உணவுப் பொருள் பற்றாக்குறையாலும் அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலை அதிகரிப்பாலும் இலங்கையில் 10 இலட்சம் பேர் கடுமையான பஞ்சத்தை எதிர்நோக்குவதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்திருக்கிறது.
உள்நாட்டு யுத்தத்தால் 10 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உலக உணவுத் திட்டத்தின் நிவாரணத்திலேயே தங்கியிருக்கின்றனர். இவர்களில் அநேகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களும் அண்மையில் மீளக்குடியேற்றப்பட்டவர்களுமாவார். தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதிகளில் இவர்கள் இடம்பெயர்ந்தும் மீளக்குடியமர்த்தப்பட்டும் உள்ளனர் என்று உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி முகமட் சாலிகீன் தெரிவித்திருக்கிறார்.
2008 இற்கான எமது நடவடிக்கைகளுக்காக 64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உணவு விநியோகத்திற்கான செலவினம் 50 சதவீதத்தால் அதிகரித்துவிட்டது. இதனால் கொழும்பிலுள்ள உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.
உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மேலும் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. இந்தப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. முழு உலகுமே இத்தகைய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு உலக உணவுத் திட்ட வதிவிட பிரதிநிதி முகமட் சாலிகீன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளடங்கலாக, வடபகுதிக்கு 9200 தொன் உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 6 ஆயிரம் தொன் பொருட்களையே எம்மால் அனுப்ப முடிகிறது. தற்போதைய நெருக்கடி தொடருமானால் எமது நடவடிக்கைகளுக்கு சிக்கல்கள் ஏற்படும்.
உலக உணவுத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் நேரடியாகப் பாதிப்புக்குள்ளாவார்கள். ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காவிடின் மோசமான பாதிப்புக்கு அவர்கள் உள்ளாவார்கள். போஷாக்கின்மையின் தாக்கம் உடனடியாக தெரியவராவிடினும் ஓரிரு வருடங்களில் அதன் பாதிப்பு வெளிவரும்.
உதவி வழங்கும் நாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் இது தொடர்பாக நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்தப் பிரச்சினையின் பாரதூரத் தன்மையை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்யுமாறும் நாம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதேநேரம் உணவுப் பொருட்களுக்கு உத்தரவாத விலையை இலங்கை அரசாங்கம் அறிவித்ததை நாம் வரவேற்கிறோம். மக்களின் வருமானம் அதிகரிக்கப்படாவிடின் செலவினம் 50 சதவீதத்தால் அதிகரிக்கும். அதனால் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு ஒரே வழியாக விவசாயத்துறையை மேம்படுத்தி சுயதேவையைப் பூர்த்தி செய்வதே காணப்படுகிறது. இந்த நாட்டுக்கு இது சாத்தியமானதாகும். ஏனெனில் மண் வளமும் நீர் வளமும் இங்கு தேவையான அளவுக்கு உள்ளது. அத்துடன் விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாய விலையில் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்றும் சாலிகீன் தெரிவித்துள்ளார்.