அமெரிக்காவும் பிரிட்டனும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்துள்ளது போல் நடந்து கொள்வதுடன், அரசை நிர்மூலமாக்கி அவர்களது கொள்கைகளை எங்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றன என அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கார்சாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இதில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் என்று கூறி அப்பாவிகளை கைது செய்வதை அமெரிக்கப் படைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தலிபான்களைத் தேடுவதாகக் கூறி மக்களை துன்புறுத்தி வருகிறது அமெரிக்கா.
தலிபான்களும், அல்-ஹைடா தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் தான் உள்ளனர். தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான் கிராமங்களை அமெரிக்கப் படைகள் சேதப்படுத்தி வருகிறது. உண்மையான தலிபான்கள் கிராமங்களில் இல்லை. அவர்கள் பாகிஸ்தானில்தான் பதுங்கியுள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அமெரிக்கப் படைகளால் நெருங்கவே முடியவில்லை. தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி பாகிஸ்தானில் அமைதியைத் தேட வைத்து விட்டது அமெரிக்கா. அடுத்ததாக ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறி தனது வேலையை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.