* பொலிஸ்மா அதிபர் தலைமையில் விரிவாக ஆராய்வு
பயணிகள் பஸ்கள் மீதான குண்டுத்தாக்குதல்களை தடுப்பது குறித்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸ்மா அதிபர் தலைமையில் உயர்மட்ட மாநாடொன்று நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிலியந்தலை பஸ்நிலையத்தில் இ.போ.ச. பஸ்ஸினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தநிலையில் பயணிகள் பஸ்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அவசர பணிப்புரை விடுத்திருந்தது.
இதற்கமைய சனிக்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தலைமையில் உயர்மட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பயணிகள் பஸ்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
புதிய பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தும் விதத்தில் இ.போ.ச. மற்றும் தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், பிலியந்தலை பஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக பொலிஸ் குழுக்களின் விசாரணைகள் தொடர்கின்றன.
பஸ் சாரதிக்கு பின்புறமாக 3 ஆவது ஆசனத்தின் மேல் தட்டிலேயே குண்டு வைக்கப்பட்டுள்ளது. குண்டினுள் போல்ஸ் குண்டுகள் இருந்ததால் இழப்புகள் அதிகரித்ததாக இரசாயன பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ் புறப்படுவதற்குசில நிமிடத்திற்கு முன்பே குண்டு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருக்கலாமெனவும் குண்டைவைத்தவர் பஸ்புறப்பட முன் பஸ்ஸிலிருந்து எதுவித சந்தேகமுமின்றி இறங்கிச் சென்றிருக்கலாமெனவும் பொலிஸார் கருதுகின்றனர்.