நெல் ஆலை முதலாளிமார் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லைத் தமது களஞ்சிய சாலைகளின்றி நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகளின் வீடுகளிலும் அவர்களின் களஞ்சிய அறைகளிலும் பதுக்கி வைத்திருப்பதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாம் முதலாளிமார்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகி தமது வீடுகளிலும் தமது உறவினர்களது வீடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட நெல்லைக் களஞ்சியப் படுத்த நெல் ஆலை முதலாளிகளுக்கு விவசாயிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
நெல் ஆலை முதலாளிமார் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் நெல்லை விவசாயிகளிடமே களஞ்சியப் படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் நெல்லைப் பதுக்கும் நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் விவசாயிகளின் வீடுகளைப் பரிசோதிக்க வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் அவை தமது வயல்களில் விளைந்த நெல் எனவும் அதனை தமது வீட்டில் களஞ்சியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு விவசாயிகளுக்கு ஆரம்பச் செலவுகளையும் வழங்கி அதன் பின்னர் அறுவடை செலவுகளையும் நெல் ஆலை முதலாளிகள் வழங்கிவருகின்றனர்.
அவர்களது வேறு செலவிற்கென கடனாகவும் பணம் கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் நெல்ஆலை முதலாளிமாருக்கு பதுக்கல் விடயத்தில் ஒத்துழைத்தல் என்பது தவிர்க்க முடியாததெனவும் கூறப்படுகிறது.
இதே வேளையில் தம்புள்ள பிரதேசத்து நெல் ஆலை உரிமையாளர்கள் தமது களஞ்சியசாலைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான நெல் மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தமையை நுகர்வோர் பாதுகாப்புக் குழுவினர் பாதுகாப்புப் படையினர் சிலரின் ஒத்துழைப்புடன் அண்மையில் கண்டறிந்தனர்.
குறித்த நெல் மூடைகளை அரிசியாக்கி இரண்டு மாதகாலத்தினுள் விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டமையும், நிபந்தனை விதிக்கப்பட்டு ஆலை உரிமையாளர்கள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.