* படைத்தரப்பு தெரிவிப்பு
மணலாறு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் மற்றும் ஷெல் தாக்குதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டதுடன், 45 படையினர் வரை படுகாயமடைந்துள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 35 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் மணலாறு பகுதியில் சனிக்கிழமை காலை படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியொன்றைத் தாங்கள் முறியடித்துள்ளதாகவும் படையினருக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
மணலாறில் எத்தவெட்டுனுவெவ, ஆண்டான்குளம் மற்றும் ஜனகபுர பகுதிகளிலேயே சனிக்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
இதன்போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் ஷெல் தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 45 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த படையினர், ஆண்டான்குளம் பகுதியில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இராணுவச் சிப்பாயொருவர் காணாமல்போயுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இரு தரப்பும் நீண்டநேரம் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதேநேரம், மணலாறு பகுதியில் சனிக்கிழமை காலை படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியொன்றை மேற்கொண்டதாகவும் அதற்கெதிராக நீண்டநேரம் தாங்கள் கடும் பதில் தாக்குதலை நடத்தியதில் பல படையினர் கொல்லப்பட பெருமளவானோர் காயமடையவே இந்தப் படைநகர்வு முயற்சி கைவிடப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத் தாக்குதல்
அன்று மாலை 5 மணியளவில் விமானப் படை விமானங்கள் மணலாறுக்கு வடக்கே புலிகளின் ஆட்லறி நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்தியதாக விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்தார்.