* பஷீர் சேகுதாவூத்
இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கை முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனமாகும். அதனை தமிழர்களில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர். அதே போன்று மற்றுமொரு பகுதியினர் ஏற்றுக்கொண்டனர். இதேபோன்றுதான் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் எதிர்த்தனர் மற்றும் சிலர் ஏற்றுக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணத்தில் கொள்கை ரீதியாக எதிர்த்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் அத்தேர்தலில் போட்டி இட்டது. இதே அடிப்படையில் தான் சிங்கள பேரினவாத சக்திகளின் தூண்டுதலில் நீதித்துறையால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையும் கொள்கை ரீதியில் நிராகரித்துவிட்டு இத்தேர்தலை முஸ்லிம் மாகாணத்திற்கான முதற்படியாகக் கொண்டு போட்டி இடுகின்றோம் என ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான பஷீர்சேகுதாவூத் தெரிவித்தார்.
சனிக்கிழமை அட்டாளைச் சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் எழுச்சி விஷேடபேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
`தனித்தனியாக இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட பொழுது முஸ்லிம்களின் விகிதாசாரம் 33% வீதத்திலிருந்து 17% வீதமாக குறைக்கப்பட்டது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் அஷ்ரப் பின் கனவு நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபையாகும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் நாம் சொல்கின்றோம், இணைந்த வடகிழக்கு நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபை எமதுகனவு.
இதில் எந்தவித மாற்றமும் கிடையாது கொள்கை ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில் கொள்கையை வெற்றி கொள்வதற்காகத்தான் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசின் கெடுபிடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் போட்டி இடுகிறது.
தமிழர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்றைய தேர்தலிலும் போட்டியிடவில்லை இன்றும் போட்டி இடவில்லை. அவர்களிடம் இராணுவ ரீதியான கட்டமைப்பு உண்டு அதைவைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறுகின்றார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஆயுதம் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கிதான். இதனை வைத்துக்கொண்டு தாம் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சக்தியை ஒன்றுபடுத்தி இதனை இந்நாட்டு அரசுக்கும் உலகத்திற்கும் காட்டுகின்றோம். கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் மாகாணம் அல்ல. ஆனால், முஸ்லிம்களுக்கென ஒரு மாகாணத்தை தேடவேண்டுமானால் அதனை கிழக்கில் தான் தேட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸையும் வேறுகட்சிகளையும் உடைத்து அதில் குளிர்காயும் இவ்வரசு கிழக்கு மாகாணத்தை விடுவித்த கையோடு கிழக்கில் என்ன செய்யப்போகின்றது என்று அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் நாம் முகர்ந்து முகர்ந்து பின் தொடர்ந்தோம்.
அடுத்து என்ன நடக்கப்போகின்றது. என்று எமக்கு நான்கு தெரியும். தேர்தல்கள் முக்கியமல்ல, தேர்தலின் பின்னணியில் உள்ள அரசின் திட்டங்கள் தான் எமக்கு முக்கியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களையும் வெல்ல முடியாது என்று எமக்குத் நன்கு தெரியும். தெரிந்து கொண்டே போட்டி இட்டோம்.
அரசின் திட்டம் என்னவென்றால், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரி.எம்.வி.பி.யையும் சேர்த்துக் கொண்டு இதில் வெற்றி பெற்று இதனை நாம் கைப்பற்றி விட்டோம் என்று இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டிய தேவை இருந்தது. இதற்கு நாம் அடிமையாகவில்லை.
சூது, கள்ளத்தனம் என்பவற்றோடு போட்டிக்கு ஆட்கள் இல்லாதநிலையில், அரசு அங்கு வெற்றி பெற்றது. இதன் வெற்றியை நாடிபிடித்து கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலையும் வைத்து அதிலும் வெற்றி பெறவேண்டும் என அரசு நினைத்தது. இதில் அரசு வெற்றி பெறவேண்டுமானால், முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் அரசுடன் இணைதுக் கொள்ள வேண்டும் என அரசு திட்டமிட்டது. இதற்கான பதவி, பணம் என்பவற்றை பயன்படுத்தி எம்மை அடிமைப்படுத்தலம் என்று எண்ணினார்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இவர்களுக்கு அடிமைப்படுகின்ற ஒன்றல்ல என்பதை மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு எடுத்துச் சொன்னது.
நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற அதிகாரம், இராணுவ அதிகாரம் என்பவற்றியெல்லாம் பயன்படுத்தி பயமுறுத்தாலாம் என நினைத்தார்கள் அது முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் அரசிலிருந்து விலகி இருக்கின்றோம். எமது காணிகள் பேரினவாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது.சிங்கள பேரினவாதங்களின் கைகளில் மகிந்த அரசு சிக்கித்தவிக்கிறது. இவர்களது சதித்திட்டங்களை முறியடிப்பதற்காகவே நாம் ஐ. தே. கட்சியுடன் போட்டி இடுகின்றோம். நாம் முன்வைத்த பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சியுடன் போட்டியிடாமல் வேறு யாருடன் சேர்ந்து போட்டி இடுவது' எனவும் அவர் தெரிவித்தார்.