மனிதச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டுவருகின்ற காலநிலை மாற்றம் தொடர்பில் உலகளாவியரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்படுகின்றமைக்காக அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி அல்கோருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் அரசுகளுக்கு இடையிலான குழுவுக்கும் கடந்தவருடத்தைய நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டது. பூமி வெப்பமடைவதைப் பற்றி நீண்ட ஆய்வை மேற்கொள்வதற்காக 20 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட இக்குழுவின் நூறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 விஞ்ஞானிகள் அங்கம் வகித்துவருகிறார்கள். குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி ராஜேந்திர கே.பச்சோரி பதவிவகிக்கிறார். கடந்த டிசம்பரில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அல்கோருடன் இணைந்து பச்சோரி தனது தலைமையிலான ஐ.நா.குழுவின் சார்பில் நோபல் சமாதானப் பரிசை பெற்றுக் கொண்டார். இவர் அண்மையில் இந்தியர்களுக்குக் கூறிய ஒரு ஆலோசனை எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது.
இந்தியாவின் வெப்பநிலை வேகமாக அதிகரித்துவருவதைத் தடுக்கும் ஒருவழிவகையாக இனிமேல் இந்தியர்கள் கார்களில் பயணம் செய்வதை பெருமளவுக்கு தவிர்த்து பஸ்களில் செல்ல வேண்டும். அவ்வாறு பஸ்களில் பயணம் செய்தால் நாட்டுக்கு நல்லது என்று கலாநிதி பச்சோரி ஆலோசனை தெரிவித்திருக்கிறார். பச்சோரியின் ஆலோசனையை வெறுமனே இந்தியர்களுக்கானது என்று மெத்தனமாக நோக்காமல் நாமும் அதில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். உலக அளவில் வளிமண்டலத்தில் கரியமிலவாயு அதிகரித்துவருவதால் பூமிவெப்பமடைந்து மனித குலத்துக்கும் உயிரினங்களுக்கும் பாரிய தீங்கு ஏற்படக்கூடிய ஆபத்து தோன்றியிருப்பதால் அதைப்பற்றிய விழிப்புணர்வை உலகில் மக்கள் மத்தியில் ஏற்படுத்த பல வருடங்களாக முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பசுமை இல்லத்தாக்க வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்ற கரியமிலவாயு (காபனீரொக்சைட்), மீதேன் மற்றும் நைத்ரஸ் ஒக்ஸைட் ஆகியவை கடந்த 6500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்றில் இப்போது கலந்திருக்கின்றன. இவை பெரும் படலமாகப் பூமியைச் சூழ்ந்துள்ளன. வளிமண்டலத்தில் இருந்து வெளியேற வேண்டிய அதிகப்படியான வெப்பத்தை இந்தப்படலம் தடுத்துநிற்கிறது.
இதன் விளைவாக பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே போகிறது. பூமியின் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் மிகவேகமாக உருகும், கடல்மட்டம் உயரும், பருவகாலம் அதன் சுழற்சியின் சமச்சீர்த்தன்மையை இழந்துபோகும் என்றெல்லாம் பல வருடங்களாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து வந்திருக்கிறார்கள். இந்தமாற்றங்கள் எல்லாமே நம் கண்ணெதிரே நடந்து வருகின்றன. பருவம் முழுவதும் பொழிய வேண்டிய மழை ஓரிருவாரங்களில் அல்லது மாதங்களில் மொத்தமாகப் பொழிந்து பின்னர் முழுவதுமாக தன்னை விலக்கிக் கொள்கிறது. இந்தமழையால் எமக்கு எந்தப் பயனுமே கிடையாது. நமக்கு பயன் தராத மழை நகரவீதிகளில் வெள்ளக் காடாக தேங்கிநிற்கிறது. இதற்கு ஒருபடிமேலே போய் கிராமங்களில் பருவம் தப்பிய மழையால் தாக்குப் பிடிக்க முடியாமல் பயிர்கள் நாசமாகின்றன. தாவரங்கள், விலங்குகள் பாதிக்கப்படுவதோடு மனித சமுதாயமும் பாதிப்புக்குள்ளாகி தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பு பெரும் சூறாவளி, வெள்ளப் பெருக்கு மற்றும் கொடிய வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களைத் தோற்றுவிக்கப் போகிறது என்றும் 2100 ஆம் ஆண்டளவில் பெரும் எண்ணிக்கையான உயிரினவகைகள் அழிந்துவிடப் போகின்றன என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். உலகின் பல பிராந்தியங்களில் ஏற்கெனவே காணப்படக்கூடியதாக இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் புவிவெப்பமடைதலின் விளைவேயாகும்.
பூமி வெப்பமடைதல் மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்தத் தவறல்ல. உலகில் அதிகரித்துநிற்கும் கைத்தொழில்மய நிகழ்வுகள்தான் இதற்குக் காரணம். உற்பத்தி, சந்தை, விற்பனை என்று எதையுமே பணம் பண்ணும் ஒரு கலையில் கைதேர்ந்த கைத்தொழில்மயமே பூமி வெப்பமடைவதற்கு முழுமுதற்காரணமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகள் மீதும் கார்கள் மற்றும் நவீனத்துவத்தின் மீதும் இருக்கின்ற அக்கறையும் அதீத பாசமும் மனிதர்கள் மீது இல்லாமல் போய் விட்டது. உலகில் வாழுகின்ற குழந்தைகளின் வாழ்வை நிர்மூலம் செய்யும் முயற்சிகளை நாம் செய்யலாமா? அந்தக் குழந்தைகளுக்கு நாமெல்லோரும் விட்டுச் செல்லப்போவது அனர்த்தத்தை விளைவிக்கக்கூடிய சுற்றுச் சூழலைத்தானா? வருங்காலச் சந்ததியினருக்கும் எதிர்காலம் உண்டு என்பதை மறந்து செயற்படலாமா? புவிவெப்பமடைதலைத் தடுப்பதற்கு எம்மாலியன்ற பங்களிப்பைச் செய்வது மனித குலத்துக்கான எமது கடமை என்பதை ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பம்தான் பூமிவெப்பமடைதலைத் தடுப்பதற்கு இருக்கக்கூடிய தீர்வு என்பதை உணர்த்துவதற்காகவே கலாநிதி பச்சோரி கார்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். பஸ்களில் பயணம் செய்வது, சூரிய ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்துவது, குறைந்தளவு கரியமில வாயுவை வெளியிடக்கூடிய மாற்று எரிபொருள் வளங்களை ஊக்குவிப்பது, கரியமிலவாயுவை குறைந்தளவு வெளியிடக் கூடிய வாகனங்களை உருவாக்குவதுதான் சிறந்தவழிமுறைகள் என்று பச்சோரி கூறுகிறார். எமது நலன்களையும் எதிர்காலச் சந்ததியின் நலன்களையும் மையப்படுத்தி இந்த ஆலோசனைகளைப் பின்பற்ற நாம் மனம்வைத்தால் மாத்திரமே அழிவில் இருந்து எம்மையும் உலகையும் காப்பாற்றமுடியும்.