கலந்து கொள்கின்றார். எங்கள் பாரம்பரிய வீட்டு உறுதிகள் கூட இன்றும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன" என்றார். இவர்கள் தமக்குத் தாமே அந்நியர்களாக மாறிவிட்டார்கள்.

இதில் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும். இவர்களைச் சிங்களவர் என்று தமது நன்மைக்காக ஏற்றுக் கொள்ளும் பாரம்பரிய பௌத்த சிங்கள மேல்வர்க்க மக்கள் தனிமையில் பேசும் போது இவர்கள் முதலில் மதம் மாறினார்கள். இப்பொழுது இனம் மாறியுள்ளார்கள் என்று இளக்காரமாகக் கூறி அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்த கரையோரத் தமிழர்களே என்றுங் கூறுவார்கள்.

ஆகவே, சுயநலத்துடன் நாட்டின் அரசியல் பிரச்சினையை அணுகும் நபர்கள் காலக்கிரமத்தில் தம்மையுந் தங்கள் சமூகத்தையும் மிகுந்த தாழ்ந்த ஒரு நிலைக்கு இட்டுச் செல்லப் போகின்றார்கள் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள் இன அழிப்பில் ஈடுபட முன் இவர்கள் முந்திக் கொள்வார்கள் போலத் தெரிகின்றது.

அடுத்துப் பிரிவினை- சமஷ்டி இரண்டையும் பற்றி ஆராய்வோம்.

பிரிவினை பற்றி ஆராயும் போது மூன்று விடயங்கள் மனதில் நிலை நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டம் பிரிவினையை ஏற்கின்றதா? சர்வதேசக் குடும்பத்தைச் சேர்ந்த நாடுகள் பிரிவினையை ஏற்பனவா? பிரிந்து செல்லப் போகும் நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் பிரிவினையை வரவேற்பார்களா என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உண்டா? இக்கேள்விகளை மனதில் நிறுத்திக் கொண்டே ஆராய்வைத் தொடங்குவோம்.

சர்வதேச சட்டமும்/ பிரிவினையும்

நடைமுறையில் இருக்கும் ஒரு தன்னாதிக்கம் கொண்ட நாட்டின் எந்த ஒரு பகுதியும் சட்ட பூர்வமாக ஒரு பக்கம் பிரிந்து செல்லலாம் என்பதை சர்வதேசச் சட்டமானது ஏற்கவில்லை என்பது கண்கூடு. ஆனால், அதேநேரம் அவ்வாறு பிரிந்து செல்ல எந்த ஒரு உரித்தும் இல்லை என்று திடமாகக் கூறவும் சர்வதேசச் சட்டம் முன் வரவில்லை. இதை வைத்துப் பிரிந்து செல்லச் சர்வதேசச் சட்டம் தடை செய்யாததால் மறைமுகமாகப் பிரிந்து செல்வதைச் சர்வதேச சட்டம் ஏற்றுக் கொள்கின்றது என்று ஒரு சாரார் விவாதிப்பர். அதேநேரம், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் சுயநிர்ணய உரித்தை (The right of self determination) சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்வதால் பிரிந்து செல்லலையும் சர்வதேசச் சட்டம் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவர்கள் கருத்துத் தெரிவிப்பர். எனினும், பிரிந்து செல்லல் என்பது சர்வதேசச் சட்டத்தால் இதுவரை நேரடியாக ஏற்கப்பட்டதொன்றல்ல. ஏற்காமைக்குக் காரணம் பிரிந்து செல்லலுக்கான அடிப்படை சந்தர்ப்ப சூழ்நிலைகளை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது போகும் என்பதும் அப்படி வரையறுக்கப்பட்டாலும் அதன் பின் அது நிரூபிக்கப்பட முடியாமற் போகும் என்பதுமான தயக்கமே.

அதாவது ஆக்கிரமித்திருக்கும் நாடொன்றினால் அல்லது அந்நாட்டின் அரசாங்கங்களினால் நியாயமற்ற நிலையில் அந்நாட்டின் ஒரு பகுதியினர் நடத்தப்படுவதாகவோ அல்லது தம் நாட்டில் ஆக்கிரமிப்புக்கு அல்லது அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் நியாயமற்ற குரூரமான முறையில் தம் நாட்டிலேயே நடத்தப்படுவதாகவோ நிரூபிப்பது மிகக் கடினமாக இருக்கும் என்பதாலேயே பிரிந்து செல்லலை சர்வதேசச் சட்டம் ஏற்கவில்லை என்ற கருத்துக்கு இதனை அடிப்படைக் காரணமாக சட்ட நிபுணர்களின் ஒரு சாரார் எடுத்துக் காட்டுகின்றனர். நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டின் இறைமையை சர்வதேசச் சட்டம் மிக முக்கியமானதொன்றாகக் கருதுகின்றது. ஆகவே, பிரிந்து செல்லலோ சேர்ந்திருப்பதோ அந்தந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேசச் சட்டம் கருதுவதாக 1963 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட "சர்வதேசச் சட்டத்தில் நிலப்பகுதி கையேற்பு" (The acquisition of territory in International Law) என்ற நூலில் ஆ.வை.ஜெனிங்ஸ் அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார். (பக்கம் 8-9) பக்கம் பிரிந்து செல்லலானது நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணாக இருக்கும் இடத்தில் சர்வதேசச் சட்டமானது அந்நாட்டின் அந்த யாப்பின் கொள்கையையே ஏற்கும் என்று கூறவேண்டும். அதாவது பிரிவதை அரசியல் யாப்பு மிகக் காரசாரமான முறையில் தடை செய்யாவிடில் அது வேறு விடயம். ஆனால், தடை செய்யுமிடத்து எமக்கிருக்கும் அவசரங்கள், அவலங்கள், அபிலாஷைகள் அனைத்தையும் நாம் வாழும் நாட்டின் யாப்புச் சட்ட அதிகார வரம்பை முன்வைத்தே சர்வதேசச் சட்டம் நோக்குகின்றது. அந்த நோக்கை நாங்கள் பிழையென்று புறக்கணிக்கவும் முடியாது. 18 வருடங்கள் நடைமுறையில் இருந்த வடக்குக் கிழக்கு இணைப்பு சட்டத்தால் பிரிக்கப்பட்டது. அதற்கு சட்டத்தில் இடமிருந்தது எனப்பட்டது. ஆனால்,

(தொடரும்)

Email this page Your Opinion Print this page
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'
இலக்கிய இதயங்களில் நிறைந்து நிற்கும் ஈழத்துச் சோமு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com