சிம்பாப்வேயில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் கட்சி தோல்வியடைந்தமை, மறுவாக்கு எண்ணிக்கையிலும் உறுதியாகியுள்ளது.
23 ஆசனங்களுக்காக நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கையில் 18 ஆசனங்களுக்கான முடிவுகளில் எவ்வித மாற்றமுமில்லையென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி, பாராளுமன்ற, செனட் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அங்கு ஒரே சமயத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் முகாபேயின் ஷானு - பி.எவ். கட்சி 97 ஆசனங்களையும் ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்னும் எதிர்க்கட்சி 99 ஆசனங்களையும் கைப்பற்றின.
இதனால் 1980 இற்குப் பின்னர் முதற் தடவையாக முகாபேயின் கட்சி பெரும்பான்மைப் பலத்தை இழந்தது.
வெற்றி பெறுவதற்கு 9 ஆசனங்கள் தேவையென்ற நிலையிலுள்ள ஆளுங்கட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கையிலும் சாதகமான முடிவுகள் கிடைக்காமையினால் 28 வருடங்களின் பின்னர் அது தோல்வியடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் இதிலும் தமது கட்சியே வெற்றி பெற்றிருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.மறுவாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்படவிருப்பதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.